”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை”

”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை” – நாச்சியார்கோவிலில் தோழர் கொளத்தூர்மணி பேச்சு.

தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர்விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச்சுடரொளி குடந்தைஆர்பிஎஸ்ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது.

துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர்நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்;ச்சி நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகபேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார்.

இறுதியாக, கழகத்தலைவர் தோழர்கொளத்தூர்மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம் என்றால் அது அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் அரசு வேலைக்கு போகக்கூடிய வாய்ப்பை நாம் உருவாக்குவதே ஆகும். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அரசு வேலைக்கு சென்றால் அவர்களுக்கு உளவியலாக ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்று சொல்லி அதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி நமக்கான உரிமைகளை பெற்று தந்தவர் பெரியார்.

அந்த வாய்ப்பில் கூட நாம் நுழைய முடியாமல் மெல்ல மெல்ல திணறி கொண்டிருந்தபோது இங்கே சென்னை மாகாணத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் வகுப்புவாரிஉரிமை திட்டம் ஆகும். நூற்றுக்கு நூறு வேலை வாய்ப்பை அனைவருக்கும் பிரித்து கொடுப்பது தான் அதன் நோக்கம். அப்படிபட்ட முறை சென்னை மாகாணத்தில் இருந்தது. அப்போது மத்திய அரசில் இவ்வாய்ப்பு கிடையாது.

ஆனால், மத்திய அரசுப் பணிகளில் அதுவும் தமிழ்நாட்டில் சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வகுப்பு வாரி உரிமை இருந்தது.

சென்னை மாகாணத்தில் என்ன விகிதத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதோ அதே விகிதம் இங்கு இருக்கிற மத்திய அரசு அலுவலகங்களில் அது வங்கி துறை, அஞ்சல்துறை, தொடர் வண்டித் துறை, சுங்கத் துறை என எந்த துறையானாலும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் நமக்கான வகுப்புவாரி உரிமை இருந்தது.

1935-ல் தனியாக ஒரு சட்டத்தை போட்டார்கள். சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதார் வகுப்புவாரி உரிமை சிறப்பு சட்டம் என அதற்கு பெயரிடப்பட்டது. அப்போது இந்தியாவில் வேறு எந்த மாகாணத்திலும் இவ்வாறு ஒரு சட்டம் இயற்றப்படவில்லை.

அதில் ஒவ்வொரு வேலை இடங்களையும் பிரித்துக் கொடுக்கும் திட்டம் இருந்தது. முதலில் 12 ஆக பிரிக்க வேண்டும்.12 இடங்களில் இரண்டு இடங்கள் பார்ப்பனர்களுக்கு, அய்ந்து இடங்கள் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு, இரண்டு இடங்கள் இசுலாமியர்களுக்கு, இரண்டு இடங்கள் கிருஸ்துவர்களுக்கு, ஒரு இடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என பிரித்துக் கொடுக்கப்பட்டது. அப்போது எட்டு சதவிதம் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 1947ல் 14 சதவீதமாக பின்பு உயர்த்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வந்தது.

ஆனால், அப்போது மத்திய அரசு அலுவலகங்களில் கூட பணியாற்றுகின்ற உரிமையை இங்கு ஆட்சியில் இருந்த ஒரே அரசான நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆன பார்பனர் அல்லாதார் இயக்கம் தான் கொடுத்தது. அதற்கான முன்னெடுப்புகளை அழுத்தங்களை கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

அதன் பின்பு தான் மத்திய அரசு சட்டம் இயற்றியது அதுவும் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் அறிக்கையை 1980களில் கொடுத்து, 1990களில் தான் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியில் தான் வேலை வாய்ப்புகளில் மட்டும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு பின்பு அதுவும் பார்பனர்களின் எதிர்ப்புக் காரணமாக உச்சநீதி மன்றத்தில் சென்று வழக்காடி தீர்ப்பு பெற்று 1993ல் இருந்து நமக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே அதுவும் 1936ல் லேயே நமக்கு வாய்ப்பு கிடைத்தது. வகுப்புவாரி உரிமை நமது பிறப்புரிமை என முழங்கி பெரியார் தான் அத்தகைய வாய்ப்புகளை நமக்கு உரிமையை வாங்கி தந்தார். இடஒதுக்கீட்டின் சிறப்பு சாதனையாக இன்று வரை நாம் பெருமைபட்டுக் கொள்கிறோம்.

வகுப்புவாரி உரிமைக்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதல் சட்ட திருத்ததை 1951ல் கொண்டு வர செய்தவர் பெரியார்.

நம்மோடு வாழ்ந்த, நம் மேம்பாட்டிற்காக, நம் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய மகத்தான தலைவரான தந்தை பெரியார் அவர்கள் தான் நாம் இப்போது நம் கண்முன்னால் காண்கின்ற பலன்களை உரிமைகளை வாங்கி கொடுத்தார். அதற்காக தான் தந்தை பெரியாருக்கு விழா எடுத்து நம் நன்றியினை காட்டிக் கொண்டிருக்கின்றோம் எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

பின்பு, நாச்சியார்கோவில் பொதுக்கூட்டத்தை கழகத் தோழர்களோடு இணைந்து மிக சிறப்பாக ஏற்பாடு செய்த மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்முகம்மது, பெரியாரிய சிந்தனையாளர் சோலை மாரியப்பன் மக்கள் உரிமைக் கூட்டணி அமைப்பாளர் இரா. சாத்தையன் ஆகியோரை கழகத் தலைவர் ஆடை போற்றி பாராட்டினார்.

முடிவில், திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் மா. கரிகாலன் நன்றி கூறினார்.

கழகப் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு நாச்சியார்கோவில் நகரம் முழுவதும் கழக கொடிகள் கட்டப்பட்டு, விளம்பர பலகைகள் நிறைய வைக்கப்பட்டிருந்தன.
செய்தி – மன்னை காளிதாசு.

14666059_1824532964497262_4919533766738717949_n 14680517_1824533071163918_1450122789746163410_n 14690840_1824533184497240_4155913632120410214_n 14705747_1824532854497273_7136881136219847984_n

You may also like...