இங்கர்சால் கூறிய பாதிரியார் கதை
வியாதிகளுக்கு ஆவிகளும், பேய் களுமே காரணம் என்று ஒரு காலத்தில் மக்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தார்கள். ‘அம்மை நோய்’ வந்து விட்டால் ‘மாரியாத்தா’ உடலுக்குள் குடியேறியிருக்கிறாள் என்று நம்பி சிகிச்சை தர மாட்டார்கள். ‘மாரியம்மாள் தாலாட்டு’ புத்தகத்தை நோயாளிகள் அருகில் உட்கார்ந்து படிப்பார்கள். ‘ஆத்தா முத்துப் போட்டிருக்கிறாள்’ என்பார்கள். வேப்பிலை களை பறித்து படுக்கைக்கு அருகே போடுவார்கள். சிகிச்சை அளிப்பது ‘பாவம்’ என்று நம்பினார்கள். ‘பெரியம்மை’ என்பது ஒரு கடுமையான நோய்க் கிருமியின் தொற்று. சிகிச்சை இல்லாமையினால் ஏராளமான இறப்புகள் நடந்தன. அதற்குப் பிறகுதான் ஆட்சியாளர்கள் தலையிடத் தொடங் கினார்கள். உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க முன்வந்தபோது அதை மக்கள் ஏற்க மறுத்த நிலையிலும் உயிர் ஆபத்துகள் குறித்து விளக்கி பரப்புரை செய்யும் நிலை உருவானது. ‘பெரியம்மை’ ஒழிப்புக்காகவே தனி சுகாதாரத் துறை உருவாக்கப்பட்டு ஊழியர்களும் நிய மிக்கப்பட்டனர். தொடர்ச்சியான இயக்கங் களுக்குப் பிறகு ‘மாரியாத்தா’ மூட நம்பிக்கை முற்றாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
“உங்கள் ஊரில் எவருக்காவது பெரியம்மை நோய் வந்திருக்கிறதா? உடனே சுகாதார மய்யத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள்” என்று கிராமங்களில் சுகாதாரத் துறையே அறிவிப்புப் பலகைகளை வைத்தது. இவையெல்லாம்கூட பகுத்தறிவுப் பரப்புரைதான்; பகுத்தறிவுப் பரப்புரையினால் ‘மனம் புண்படுகிறது’ என்று இப்போதும் எதிர்ப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். உயிர் போவதற்கு வழி வகுக்கும் மூட நம்பிக்கைகளை ஒழித்து மக்களைக் காப் பாற்றும் நோக்கில் அறிவுச் சிந்தனைகளை விதைப்பது, மனம் புண்படும் செயலா?
இந்த மூட நம்பிக்கைகள் ஒரு காலத்தில் உலகம் முழுதும் கொடிகட்டிப் பறந்தன. இப்போது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி யில் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள். நோய் தீர்க்க மருத்துவர்களை நாடுகிறார்கள்.
அமெரிக்காவில் இந்தியாவைப்போல ‘புரோகித-பூசாரிகள்’ கூட்டம் இருந்தது. “கன்னிமேரியின் தாய் என மதிக்கப்படுவரின் எலும்பு என்னிடம் இருக்கிறது; இந்த எலும்பினால் நோயை குணமாக்கலாம்; பேயை விரட்டலாம்” என்று கத்தோலிக்க பாதிரியார்கள் ஏமாற்றி வந்தார்கள். பாமர மக்கள் அதையும் நம்பி வந்தார்கள் என்று உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவு மேதை இங்கர்சால் கூறுகிறார். அங்கே நிலவிய மூடநம்பிக்கை குறித்து அவர் கூறிய கதை இது.
“ஒரு ஞானியின் எலும்புமீது கட்டப்பட்ட ஆலயத்துக்கு ஒரு பாதிரி அதிபதியாக இருந்தார். அந்த எலும்புகளுக்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தியிருந்ததாம். அனைவரும் தொடுவதற்கு ஏற்ற வாறு அந்த எலும்புகள் ஒரு பீடத் தின் கீழ் புதைக்கப்பட்டிருந்தன. பீடத்தின் கீழ் உள்ள ஒரு துவாரம் வழியாகக் கையை விட்டு நோயாளிகள் அந்த எலும்பைத் தொட்டுவிட்டுச் செல்வார்கள். அந்த எலும்பினால் நன்மை அடைந்ததாகப் பலர் நம்பினார்கள். அநேகர் பெருந்தொகை காணிக்கையாக வழங்கினார்கள்.
ஒருநாள் அந்த ஆலய அதிகாரியான பாதிரி தன் உதவிப் பாதிரியை நோக்கிப் பின் வருமாறு கூறுகிறான்:
“மகனே ஆலய வருமானம் குறைந்துவிட்டது. கோவில் காரியங்களை நான் தனியாக நடத்திக் கொள்வேன். நீ வேறு இடத்துக்குப் போ. என்னுடைய வெள்ளைக் கோவேறு கழுதை யையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து உன்னை ஆசீர்வதித்து அனுப்புகிறேன்” என்றான். அப்படியே அந்த இளைஞன் அந்தக் கோவேறு கழுதை மீதேறி வேறிடத்துக்கு சென்றான். கொஞ்ச நாட்களில் அவனிட மிருந்த பணம் செலவாகிவிட்டது. கோவேறு கழுதையும் செத்துப் போயிற்று. உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. கழுதையைப் பாதை யருகே ஒரு இடத்தில் புதைத்தான். பாதை வழி வருவோர் போவாரை நோக்கி “நற்குணமுடைய சகோதரர்களே, இந்த இடத்தில் ஒரு புண்ணிய வான் சமாதி வைக்கப் பட்டிருக் கிறார். அவர் சமாதி மீது புதிய ஆலயம் கட்டப் பொருளுதவுங்கள்” என்று அவன் மன்றாடிக் கேட்கத் தொடங்கினான்.
அவ்வளவுதான் உடனே தாராளமாகப் பணம் கிடைத்தது. வெகுசீக்கிரம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. கழுதையின் எலும்பைத் தொட்டுப் புனிதரா வதற்காக ஆயிரக்கணக்கான வர்கள் ஒவ்வொரு நாளும் அக் கோவிலுக்கு வரத் தொடங் கினார்கள். அந்த இளம் பாதிரி வெகு சீக்கிரத்தில் பணக் காரனானான்.
ஒரு நாள் தன் பழைய குருவைப் பார்க்க வேண்டுமென்று அவனுக்கு ஆசை உண்டாயிற்று. ஒரு பெரிய பரிவாரத்துடன் அவரைப் பார்க்கச் சென்றான். அவன் பழைய ஆலயத்தை அடைந்தபோது அந்த வயது முதிர்ந்த பாதிரி ஆலய வாயிலில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். தன் உதவிப் பாதிரி வெகு ஆடம் பரத்துடன் வந்திருப்பதைப் பார்த்து அவர் திகைப்படைந்தார். இளைஞன் தன்னை அறிமுகப் படுத்தியதும் முதிய பாதிரி ஆச்சரி யத்துடன் “மகனே! இதுகாறும் நீ எங்கு சென்றிருந்தாய், நீ வெற்றி யடைந்த கதையைச் சொல்லு” என வெகு ஆவலுடன் கேட்டார்.
“ஹா! ஹா! கிழவர்களுக்கு மூளை கிடையாது. இளைஞர் களுக்குத்தான் மூளையுண்டு; யூக சக்தியுண்டு; நாம் தனிமையாக இருக்கும்போது என் கதையைச் சொல்லுகிறேன்” என இளைஞன் ஆர்ப்பாட்டமாய் விடையளித்தான்.
கடைசியில் இளைஞன் தன் கதையை விரிவாகக் கூறி, “இளை ஞர்களுக்குத்தான் மூளையுண்டு; கிழவர்களுக்கு மூளையில்லை” என்று மறுபடியும் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினான்.
உடனே அந்த முதியவர் புன்ன கையுடன், “மகனே துள்ளாதே. கிழவருக்கு மூளையில்லை யென்று சொல்லாதே. உன்னை விட உன் மூத்தவன் இளைத்தவன் அல்ல. நீயும் நானும் வாழ்ந்த இந்தக் கோயில் – நாம் இருவரும் எத்தனையோ அற்புதங்கள் நடத்திய இந்தக் கோயில் உன் கழுதையின் தாயின் எலும்புகளின் மீதுதான் கட்டப்பட்டிருக்கின்றது” என விடையளித்தார். ட
பெரியார் முழக்கம் 23062016 இதழ்