சுயமரியாதை சுடரொளி சவுந்தரபாண்டியனார்
சுயமரியாதை இயக்கத்தின் தூண்களில் ஒருவரான டபிள்யூ பி.ஏ.சவுந்தரபாண்டியனார், செப்.15ஆம் தேதி அவருக்கு 129ஆவது பிறந்த நாள். தியாகராயர் நகரிலுள்ள அவரது சிலைக்கு நாடார் சமூகத்தினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தியுள்ளனர். சவுந்தர பாண்டியனார் நாடார் சமூகத்தில் பிறந்தாலும், பார்ப்பனரல்லாத சமூகத்தின் முன்னேற்றத்துக்காக பெரியாரோடு இணைந்து நின்றவர். நீதிக்கட்சியிலிருந்து அவரது பயணம் தொடங்கியது. 1924ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பெரியார் நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் சவுந்தரபாண்டியனார்தான். நாடார் மகாஜன சங்கத்தின் பிரதிநிதியாக 1921ஆம் ஆண்டு ஆளுநர் வெல்லிங்டனால் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு (ஜில்லா போர்டு) உறுப்பினராகவும் பணியாற்றியவர். கமுதிப் பகுதியில் நாடார்-மறவர் வகுப்பு மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றியவர்.
‘தீண்டப்படாத’ மக்களுக்கு நில உரிமை; அவர்களை பேருந்தில் ஏற்ற மறுத்த பேருந்துகளுக்கு உரிமத்தை இரத்து செய்தமை; ஆதி திராவிட மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுத்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தமை உள்ளிட்ட சமூகப் புரட்சிகளை நிகழ்த்தியவர்; நாடார் சமூகத்தில் ஏராளமான பார்ப்பன மறுப்பு சுயமரியாதை திருமணங்களை நடத்தியவர்.
1938ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். அந்தப் போராட்டத்தில் பெரியார் கைதானபோது, “இயக்கத்தின் செயல்பாடுகளை சவுந்தர பாண்டியனார், கி.ஆ.பெ. விசுவநாதன் தலைமையேற்று வழி நடத்துவார்கள்” என்று அறிக்கை விட்டு கைதானார். 23.2.1953ஆம் ஆண்டு ‘விடுதலை’யில் எழுதிய தலையங்கத்தில், பெரியார் இவ்வாறு எழுதினார்:
“கழகத்தின் அரசியல் சம்பந்தமான திட்டங்களில் பாண்டியன் அவர்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்படாமல் இருந்தால் அனேகமாகத் திராவிடர் கழகத்திற்குப் பாண்டியன் ஒரு நிரந்தரத் தலைவராய், ஏன் சுயமரியாதை ஸ்தாபனத்திற்குப் பரம்பரை தலைவராய்கூட இருந்திருக்க வேண்டியவராவார்.” சவுந்தர பாண்டியனார் சிலைக்கு மாலை அணிவித்து, அவருக்கு பெருமை சேர்க்க விரும்பும் ஒவ்வொருவரும் அவர் காட்டிய பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதைப் பாதையில் பயணிப்பதே சவுந்தர பாண்டியனாருக்கு காட்டும் உண்மையான வீரவணக்கமாக இருக்கும்!
பெரியார் முழக்கம் 22092016 இதழ்