காவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’
தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டங் களில் வீரச்சாவை தழுவிய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வுபூர்வமாக 1989ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகிறது.
1990ஆம் ஆண்டிலிருந்து மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புலியூர் பிரிவிலும் ‘மாவீரர் நாள்’ நிகழ்வு நடந்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புலிகள் 1984லிருந்து 1986 முடிய ஆயுதப் பயிற்சி எடுத்த பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மூன்று
ஆண்டுகள் நடந்த இந்த பயிற்சியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயிற்சி பெற்றார்கள். மேதகு பிரபாகரன், இந்த பயிற்சித் தளத்துக்கு அவ்வப்போது வந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தார். களத்தில் வீரமரணமடைந்த அவரது நினைவாக அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நினைவு நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் பயிற்சி எடுத்த பகுதிக்கு ‘புலியூர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புலியூரில் காவல்துறை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்து வருகிறது. உயர்நீதிமன்றம் வழியாக அனுமதி பெற்று நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டும் இதேபோன்று காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் உயர்நீதிமன்ற அனுமதியோடு நிகழ்வுகள் நடந்தன. நிகழ்வை ஒழுங்கு செய்த ‘தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒழுங்கிணைப்புக் குழுவுக்காக’ வழக்கறிஞர் திருமூர்த்தி உயர்நீதி மன்றத்தில் வாதாடினார்.
நிகழ்வில் பங்கேற்க தமிழகம் முழுதும் இருந்தும் கழகத் தோழர்களும் உணர்வாளர்களும் குடும்பத்துடன் திரண்டனர். தளபதி பொன்னம்மான் நிழற்கூடத்தில் மாவீரர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு நீண்ட கியூ வரிசையில் ஏராளமான குழந்தைகள், பெண்கள், தோழர்கள், பொது மக்கள் வரிசையாக காத்திருந்து, மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திய காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. மாவீரர்களுக்கான ‘வீர வணக்கப் பாடல்’ ஒலிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்களிப்பு வழங்கி, விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டு, தனது கணவருடன் ஓராண்டு ‘தடா’ சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த பெருமைக்குரியவருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்று நினைவுச் சுடர் ஏற்றி வீரவணக்க நிகழ்வை தொடங்கி வைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து தோழர்களும் பொது மக்களும் வரிசையில் காத்திருந்து மலர் தூவி, வீரவணக்கம் செலுத்தினர்.
தோழர் செ. வாசுதேவன் தலைமையில் மு.சிவகுமார் முன்னிலையில் வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. தோழர் கொளத்தூர் மணி தனது உரையில், “இந்தியாவிலேயே விடுதலைப் புலிகளின் முதல் பயிற்சிக் களம் இங்குதான் நடந்தது. பல முன்னணித் தலைவர்கள் இங்கே பயிற்சிப் பெற்றார்கள். மூன்றாண்டுகள் நடந்த பயிற்சிக்கு இப்பகுதி மக்கள் பேராதரவு வழங்கினர். சிறப்பு விருந்தினராக வந்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வந்தார். வாரந்தோறும் 7000 முட்டைகளை தொடர்ந்து அனுப்பினார். இப்போது ஈழத்தில் தமிழ் மக்கள், கடும் இராணுவ ஒடுக்குமுறையின் கீழ் இருந்து வருகிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு இறையாண்மை கொண்ட அரசியல் தீர்வு நோக்கி பிரச்சினையை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தொடர்ந்து அதற்கான கடமை யாற்றுவோம்” என்று குறிப்பிட்டார்.
விடுதலை இராசேந்திரன் தனது உரையில், “புலிகள் பயிற்சி பெற்ற இடத்திலேயே நடக்கும் மாவீரர் நாள் இது ஒன்றுதான். இங்கே பயிற்சி பெற்று, போராட்டக் களம் நோக்கிச் சென்ற பல போராளிகள் ஆயுதப் பயிற்சிகளை மட்டுமல்ல, பெரியார் சிந்தனைகளையும் இங்கிருந்து தமிழ் ஈழத்துக்குக் கொண்டு சென்றனர். போர் நிறுத்தம் வந்த பிறகு, விடுதலைப் புலிகள், கிளிநொச்சியை தலைமையகமாகக் கொண்டு நடத்திய ஆட்சியில் மதச்சார்பின்மை, ஜாதி ஒழிப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதை 2004ஆம் ஆண்டு அங்கே நான் சென்றபோது நேரில் பார்த்தேன். ஜாதி, மதம் இல்லாத அரசியல் சட்டம்; வடமொழி தவிர்த்து, தமிழ்ப் பெயர் சூட்டல்; பெண்களுக்கான சமத்துவம்; அறிவியல் கருத்துப் பரப்பல்” என்று பெரியார் முன் வைத்த கருத்துகள் அங்கே செயல்வடிவம் பெற்றிருந்ததை சுட்டிக் காட்டினார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது உரையில், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முடியாமல் போய் விட்டதே என்ற தனது கவலையைப் போக்கிட தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக தாம் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார். விடுதலைப் போராட்டத்துக்காக நானும் எனது கணவரும் ஓராண்டு சிறைக்குச் செல்லும் வாய்ப்பையும் ஜெயலலிதா வழங்கி விட்டார். இங்கே பயிற்சி பெற்ற பல முன்னணி தளபதிகளுடன் பழகும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இந்த பயிற்சிக்காக பொது மக்களிடம் சென்று நன்கொடையாக போராளிகளுக்கு தேவையான பொருள்களை திரட்டியதையும் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
நிகழ்வில், ‘ஈழத்தில் விருந்தோம்பல்’ என்ற நிதர்சன் தயாரித்த இசைத் தகடும், தங்கமாறன் எழுதிய ‘நெருப்பாற்றில் நீந்தியவர்கள்’ என்ற புதினமும், தமிழ் இன்பனின் ‘போராளியின் இரவுகள்’ என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டன. சுப்புலட்சுமி ஜெகதீசன், நூல்களையும் இசைத் தகட்டையும் தானே முன்னின்று விற்பனை செய்தார்.
கழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 01122016 இதழ்