‘திராவிடர் இயக்கம்’ உருவாகிய பின்னணி (12) எதிரிகளை நடுங்க வைத்த நாயர்
1919 – அது மட்டுமா? நாயர் லண்டனில் முடிவு எய்தியபோது, காங்கிரஸ் சார்பில் சுயராஜ்யம் கேட்டு வாதாடவும், நாடாளுமன்ற குழுவின் முன்பு சாட்சியம் சொல்லவும் சென்றிருந்த, சி.பி.ராமசாமி அய்யர், சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்தியமூர்த்தி, சரோஜினி (நாயுடு), லார்டு சின்ஹா இன்னும் பலர் இங்கிலாந்திலேயே இருந்தும், துக்கம் விசாரிக்கக்கூட செல்லவில்லை. இச் செயலானது, ‘காங்கிரஸ், தேசியத் திலகங்களின்’ மனிதாபிமானமற்ற தன்மையை யும், யோக்கியதையையும், வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியது. காலஞ்சென்ற தலைவர் டாக்டர் நாயர் அவர்கள் ஒரு புரட்சி வீரர், சுயமரியாதை வீரர், அவரை ஒரு ‘திராவிட லெனின்’ என்று சொல்ல வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் பின்னாளில் கூறினார் என்றால், அவரின் புகழுக்கு வேறு என்ன சான்று வேண்டும்? பாலக்காட்டில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர், மலையாளம் தந்த மாமேதை! சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பின், இங்கிலாந்து சென்று மருத்துவத் துறையில் பட்டம் பெற்று, அங்கு ‘கிங்ஸ்’ மருத்துவமனையில் அவுஸ் சர்ஜனாக இருந்து, பேரும் புகழும் பெற்று, தாய்நாடு திரும்பி, காது, மூக்கு, தொண்டை (இ.என்.டி.) மருத்துவத்தில் தனக்கு நிகர் தானே என்றும், மருத்துவ மன்னன் என்றும் வெற்றிக் கொடி நாட்டியவர். இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தபோது, காங்கிரசில் பற்றுக் கொண்டு, தாதாபாய் நவ்ரோஜியை ஒரு பிரிட்டிஷ் பாராளுமன்றத் தொகுதியில் நிறுத்தி வெற்றிப் பெறச் செய்ததில் இவரது செல்வாக்கும் திறமையும், சேவையும் முக்கியப் பங்கு வகித்ததை நவ்ரோஜி உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டியுள்ளார்கள் என்பதே இவரது ஆற்றலை விளக்குவதாக அமையும். காங்கிரஸ் என்பது தேசியப் போர்வையில் உள்ள ஒரு பார்ப்பனியக் கூடாரம் என்பதை உணர்ந்து, அதைவிட்டு வெளியே வந்தவர் டாக்டர் நாயர்! அவர் ஒரு பகுத்தறிவுவாதி! சுயமரியாதை வீரர்! சிறந்த பேச்சாளர், நகைச்சுவை உணர்வுள்ளவர், சிறந்த எழுத்தாளர்! இவரின வாதத் திறமையையும், பேச்சாற்றலையும் கண்டு, சி.இராஜகோபாலாச்சாரியார், விஜயராகவாச்சாரியார், திலகர், கோகலே, மாளவியா, மோதிலால் நேரு போன்ற பார்ப்பன காங்கிரஸ் தலைவர்கள் குலைநடுக்கம் கொள்ளுவார்களாம்! (தொடரும்)
பெரியார் முழக்கம் 14062012 இதழ்