அய்யகோ! விக்னேசு இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா?
விக்னேஷ் என்ற 21 வயது இளைஞர் தீக்குளித்து, உயிர்க் கொடை வழங்கிவிட்டார். நெஞ்சம் பதறுகிறது. நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமைக்காக கருநாடக அரசைக் கண்டித்து நடத்திய பேரணியில் விக்னேசு இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து விட்டார். தனது முகநூலில் பேரணிக்கு முதல் நாளே ‘தீக்குளிப்பு நடக்கப் போகிறது’ என்று சூசகமாக அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் சமூகத்தைப் பற்றி கவலைப்படுகிற இளைஞர்கள் வெகு சிலர்தான். உல்லாசம், பொழுது போக்கு, கேளிக்கை என்று வாழும் இளைஞர்களிடையே அதிசயமாக இன உணர்வோடு இனத்தின் விடுதலைக்காகப் போராட வரும் இத்தகைய இளைஞர்கள் இப்படி தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் விபரீத முடிவுகளை ஏன் எடுக்க வேண்டும்?
உணர்ச்சிகரமான பேச்சுகளும் அதற்காக கட்டமைக்கப்படும் சொல்லாடல்களும் இளைஞர்களை வெற்று உணர்ச்சிக்குள் மூழ்கச் செய்து விடுகின்றன. தெளிந்த சமூக அரசியல் பார்வை; அதற்கான போராட்டப் பாதை; இதை முன்னெடுப்பதற்கான களச் சூழல் இவைகளோடு பொருத்திக் கொண்டு தொடர்ந்து செயலாற்றுவதற்கான உறுதியை உணர்வுகளாக்கிக் கொள்ள நமது தோழர்கள் பக்குவப்பட வேண்டும். டெல்லியிலும், குஜராத்திலும் அரசியல் தலைமைகள் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து, இளைஞர்களே மக்களை அணி திரட்டும் சூழலை கண்கூடாகப் பார்க்கிறோம். விக்னேசு குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவரது தந்தை ஒரு தையல் தொழிலாளி. அவரது வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருக்கிறது என்ற செய்திகள் நெஞ்சைப் பிளக்கின்றன.
விக்னேசுகள் தற்கொலைக்கு பதிலாக தலைமைப் பொறுப்புகளை ஏற்று வழி நடத்த வேண்டியவர்கள். தன்னை சுற்றியிருக்கும் நட்பு மற்றும் உறவு வட்டாரங்களை சமுதாயக் கவலையோடு சிந்திக்கச் செய்து அவர்களை வளர்த்தெடுக்கும் கடமையாற்ற வேண்டியவர்கள். ஒவ்வொரு இளைஞரும் இந்தப்பாதையில் தங்கள் பங்களிப்பை வழங்கினால், தமிழ்நாட்டின் விடியலுக்கான களம் மேலும் விரைவாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
‘விக்னேசு’வுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்! இனியும் தொடர வேண்டாம் தீக்குளிப்புகள்!
பெரியார் முழக்கம் 22092016 இதழ்