மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!
“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா?” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.
கடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம் எழுதுவதேகூட ஒரு மூடநம்பிக்கை தான்.
மூத்த குடிமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.சந்திரசேகர், இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்திருக்கிறார். “இளநீர் உடலுக்கு ஆரோக்கியமானது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டு, இளநீர் முழுதும் தரையில் வீணடிக்கப்படுகிறது. இந்த இளநீரை ஏன் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது? நாங்கள் தேங்காய் உடைப்பதையோ, சடங்குகளையோ எதிர்க்க வில்லை. கடும் குடிநீர் நெருக்கடி நிலவும்போது இந்த இளநீரை ஏன் வீணடிக்க வேண்டும்? கோயில் நிர்வாகிகளிடம் இதைத் தெரிவித்தோம். ‘இளநீரை சேமிப்பதற்கு பாத்திரங்கள் வேண்டும்’ என்றார்கள். அதை நாங்களே வாங்கித் தருகிறோம் என்று கூறினோம். ஆனால், அர்ச்சகர்களோ ‘பகவானுக்கு காணிக்கையாக்கப்பட்ட உணவை மனிதர்கள் சாப்பிடக் கூடாது’ என்கிறார்கள். அற நிலையத் துறை அதிகாரிகளும் இதே கருத்தையே கூறுகிறார்கள். இது குறித்து பொது நல வழக்கு தொடரப் போகிறோம்” என்கிறார் அந்த பேராசிரியர்.
பெரியார் இயக்கத்தினர் மட்டுமே செய்து வந்த தொண்டை இப்போது மூத்த குடிமக்களே சமுதாயப் பார்வையில் கையில் எடுத்திருப்பது நல்ல திருப்பம்.
பெரியார் முழக்கம் 14042016 இதழ்