தூக்குத் தண்டனை; சில தகவல்கள்
உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மரண தண்டனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று, 2007, 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அய்.நா.வின் பொதுச் சபை தீர்மானம் வலியுறுத்தியது. நடப்பு ஆண்டிலும் இதே போன்ற தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2007 ஆம் ஆண்டு அய்.நா. முதலில் இத் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது 104 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 54 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 29 நாடுகள் விலகி நின்றன. அடுத்த ஆண்டில் மேலும் 2 நாடுகள் கூடுதலாக வாக்களித்தன. எதிர்க்கும் நாடுகள் எண்ணிக்கை 54லிருந்து 46 ஆக குறைந்தது. விலகி நின்ற நாடுகள் 34 ஆக உயர்ந்தது. மீண்டும் 2010 இல் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்தபோது,
109 நாடுகள் ஆதரவாகவும், 41 நாடுகள் எதிர்ப்பாகவும் ஓட்டளித்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் பங்களிக்காமல் விலகி நின்றன.
1945 இல் அய்.நா. சபை உருவானபோது 8 நாடுகள் மட்டுமே தூக்குத் தண்டனையை முழுமையாக ஒழித்திருந்தன. 2012 ஜூன் மாத நிலவரப்படி, உலகின் மூன்றில் இரண்டு பங்கான 141 நாடுகள் சட்டப்படியோ, அல்லது நடைமுறையிலோ தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. 1977 ஆம் ஆண்டு ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷன்’ என்னும் மனித உரிமை அமைப்பு, தூக்குத் தண்டனைக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கிய பிறகு 18 நாடுகள் மட்டுமே, மரணதண்டiயை ஒழிக்க முன் வந்தன. கடந்த 30 ஆண்டுகளில்தான் பெரும் எண்ணிக்கையில் தூக்குத் தண்டனையை ஒழிக்க நாடுகள் முன் வந்தன.
அய்ரோப்பா முழுதும் (பெலாரஸ் என்ற நாட்டைத் தவிர) தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. சில கரீபியன் நாடுகளும் அமெரிக்காவும் தூக்குத் தண்டனையை வைத்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில்கூட 16 மாநிலங்கள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. ஒரு மாநிலம் நடைமுறையில் நிறுத்தி வைத்துள்ளது. ஆப்பிரிக்காவில் 38 நாடுகளில் தூக்குத் தண்டனை சட்டரீதியாகவோ அல்லது நடைமுறையிலோ ஒழிக்கப்பட்டு விட்டது. மத்திய ஆசியா மற்றும் பசிபிக் மண்டலங்களிலும் தூக்குத் தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
தூக்குத் தண்டனையை அனுமதித்துள்ள நாடுகள்கூட அதிகமாக தூக்குத் தண்டனையை அளிப்பதில்லை. 2011 இல் தூக்குத் தண்டனையை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளில் 21 நாடுகளில் மட்டுமே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த அய்ந்து ஆண்டுகளில் இந்த நாடுகளில் தூக்கில் போடப்பட்டவர் எண்ணிக்கை 25-அய் தாண்டவில்லை.
இந்தியாவில் தூக்குத் தண்டனை சட்டத்தில் இடம் பெற்றுள்ளது என்றாலும், அபூர்வமாகவே நிறைவேற்றப்படுகிறது. 2004 ஆகஸ்டில் கடைசியாக தனஞ்செய் சட்டர்ஜி தூக்கில் போடப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளில் தூக்கிலிடப்பட்ட ஒரே நபர் இவர்தான். ‘சுதந்திரம்’ கிடைத்தவுடன், இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 150 பேர் தூக்கிலிடப்பட்டனர். 1965-லிருந்து 1974 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 50 பேர் தூக்கிலிடப்பட்டனர். 1975-84 இல் இந்த சராசரி எண்ணிக்கை 12 ஆகவும், 1985-94 இல் 4 ஆகவும் குறையத் தொடங்கியது.
தூக்குத் தண்டனை எண்ணிக்கைக் கணிசமாக குறைந்த காலகட்டங்களில் குற்றங்களோ, வன்முறைகளோ குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து விடவில்லை என்றே உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்ட பல்வேறு நாடுகளிலும் இதே போக்குதான் உள்ளது.
2010 இல் அய்.நா. தீர்மானம் வந்தபோது அண்டைநாடுகளான பூட்டான், மாலத் தீவு ஆகிய நாடுகள் தூக்குத் தண்டனை ஒழிக்கக் கூடாது என்ற தங்களின் முந்தைய முடிவை மாற்றிக் கொண்டன. தெற்கு ஆசியாவில் நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே ஒழித்துவிட்டன. சிறீலங்கா, மாலத் தீவுகள் நடைமுறையில் ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
நேர்மாறாக இந்தியா மட்டும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் வழியில் தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்தில் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருக்கிறது.
பெரியார் முழக்கம் 30082012 இதழ்