அரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது!
ஆர்.எஸ்.எஸ். சீருடையை மாற்றிக் கொண்டு விட்டதாம். அரைக்கால் காக்கி சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை (பேண்ட்) போட ஆரம்பித்து விட்டார்கள்.
90 ஆண்டுகால பாரம்பர்யத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்கள். ‘காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்கிறார்’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத். சரிதான்; 90 ஆண்டுகாலமாக பெண்களை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக்க முடியாது என்று தடை போட்டு வைத்திருக்கிறீர்களே, அதையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே! அரைக்கால் சட்டை போடுவதற்குத்தான் பெண்களுக்கு சங்கடம்; இப்போதுதான் முழுக்கால் ‘பேண்ட்’ வந்துவிட்டதே! இனிமேலாவது பெண்களை சேர்க்கலாமே! ‘நாம் எப்போதும் இந்துக்கள்; இந்துக்களுக்குள் பேதம் கூடாது’ என்கிறார் பகவத். நல்லது; இதற்குப் பிறகாவது, “நான் பிராமணன்; உயர்குலத்தவன்; ஏனைய இந்துக்கள் ‘சூத்திரர்கள்’; என்னுடைய ‘பிராமண’ அடையாளத்துக்காகவே பூணூல் போடுகிறேன்” என்று பார்ப்பனர்கள் பூணூல் போட்டு திரிகிறார்களே! ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகிவிட்டால் எந்த ‘இந்து’வும் பூணூல் போடக் கூடாது என்று உடம்புக்கும் ஒரு பொதுவான அடையாளத்தைக் கொண்டு வரலாமே!
‘இந்து’ என்றால் ஒருவர் விபூதியும், ஒருவர் நாமமும், அதிலும் ஒருவர் தென்கலை அடையாளம்; மற்றவர் வடகலை அடையாளம்; உச்சிக் குடுமி, முன் குடுமி, பின் குடுமி அடையாளம் என்று நமக்குள் ஏன் பாகுபாடு? இந்து என்ற ஒற்றை அடையாளம் போதுமே! ஏன் முகம், நெற்றியில் வெவ்வேறு அடையாளங்கள்?” என்று மாற்றத்தைக் கொண்டு வரலாமே! இப்படிக் கேட்டால், “இவை எல்லாம் ஜாதிக்கான அடையாளங்கள். ஜாதி இல்லாவிட்டால் ‘இந்து’ என்பவனே இருக்க முடியாதே!” என்று எதிர் கேள்வி போடுவார்கள். அதற்கு நம்மால் பதில் சொல்ல முடியாது! ஆமாம்! முழுக்கால் சட்டை, தொப்பி, தடிக் கம்புகளோடு இந்து ‘ஒற்றுமை’யை நிறுத்திக் கொண்டு விடுவதுதான் நல்லது! ஒரு சந்தேகம்! அதாவது ‘பேண்ட்’ போடுவது ‘இந்து’ கலாச்சாரமா? வெள்ளைக்காரன் கலாச்சாரமா? – கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 20102016 இதழ்