பகுத்தறிவு ‘அம்மா’க்கள் வேண்டும்!

திரைப்பட இயக்குனர் பா. இரஞ்சித், ஜன.11, ‘ஆனந்த விகடனில்’ பெண் விடுதலை குறித்து எழுதிய கட்டுரை யிலிருந்து சில பகுதிகள்.

நாம் சாதி சமூகமாக இருப்பதில் ஆண்களைப் போலவே பெண் களுக்கான பங்கும் அதிகம். ஆண்கள் சொல்கிற எதையுமே தட்டிக் கழிக்கிற பெண்கள், சாதி, மதம், அடிப்படை யிலான நம்பிக்கைகளை, உணர்வுகளை, சடங்குகளை மட்டும் இன்னமும் தாங்கிப் பிடிக்கிறவர்களாக ஏற்றுக் கொள்கிறவர்களாக இருக் கிறார்கள். அப்பா கண்டிப்பான முறையில் கற்றுத் தருகிற சாதியைவிட, நிதானமாக சாதிக்குக் கொடி பிடிக்கிற அம்மா ஆபத்தானவராக இருக்கிறார். சாதி என்பது தவறானது என்றே தெரிந்தாலும், அதைத் தவறு என்று தன் பிள்ளைகளுக்கு அம்மா உணர்த் தாமல் இருப்பது ஆபத்தானது தான். பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத, பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க இயலும்.

* * *

பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வரை பெண் குறித்த என்னுடைய நம்பிக்கைகள், பார்வைகள் என அனைத்தும் கல்வியும் ஊடகங்களும் சமூகமும் எனக்குள் புகுத்தியவையாகவே இருந்தன. ஆனால், அந்த எண்ணங்களை ஒட்டு மொத்தமாகப் புரட்டிப் போட்டவர்கள் மூன்று பேர்.  ஒருவர் அம்பேத்கர். மற்றொருவர் பெரியார். இன் னொருவர் ஃபிராய்ட்.

பெண்ணுக்கான உரிமைகள் குறித்து அம்பேத்கரின் எழுத்துக்களே அறிமுகப்படுத்தின. சாதி அடக்கு முறைகளுக்கு இணையானது ஆணாதிக்கம். அது பெண் உடல்மீது நிகழ்த்தும் அதிகாரம் மோசமானது என்று அவர் எழுத்துக்களே கற்றுத் தந்தன. பெண் என்பவள் சொத்து அல்ல; மானம் அல்ல; கௌரவம் அல்ல; போகக் பொருளும் அல்ல… என்பதை எல்லாம் அம்பேத்கரின் வழியில்தான் கண்டடைகிறேன்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதுதான் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. பதின்பருவப் பையனான எனக்கு பெண்ணியத்தின் வேர்களைப் புரிய வைத்தது அந்த நூல்தான். கருப்பை, கற்பு, கன்னித் தன்மை என்பது எல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் விஷக் கிளைகள் என்பதை பெரியாரே எனக்கு உணர்த்தினார்.  ஃப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ நூல் உடல் குறித்த பார்வையை, நாம் ஏன் மற்றவர்களுடைய உடலை இப்படி எல்லாம் அணுகுகிறோம், பெண் களுடைய உடல் நம் எண்ணங்களில் உருவாக்கும் தாக்கம் குறித்து எல்லாம் புரிதலை உருவாக்கியது. என்னுடைய தொடர்ச்சியான வாசிப்பு, குறிப்பாக நவீன தமிழ் இலக்கிய நூல்கள் பெண்களின் அக உலகைப் புரிந்து கொள்ள உதவியது.

பெரியார் முழக்கம் 12012017 இதழ்

You may also like...