பிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டனில் குடியேறிய பார்ப்பன உயர் ஜாதி இந்துக்கள், அங்கும் ஜாதியையும் தீண்டாமையையும் பின்பற்றி வரும் அவலம் நீடிக்கிறது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் களிடையே நிலவும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. தெற்காசிய ஒற்றுமைக் குழு ‘ஜாதிய கண்காணிப்பு மய்யம்’ தெற்காசிய புலம் பெயர் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கினை நடத்தின. பிரிட்டனில் ‘ஜாதிய கண்காணிப்பகம்’ என்ற ஜாதிக்கு எதிரான அமைப்பு அங்கே இப்போதும் ‘இந்து’, ‘சீக்கியர்’ சமூகங்களில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி தீண்டாமை பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

2010ஆம் ஆண்டில் பிரிட்டனில் நிறவெறி பாகுபாடு களுக்கு எதிராக ‘சமத்துவ சட்டம்’ ஒன்றை அந்நாடு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான பிரிவையும் இணைக்க வேண்டும் என்று பிரிட் டனில் இந்தியாவிலிருந்து குடியேறிய ஜாதி எதிர்ப்பாளர்கள் – தொடர் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தினர். பிரிட்டிஷ் அரசும், இதற்கு ஒப்புதல் அளித்து, ஜாதி பாகுபாட்டுக்கு எதிரான விதியையும் அதில் இணைத்தது. ஆனால், பிரிட்டனில் வாழும் பார்ப்பனர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த சட்டப் பிரிவை செயல்படுத்த விடாமல் தடுத்து விட்டனர். இந்த சட்டப் பிரிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்ப்பனர் உயர்ஜாதியினர் தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று மிரட்டினார்கள்.

கருத்தரங்கில் பேசிய ‘ஜாதி கண்காணிப்பு மய்ய’த்தைச் சார்ந்த சத்பால் முமன், சி.பி.அய்.எம்.எல். கட்சியைச் சார்ந்த கவிதா கிருஷ்ணன் (இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர்)  ஆகி யோர் இந்த உண்மைகளை வெளியிட்டதோடு பிரிட்டனில் நடக்கும் ஜாதிய பாகுபாடுகளையும் சுட்டிக் காட்டினர்.

“பிரிட்டனில் ஒருவருடைய ஜாதி பற்றி பணியிடங் களில், தொழில் நிறுவனங்களில் கேள்விகள் கேட்கப்படு கின்றன. குடிநீர் தனியாக வைக்கப்படுகிறது. கல்வி நிலையங்களில் தலித் – ‘கீழ் ஜாதி’ மாணவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பணியிடங்களில் இவர்களுக்கு பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்கள்.

இலண்டன் குயின்மேரி பல்கலக்கழகத்தில் சட்டத் துறையைச் சார்ந்த டாக்டர் பிரகாஷ் ஷா என்பவர், ‘அம்பேத்கர் ஒரு முட்டாள்’ என்று பேசியிருக்கிறார். மற்றொரு பேராசிரியரான கவுதம் சென் என்பவர், ‘ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான சட்டத்தை கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை எதிர்ப்போம்’ என்று திமிரோடு பேசியிருக்கிறார்.

கருத்தரங்கில் பேசியவர்கள் இதை சுட்டிக் காட்டிய தோடு கன்யாகுமார் கைது – ரோகித் வெமுலா மரணம் குறித்தும் கண்டித்துப் பேசினர், ‘தேசத் துரோக வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்’ என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரோகித் வெமுலா படம் அச்சிடப்பட்ட பதாகைகளை மாணவர்கள் கரங்களில் ஏந்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

பெரியார் முழக்கம் 17032016 இதழ்

You may also like...