‘பசுவதைத் தடை’ச் சட்டத்தின் அரசியல் பின்னணி
பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி:
ட ஆக. 21, 2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதா அறிமுகம் செய்ய முயன்றார். கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை.
ட 1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே இந்து ராஜ்யம் குறித்து கனவு காண்பதுகூடத் தேசத் துரோகம் என்றே நான் கூறுவேன்” என்றார் காந்தி.
ட சங்பரிவாரங்கள், ‘கோமாதா பக்தி’யை முஸ்லிம், கிறிஸ்தவ வெறுப்பு அரசியலுக்கே பயன்படுத்தி வந்துள்ளன.
ட “காந்தியைப் போலவே நேருவும் பசுவதைத் தடையை இந்து பழமைவாத நடவடிக்கையாக கருதிய போதிலும், அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நெறியில் அதை கொள்கையாக எழுதப்பட்டதை நேருவால் தடுக்க முடிய வில்லை” என்று நேரு வாழ்க்கை வரலாற்றை எழுதிய சர்வபள்ளி கோபால் பதிவு செய்துள்ளார்.
ட மாட்டுக்கறி சாப்பிடும் ‘பஞ்சமர்’ சமூகத்தைச் சார்ந்த அம்பேத்கரைக் கொண்டே அரசியல் சட்ட விதி காட்டும் நெறிகளில் ‘பசுவதை தடை’யை கொள்கையாக அறிவிக்கச் செய்து விட்டார்கள். அரசியல் நிர்ணய சபையில் பார்ப்பனர் பழமைவாதிகள் செல்வாக்கு அந்த அளவுக்கு இருந்தது.
ட 1951இல் ஜனசங்கம் தொடங்கிய காலத்தி லிருந்தே பசுவதை தடைச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தியது. நேரு மாட்டுக்கறி சாப்பிடுகிறவர் என்று குற்றம்சாட்டியது.
ட 1952இல் ஆர்.எஸ்.எஸ். பசுவதை தடைகோரி கையெழுத்து இயக்கம் நடத்தியது. கையெழுத்துப் பெறப்பட்ட காகித கட்டுகள் மாட்டு வண்டி களில் ஏற்றிக்கொண்டு டெல்லி கொண்டுபோய் இந்திய அரசிடம் ஒப்படைத்தனர்.
ட டாக்டர் சம்பூர்ணானந்த் என்ற முன்னாள் இந்து மகாசபைக்காரர், உ.பி. காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்தபோது 1955இல் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்தார். மாநில அரசுக்கு இப்படி சட்டம் கொண்டுவர உரிமை உண்டு என்றாலும், இது தவறான நடவடிக்கை என்றார் நேரு. உ.பி. முதல்வர், நேரு கருத்தை மதிக்கவில்லை. தொடர்ந்து பீகார், ராஜஸ்தான், ம.பி.யில் நடந்த காங்கிரஸ் ஆட்சிகளும் இதேபோல் சட்டம் இயற்றின.
ட 1958இல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது. பசுவதைச் சட்டங்கள் கறவை மாடுகளுக்குத் தான் பொருந்துமே தவிர மடி வற்றிய மாடுகளுக்கு சட்டம் பொருந்தாது என்று தீர்ப்பு அளித்தது.
ட ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். நாடு முழுதும் பொருந்தக்கூடிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று குரல் கொடுத்தது. 1962 தேர்தலில் ம.பி. மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிராக ஜனசங்கம் இந்த கோரிக்கையை முதன்மைப்படுத்தியது. நேரு வின் கையில் வெட்டரிவாள் தந்து, பசுமாட்டை அவர் வெட்டுவதுபோல் சுவரொட்டிகளை ஒட்டியது. ம.பி. மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த கைலாஷ் நாத் கட்சு தேர்தலில் சொந்த தொகுதியில் இலட்சுமி நாராயண் பாண்டே என்ற ஆர்.எஸ்.எஸ். ஆதரவு வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். பசுமாட்டு அரசியல் தீவிர வடிவமெடுக்கத் தொடங்கியது.
ட அவ்வளவுதான். அடுத்த தேர்தலுக்கு பசு மாட்டையே அரசியலாக்க சங்பரிவாரங்கள் முடிவு செய்தன. டெல்லியில் “பாரத் கோ சேவக் சமாஜ்“ என்ற அமைப்பை தொடங்கினர். இதன் புரவலர் பெரும் முதலாளியான ஜெய் தயாள் டால்மியா. இந்த அமைப்பு 1964 ஆகஸ்டில் மாநாடு ஒன்றை கூட்டியது. அதன் ஒற்றைக் கோரிக்கை பசுவதைத் தடைச் சட்டம் வேண்டும் என்பதாகும். மாநாட்டை தொடங்கி வைத்தவர் ஆர்.எஸ்.எஸ். தலைவரான சித்பவன் பார்ப்பனர் கோல்வாக்கர்; முக்கிய உரையாற்றியவர் தீனதயாள் உபாத்யாயா (ஜன சங்க கட்சித் தலைவர்). மாநாடு நடந்த அதே தேதியில்தான் ‘விசுவ இந்து பரிஷத்’தும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ட ஜனசங்கக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 1966இல் நாடாளுமன்றத்தில் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வர வற்புறுத்தினார்கள். மத்திய அரசு ஏற்கவில்லை; ஆனால் உள்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா ஓர் பழமைவாதி; பசுவதைத் தடையை உள்ளத்தால் ஆதரித்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்த பார்ப்பன – பழமைவாதிகளும் தடைச் சட்டம் வேண்டும் என்றே விரும்பினார்கள்.
ட சேத் கோவிந்ததாஸ் என்ற காங்கிரஸ்காரர் தலைமையில் ஒரு குழு, உள்துறை அமைச்சர் நந்தாவை சந்தித்து மனு அளித்தது (1966, செப்.5). நாடாளுமன்றத்தில் சுவாமி ராமேஷ்வரானந்த் என்ற ஜனசங்க உறுப்பினர், ‘கோமாதாவுக்கு ஜே’ என்று விடாமல் அவையில் முழக்கமிட்டார். அவையை நடத்த முடியாத நிலையில் அவரை 10 நாள்கள் சபையிலிருந்து நீக்கம் செய்தார், அவைத் தலைவர்.
ட நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. பூரி சங்கராச்சாரி உள்ளிட்ட காவிக் கூட்டம் 1966 நவம்பர் 20 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை நாடாளுமன்றத்தின் முன் தொடங்க திட்டமிட்டது. இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த, “சர்வ தாலிய கோரக்ஷ மகா அபியான் சமிதி” என்ற குழு அமைக்கப்பட்டது. ஜனசங்கம் இதற்கு முழு ஆதரவு தெரிவித்தது.
ட 1966 நவம்பர் 7, டெல்லியில் பேரணி நடத்தினார்கள். நாடாளுமன்றம் முன் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கோல்வாக்கர், சேத் கோவிந்ததாஸ், வாஜ்பாய், சுவாமி ரமேஷ்வரானந்த் ஆகியோர் வெறியூட்டும் பேச்சுகளைப் பேசினர். ‘சஸ்பென்ட்’ செய்யப்பட் டிருந்த ரமேஷ்வரானந்த் கூட்டத்தை முடித்துக் கொண்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து கலகம் செய்தார். அதன் காரணமாக மீண்டும் கூட்டத் தொடர் முழுதும் நீக்கி வைக்கப்பட்டார்.
ட அதே ஆத்திரத்தில் வெளியே வந்த அவர், வன்முறையில் இறங்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டி விட்டார். நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுமாறு அலறினார். நிர்வாணச் சாமியார்கள் வீதிக்கு வந்தனர். காவலை மீறி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயற்சித்தனர். காவல்துறை தடுத்தது. கூட்டம் வன்முறையில் இறங்கியது. அரசு கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். கலவரத்தில் ஒரு போலீஸ் உள்பட 8 n பர் இறந்தார்கள்.
ட அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசரின் டெல்லி வீட்டை நோக்கித் திரண்டு தாக்குதல் நடத்தினார்கள்; தீ வைத்தனர்; காமராசரை உயிருடன் எரிப்பதே இவர்களின் திட்டம்! அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பசுவதைத் தடையை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற பழமைவாதிகள் கோரிக்கையை காமராசர் ஏற்க மறுத்ததே இதற்குக் காரணம். உதவியாளர் உதவியுடன் பின் வாசல் வழியாக காமராசர் வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினார். காமராசரை கொல்ல முயன்ற சம்பவங்களைத் தொகுத்து, ‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம’ எனும் தலைப்யீல் பெரியார் நூலாக வெளியிட்டார்.
ட 1966, நவம்பர் 20இல் பூரி சங்கராச்சாரி, பிரபுதத் பிரம்மச்சாரி ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினர்.
ட ஆர்.எஸ்.எஸ். வன்முறைகளை ஒடுக்காமல், கலவரங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தந்த உள்துறை அமைச்சர் நந்தாவை பிரதமர் இந்திரா பதவியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்தார். அதற்குப் பிறகு பசுவதை தடைச் சட்டத்தை மத்திய அரசே கொண்டு வரவேண்டும் என்று நந்தா வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்.
ட உள்துறை அமைச்சராகிய ஒய்.பி.சவான், பிரதமர் இந்திரா இணைந்து கலவரக் கும்பலை ஒடுக்குவதில் உறுதியாக செயல்பட்டனர். பூரி சங்கராச்சாரியின் உண்ணாவிரதத்தை தொடரச் செய்து, அவரை சாகடித்து கலவரத்தை தீவிரமாக்க மதவெறியர்கள் திட்டமிட்டார்கள். பூரி சங்கராச்சாரியின் பூர்வாசிரம மருமகன் இந்த சதித் திட்டத்தை அம்பலப்படுத்தி, பிரமருக்கு ஒரு தந்தி அனுப்பினார். “கோரக்ஷா சமிதியில் இருக்கக் கூடிய சில அரசியல் புள்ளிகள், பிடிவாதமான கடும் போக்கைப் பின்பற்ற முடிவு செய்து விட்டனர். அதன் மூலம் சங்கராச்சாரி இறந்து போகலாம். சங்கராச்சாரி மரணத்தை முன் வைத்து தேர்தலில் பெரும் வெற்றி பெற்று விடலாம் என்பதே அவர்கள் திட்டம்” என்று தந்தியில் குறிப்பிட்டிருந்தார். (‘ஸ்டேட்ஸ்மென்’ நாளேடு 7.1.1967)
ட உண்மை அம்பலமானதால் பூரி சங்கராச்சாரி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
ட 1977இல் இந்திரா அவசர நிலையை பிரகடனம் செய்தார். ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அப்போது ஆர்ச்சார்யா வினோபா பாவே (பூமிதான இயக்கத் தலைவர்) பசுவதைத் தடைக் கோரி உண்ணாவிரதம் தொடங்கினார். இந்திராவை தீவிரமாக எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் வினோபா உண்ணாவிரதத்தை ஆதரித்தார்.
ட மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்திரா கட்சி தோற்றது. மொரார்ஜி பிரதமர் ஆனார். பசுவதைத் தடைச் சட்டத்தை மத்திய அரசே கொண்டு வருவதற்கு வசதியாக அதை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றும் அரசியல் சட்டத்திருத்தத்துக்கான மசோதாவை மொரார்ஜி படுவேகமாகக் கொண்டு வந்தார். மக்களவையில் மசோதா நிறைவேறியது. ஆனால், அது சட்ட வடிவம் பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் மொரார்ஜி பதவி இழந்தார்.
ட இதற்குப் பிறகு தேசிய ஜனநாயக முன்னணி (பா.ஜ.க.வும் இதில் இருந்தது) வாஜ்பாய் பிரதமர் ஆனார். கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமலே பசுவதைத் தடைச் சட்டத்தை வாஜ்பாய் அறிமுகப்படுத்தினார்., கடும் எதிர்ப்புக் காரணமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இப்போது, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் பசுவதைத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடியபோது, விவேகானந்தரிடம் பசுக்களைக் காப்பாற்ற உதவி கேட்டு வந்தனர் பார்ப்பனர்கள். அப்போது ‘கோமாதா’ காவலர்களுக்கும் விவேகானந்தருக்குமிடையே நடந்த உரையாடல்:
“மனிதர்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுக்கூடத் தராமல், விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக, உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு, அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால், இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்களின் வேலை அப்படிப்பட்டது தான்” என்றார் சுவாமிஜி (விவேகானந்தர்).
இதைக் கேட்ட பசு பாதுகாப்புப் பிரச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு, “நீங்கள் சொல்வது சரிதான்; ஆனால் பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகிறதே” என்றார்.
சுவாமிஜி சிரித்தபடியே, “ஆமாம், பசு நமது தாய்தான்; எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற புத்திசாலிப் பிள்ளைகளை பெறமுடியும்?” என்றார். – ஆதாரம்: விவேகானந்தர், “எனது சிந்தனைகள்” நூல்
தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம் 12012017 இதழ்