ஆக.8 முதல் 12 வரை நான்கு முனைகளிலிருந்து புறப்படுகிறது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கழகத்தின் பரப்புரைப் பயணம்
மேட்டூரில் கூடிய கழக செயலவையில் மூட நம்பிக்கைளுக்கு எதிரான பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒரு குடிமகனின் அடிப்படை கடமை என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் சமுதாயத்தில் அறிவியலுக்கு எதிராக சமூகத்தைப் பாதிக்கும் மூட நம்பிக்கைகள் ஏராளமாக மக்களிடத்தில் படிந்திருக்கின்றன. பெண் சிசுக்கொலை, இளம்வயது திருமணம், பெண்களை ஏமாற்றி கெடுக்கும் சாமியார்களின் மோசடி, பேய், பில்லி, சூனிய நம்பிக்கைகளில் அச்சம், அதனால் சந்திக்கும் இழப்புகள், நரபலி போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக விளக்கி தன்னம்பிக்கையை விதைக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துவது என இந்த செயலவை முடிவு செய்கிறது.
7-8-2016 அன்று சென்னை, கோவை, மயிலாடுதுறை, சத்திய மங்கலம் ஆகிய நான்கு முனைகளிலிருந்து புறப்பட்டு கிராமம் கிராமமாக 5 நாட்கள் பரப்புரை செய்யப்படும். திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய பெயரோடு கழகம் இயங்கத் தொடங்கிய நாளான ஆகஸ்டு12இல் சேலம் மாவட்டம், ஆத்தூரில் பயண நிறைவு விழாப் பொதுக் கூட்டம் நடைபெறும்.
மக்களை சந்தித்து அறிவியல் பார்வையை விளக்கிடும் இப் பரப்புரைப் பயணத்தில், தங்களை முழு ஈடுபாட்டுடன் இணைத்துக் கொண்டு பயணத்தின் வெற்றிக்கு உழைத்திட திராவிடர்விடுதலைக் கழகத் தோழர்களை இச்செயலவை கேட்டுக் கொள்கிறது.
சமுதாயத்தில் அறிவியல் விழிப்புணர்வையும், தன்னம்பிக்கையை யும் உருவாக்கும் இந்த பயணத்தின் வெற்றிக்கு அறிவியல் வாழ்வி யலில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கி ஆதரிக்க வேண்டுமென்று திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
பெரியார் முழக்கம் 30062016 இதழ்