பேரிகையில் தோழர் பழனிக்கு நினைவேந்தல் கூட்டம்
27.8.2012 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரிகையில், படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்திற்கு, பேரிகை ஒன்றிய அமைப்பாளர் முருகேசு தலைமையேற்றார். கிருஷ்ணப்பா, பாஸ்கர் ஆகியோர் தளி எம்.எல்.ஏ. (சி.பி.ஐ.) இராமச்சந்திரனின் அடக்குமுறைகளை விளக்கும் விதமாக பாடல்களை (தெலுங்கில்) பாடினர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழகத் தலைவர் தமது உரையில் –
“இந்த நாட்டில் கம்யூனிசம் பரவாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதற்கு ஒரு கட்சி இருக்கிறது. அதுதான் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெரியார் சொல்லியுள்ளார். பெரியார் சொன்னது வேடிக்கைக்காக அல்ல என்பதை நிரூபிக்கும்படி தற்போது சி.பி.ஐ. நடந்து கொள்கிறது என்று சி.பி.ஐ. கட்சியின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார்.
சி.பி.ஐ. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மக்கள் விடுதலை) விந்தைவேந்தன், பெங்களூர் கலைச் செல்வி, மாவட்ட தலைவர் குமார், கெலமங்களம் ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், தேன்கனிக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் வெங்கிடகிரியப்பா ஆகியோர் உரையாற்றினர்.
பெரியார் முழக்கம் 06092012 இதழ்