கீழ்த்தரமான மக்கள் தன்மை

எந்த அடிப்படை உண்மைகளும் இல்லாமல் தனி நபர்களை குறி வைத்து பரப்பப்படும் அவதூறுகள் பற்றி தந்தை பெரியார் எழுதிய அறிக்கை இது:

“சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு – கரூர் டிவிஷனில் அசிஸ்டென்ட் இன்ஜினியராக நிய மிக்கப்பட்டபோது, ஒரு ஓவர்ஸீ யரிடம் வேலை கற்க அமர்த்தப் பட்டார். பிறகு அவர் அஸிஸ்டென்ட் இன்ஜினியர் வேலை ஏற்றுக் கொண் டார். அப்போது அந்த ஓவர்ஸீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார். இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும்போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தில் கண்டித்தார். இது அந்த ஓவர்ஸீயருக்குப் பிடிக்கவில்லை. ‘நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே!’ என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி,

‘நீங்கள் சிறு வயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர். ‘என் பெயர் ஏன் கெடும்?’ என்று கேட்டார்.

‘உங்களைப் பற்றி மக்கள் கண்ட படி பேசுகிறார்கள். இதற்கு இடம் வைத்துக் கொள்ளாதீர்கள்’ என்று ஓவர்ஸீயர் சொன்னார்.

‘என்ன பேசுகிறார்கள்? சொல் லுங்கள்’ என்று மாணிக்க நாயக்கர் கேட்டார்.

‘நீங்கள் பணம் வாங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பேசுகிறார்கள்’ என்றார் ஓவர்ஸீயர்.

‘அந்தப்படி யார் சொன்னார்? சொல்லுங்கள்’ என்று சற்றுக் கோபமாகக் கேட்டார் மாணிக்க நாயக்கர். அதற்கு ஓவர்ஸீயர் , ‘ஜனங் கள் அப்படிப் பேசிக் கொள்ளு கிறார்கள்’ என்று சொன்னார்.

உடனே மாணிக்க நாயக்கர் ‘வாழாமல் உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் மகளுக்கும் லஸ்கர் நாராயண சாமிக்கும் சம்பந்தம் உண்டு என்று ஊரெல்லாம் பேசிக் கொள்கிறார் களே? அப்படி நீ வைத்துக் கொள்ள லாமா?’ என்று கேட்டார். உடனே அந்த ஓவர்ஸீயர் கோபப்பட்டு, ‘எந்த அயோக்கியப் பயல் அப்படிச் சொன்னான்? சொல்லு; முட்டாள் தனமாகப் பேசாதே’ என்றார்.

உடனே மாணிக்க நாயக்கர் தன் காலில் இருந்ததைக் கழற்றி அந்த ஓவர்ஸீயர் தலையில் இரண்டு, மூன்று போட்டார்; பக்கத்திலிருந்தவர்கள் தடுத்து ஓவர்ஸீயரைப் பார்த்து, ‘நீங்களும் ஊரில் பேசிக் கொள் கிறார்கள் என்று சொன்னீர்கள்; அவரும் ஊரில் பேசிக் கொள் கிறார்கள் என்று சொன்னார். இதில் தப்பென்ன? உங்களைச் சொன்னதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் அவரைச் சொன்னது அவர் வேலைக்கே ஆபத்தாய் முடியுமே’ என்று சொல்லி ஓவர்ஸீயரை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும்படி செய்தார்கள். இது, கரூர் அக்கால டி.பி.யில் நடந்த நிகழ்ச்சி.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால், அரசியலில் எதிர்க்கட்சி மீது, எதிரிகள் மீது குறை கூறுவதற்காகச் சிலர் எதையும் சொல்லிவிட்டு, அழுத்திக் கேட்டால், ‘மக்கள் அப்படிப் பேசிக் கொள்கிறார்கள்’ என்று சொல்லித் தப்பித்துக் கொள் கிறார்கள். அவர்களுக்குப் புத்தி வருவதற்காக உண்மையாய் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டேன்.

‘ஊரில் பேசிக் கொள்ளுகிறார்கள்’ என்பது மிகக் கீழ்த்தரமான மக்கள் தன்மையாகும்.’

பெரியார் ‘விடுதலை’ 26.3.1969

பெரியார் முழக்கம் 06092012 இதழ்

You may also like...