விளிம்பு நிலை சமூகங்களை புறக்கணிக்கும் ஆதிக்க சாதி தேர்தல் அரசியல்!

தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஜாதியம் குறித்து ‘தமிழ் இந்து’ (ஏப்.29) நாளேடு வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

தமிழ்நாட்டு அரசியல் இன்றைக்கு யார் கையில் இருக்கிறது என்று கேட்டால், கருணாநிதி, ஜெய லலிதா பெயர்களைச் சொல்வது சுலபமான பதில். அது உண்மையும்கூட. அதேசமயம், அது மட்டுமே உண்மை அல்ல. தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் சாதிப் பின்னணி இது தொடர்பான உண்மைகளை நாம் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 7. பொதுத் தொகுதிகள் 32. மொத்தமுள்ள 39 தொகுதி களில் 32 இடங்கள் அ.தி.மு.க. வசம் இருக்கின்றன. பொதுத் தொகுதிகளில் அதன் பிரதிநிதிகளின் சமூகம் சார் பின்னணி இது: வன்னியர் 23.33ரூ, கவுண்டர் 23.33ரூ, முக்குலத்தோர் 20ரூ, நாடார் 6.7ரூ, நாயுடு 3.33ரூ.

தமிழகத்தின் சட்டசபைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 46. பொதுத் தொகுதிகள் 188. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் தன் கட்சிக் காரர்களாகச் சேர்த்து நிறுத்தியிருக்கிறது அதிமுக. பொதுத் தொகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ள சமூகங்களின் வரிசை இது: முக்குலத்தோர் 22.3ரூ, வன்னியர் 21.3ரூ, கவுண்டர் 14.9ரூ, நாயுடு 4.8ரூ, நாடார் 5.9ரூ. தி.மு.க. 172 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் களில் முதல் ஐந்து இடங்களில் உள்ள சமூகங்களின் வரிசை இது: வன்னியர் 18.7ரூ, முக்குலத்தோர் 12.9ரூ, கவுண்டர் 11.5ரூ. நாயுடு 8.6ரூ, நாடார் 7.2ரூ.

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இரு பெரிய கட்சிகளிலும் மாநிலத் தலைமை நிர்வாகிகளுக்கு அடுத்த நிலையிலுள்ள சக்தி வாய்ந்த பதவிகள் மாவட்டச் செயலர்கள். உண்மையில், இவர்களே நேரடியாகக் கட்சியை ஆள்பவர்கள்.

தமிழகத்தின் 32 மாவட்டங்களை அதிமுக 50 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கிறது. இந்த 50 மாவட்டச் செயலர்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் சமூகங்கள்: முக்குலத்தோர் 26ரூ, வன்னியர் 18ரூ, கவுண்டர் 14ரூ, நாயுடு 8ரூ. நாடார் 2ரூ. தமிழகத்தின் 32 மாவட்டங்களை திமுக 65 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கிறது. இந்த 65 மாவட்டச் செயலர்களில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் சமூகங்கள்: முக்குலத்தோர் 23ரூ, வன்னியர் 15.4ரூ, கவுண்டர் 12.3ரூ. நாயுடு 9.2ரூ, நாடார் 3ரூ.

சமூகரீதியிலான பிரதிநிதித்துவம் இருக்கிறதா?

அதிமுகவில் இஸ்லாமிய, கடலோடிச் சமூகங் களைச் சேர்ந்தவர் ஒருவர்கூட மாவட்டச் செயலர் பொறுப்பில் இல்லை. அதன் 50 மாவட்டச் செயலர் களில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரே பிரதிநிதி. திமுகவில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியில் இருக்கிறார்கள். இதே போல, இந்த வேட்பாளர் பட்டியலில் (கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து) இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேருக்கு மட்டுமே அதிமுக வாய்ப் பளித்திருக்கிறது; திமுக 14 பேருக்கு வாய்ப்பளித் திருக்கிறது. எனினும், இந்தப் பிரதிநிதித்துவம் நியாயமானது அல்ல.

அதிமுக, திமுகவில் மட்டும் அல்ல; பெரும் பாலான கட்சிகளில் மேலே குறிப்பிட்ட ஐந்து சமூகங்களும் கிட்டத்தட்ட ஐந்தில் மூன்று பங்கு வரையிலான அதிகாரத்தைக் கையில் வைத்திருக் கின்றன. அரசியல்வாதிகள் சொல்லும் ஓட்டுக் கணக்குபடி பார்த்தாலே, மக்கள்தொகை அடிப் படையில் ஐந்தில் மூன்று பங்கு இந்த ஐந்து சமூகங் களும் அல்லாதவர்கள் வசிக்கும் மாநிலம் இது.

ஏனைய சமூகங்களும் அவையவை பெரும் பான்மையாக வசிக்கும் பகுதிகளில் பிரதிநிதித்துவம் பெறுகின்றன என்றாலும், இந்தப் பிரதிநிதித்துவம் உள்ளபடி அந்தந்தச் சமூகங்களின் எண்ணிகையை ஒட்டியதாக இல்லை என்று ஒலிக்கும் குற்றச் சாட்டைப் புறக்கணிக்க முடியவில்லை. குறிப்பாக, விளிம்புநிலைச் சமூகங்கள் இதில் மோசமான புறக்கணிப்பை எதிர்கொள்கின்றன.

இடஒதுக்கீட்டுக்கு அப்பாற்பட்ட சமூகநீதி இங்கு சாத்தியம் என்று வாதிடுபவர்கள் நம்மிடையே உண்டு. தொகுதி ஒதுக்கீட்டில் தனித் தொகுதி இடஒதுக்கீடு இல்லாவிடில், ஒடுக்கப்பட்டோரின் நிலை இங்கு என்னவாக இருக்கும் என்பதற்கு, கட்சிப் பதவிகளில் அவர்களுக்கு அளிக்கப்படும் பிரதி நிதித்துவம் ஒரு சான்று. இஸ்லாமிய சமூகம் நாளுக்கு நாள் மைய நீரோட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து விலகுவதாகப் பேசுபவர்களும் இதற்கான நியாயத்தை நம்முடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்து வத்தில் கண்டடைய முடியும். இப்படி பல சமூகங்களைக் குறிப்பிட முடியும்.

சாதியத்தைச் சுவீகரித்தல் : தமிழகத்தை இந்தத் தேர்தல் சமயத்தில் குறுக்கும் நெடுக்குமாக சமீபத்தில் சுற்றியதும் உள்ளூர் மக்களிடம் பேசியதும் பெரிய அனுபவம். பொதுச் சமூகமும் ஊடகங்களும் நம்புவதுபோல, சின்ன அளவில் அல்ல; பெரிய அளவில் இங்கே அரசியலில் செல்வாக்கு செலுத்து கிறது சாதி. எனினும், தமிழ்நாட்டில் சாதியை நேரடியாக முன்னிறுத்தும் கட்சிகள் பெரிய அளவில் இதுவரை ஆதிக்கம் செலுத்தியது இல்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கான பதில் எளிமையானது. இங்கு மைய நீரோட்டக் கட்சிகளே உள்ளூர் அளவில் சாதியைப் பெரிய அளவில் சுவீகரித்துக்கொண்டிருக்கின்றன.

பெரியார் முழக்கம் 05052016 இதழ்

You may also like...