இந்திய அடையாளத்தைத் திணிக்கும் ‘ஆதார்’
மேட்டூர் செயலவை தீர்மானம்: ஆதார் அடையாள அட்டையை நடுவண் அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பல முறை தீர்ப்புகளை வழங்கியிருந்தும், தொடர்ந்து மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டுமின்றி, மாநில அரசின் ஜாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், சமையல் எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை, ஓய்வூதிய நீட்டிப்பு போன்றவற்றிலும் ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் என்று நடுவண் அரசு வற்புறுத்துகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியதோடு மாநில அரசின் உரிமைகளிலும் குறுக்கிடுவ தாகும். வெளிநாட்டிலிருந்து ஊடுறுவும் அகதிகளைத் தடுப்பதற்காக ஆதார் அடையாளம் கொண்டு வரப்படுவதாக முதலில் அறிவித்தார்கள். பிறகு, மக்களை உளவுத்துறை கண்காணிப்பதற்கான ஏற்பாடு என்று உளவுத் துறை அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழி பேசும் இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசிய இனத்துக்குமான அடையாளங்களை மறைத்து இந்தியர் என்ற ஒற்றை அடையாளத் துக்குள் திணிக்கும் சூழ்ச்சிகரமான ஏற்பாடே ஆதார் என்ற அடையாளம்.
மாநிலங்களுக்கான உரிமைகளில் நடுவண் அரசு குறுக்கிட்டு, ஆதார் அடை யாளத்தைத் திணிக்கும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து ஆதார் அட்டை வற்புறுத்தப்படுவதைத் தடுத்திட வேண்டும் என்று இந்த செயலவை வற்புறுத்துகிறது.
பெரியார் முழக்கம் 30062016 இதழ்