கே.ஜி. வலசு பகுதியில் சாதி ஆதிக்கவாதிகள் மிரட்டலை முறியடித்து கழகக் கூட்டம்

ஆதிக்க சக்திகளின் கடுமையான எதிர்ப்பு களுக்கும் வதந்திகளுக்கும் மத்தியில் ஏராளமான பொது மக்கள் திரளுடன் நடைபெற்றது பெரியாரியல் பொதுக் கூட்டம்.

4.8.2012 சனிக் கிழமை மாலை 6 மணிக்கு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கே.ஜி. வலசு பகுதியில், ஈரோடு பகுத்தறிவாளர் பேரவை சார்பாக பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

வழக்கமாக மற்ற கட்சிகள் பொதுக் கூட்டம் நடைபெறும் இடமான கே.ஜி. வலசு நால்ரோடு பகுதியை தேர்வு செய்த நமது தோழர்கள், காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டு கூட்டத்திற்கான விளம்பரங்களையும் செய்திருந்தனர். ஆனால், இந்த இயக்கத்தை இப்பகுதியில் காலூன்ற விட்டால் தமது மேலாதிக்க தன்மை போய்விடும் என்று கருதிய, அப்பகுதியிலுள்ள ஜாதி ஆதிக்கவாதிகள் சிலர், கூட்டம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, காவல் நிலையத்தில்  கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நமது தோழர்களும் மாற்று இடத்தில் அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள மதுரை வீரன் கோவில் அருகில்) கூட்டம் நடத்திக் கொள்ள ஒப்புதல் தெரிவித்தனர்.

ஆனாலும், விடாத ஜாதி ஆதிக்கவாதிகள் இக்கூட்டத்தை எங்கும் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், இறுதியாக தேர்வு செய்த இடத்தின் அருகிலுள்ள மதுரை வீரன் கோவிலை காரணம் காட்டி, அந்த கோவிலுக்கும் அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து மிரட்டி, ஊருக்கு 1 கி.மீ. தூரம் உள்ள நிலையிலும், உங்களின் கோவிலுக்கு அருகில் கூட்டம் நடத்த நீங்கள் அனுமதிக்கக் கூடாது; மீறி அனுமதித்தால் நீங்கள் மதுரை வீரன் கோவிலுக்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் மதுரை வீரன் கோவில் எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் உள்ளது என்று அந்த மக்களை மிரட்டியுள்ளனர். மேலும் அந்தப் பகுதி (வடுக பாளையம்) தோழர்கள் சிலர், நாம் அண்மையில் வெள்ளோடு பகுதியில் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சமீபத்தில் கழகத்தில் இணைந்தவர்கள். இவர்களின் பெயர்கள் கே.ஜி. வலசு பொதுக் கூட்ட துண்டறிக்கையில் போடப்பட் டிருந்தது. பெயர் போடப்பட்ட தோழர்களின் பெற்றோர்களிடம் சென்ற ஆதிக்கவாதிகள், இவ்வாறு பெரியார் இயக்க துண்டறிக்கையில் பெயர் போட்டால் உங்கள் பிள்ளைகளை காவல்துறை கைது செய்துவிடும். மேலும் அவர்களின்  வேலைகள் பறிக்கப்பட்டுவிடும் என்று பொய்யான தகவல்களை சொல்லி பயமுறுத்தியதோடு, இந்தக் கூட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட சொல்லுங்கள் என்றும் சொல்லியுள்ளனர். பயந்துபோன பெற் றோர்கள் அவ்வாறு தங்கள் பிள்ளைகளை வலியுறுத்தியும் அந்த தோழர்கள் அவ்வாறு எழுதிக் கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே தோழர்களின் பெற்றோர்களும் காவல் நிலையம் சென்று எதிர்ப்பு தெரிவிக்க ஆதிக்க சக்திகளால் தூண்டிவிடப் பட்டனர்.

கூட்டத்திற்கு முதல் நாள் காவல் நிலையத்தில் மீண்டும் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் சென்னிமலை காவல் துறையினர் மிகவும் நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொண்டனர். இந்த பெரியார் இயக்கத்தைப் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும். சில மாதங்களுக்கு முன்பு சென்னிமலையில் காவல் நிலையம் முன்பே ‘நாத்திகர் விழா’ பொதுக் கூட்டம் யாருக்கும் இடையூறு இல்லாமல் நடத்தினர். எல்லோருக்கும் கூட்டம் நடத்தும் உரிமை இருக்கிறது. எனவே நீங்கள் ஒத்துழைப்புக் கொடுங்கள். நாங்களும் பாதுகாப்புக்கு வருகிறோம் என்று பக்குவமான முறையில் பேசி சம்மதிக்க வைத்தனர்.

ஆனாலும், அப்போதும் ஆத்திரம் தீராத ஜாதி ஆதிக்கவாதிகள், கூட்டத்திற்கு முன்னிலை வகிக்க இருந்த ஊராட்சி மன்றத் தலைவர் இரவி அவர்களை கூட்டத்திற்கு வரவிடாமல் தடுத்ததோடு, வடுகபாளையம் பகுதி மக்களையும் மிரட்டி ஒருவரைகூட வரவிடாமல் தடுத்துவிட்டனர். இவ்வாறாக எழுந்த தொடர் எதிர்ப்புகளே நமக்கு ஒரு இலவச விளம்பரத்தையும், கூட்டம் பற்றிய ஒரு எதிர்பார்ப்பையும் தூண்டிவிட்டது.

மேலும் மூன்று நாட்களாக நமது கழகத் தோழர்கள் பகுத்தறிவு பேரவை சிவக்குமார், செல்வராசு, செல்லப்பன், இசைக் கதிர், கார்த்திகேயன், மூர்த்தி, வெங்கட், இரமேசு மற்றும் இளம்பிள்ளை சந்திரசேகர் ஆகியோரின் தொடர் வாகனப் பரப்புரை காரணமாகவும், சேலம் கோகுலக் கண்ணனின் தெருமுனை ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியிலும் ஈர்க்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டிருந்தனர்.

பரபரப்போடும், எதிர்பார்ப்போடும் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்திற்கு செ. சசிக்குமார் தலைமையேற்றார். இரமேசு வரவேற்புரை யாற்றினார். பகுத்தறிவாளர் பேரவை பெ.சே. மோகன்ராசு முன்னிலை வகித்தார். நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி மதுமிதா, தந்தை பெரியார் பற்றி உரையாற்றிய விதம் அனைவரையும் கவர்ந்தது. ‘அவர் தாம் பெரியார்’ என்ற தலைப்பிலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி காயத்ரி கவிதை நடையிலும் உரையாற்றினர். மேலும் செல்லப்பன், பகுத்தறி வாளர் பேரவை சிவக்குமார், ஈரோடு

ப. இரத்தின சாமி, மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன் ஆகியோரும் உரையாற்றினர்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலும், பேச்சாளர்களின் இடையிடையேயும், சிற்பி இராசன் அவர்களின் மந்திரமல்ல, தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மனுதர்மம் பற்றியும் அது உழைக்கும் மக்களை தாழ்வுபடுத்துவது பற்றியும், பார்ப்பனர்களின் சூழ்ச்சிக் குறித்தும் விரிவாக உரையாற்றினார். கூட்டத்தின் நிறைவாக ந. அழகன் நன்றி கூறினார்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சசிக்குமார் தலைமையிலான கருங்கவுண்டன் வலசு தோழர்கள் தங்கராசு, வீ. தங்கராசு, தவமணி, ராமசாமி, லட்சுமணன், கோபி ஆகியோர் செய்திருந்தனர்.

பெரியார் முழக்கம் 30082012 இதழ்

You may also like...