இப்படியும் இருந்தன மூடநம்பிக்கைகள்!
தேவதாசி பிரதா: ஒரு இளம் பெண்ணின்வாழ்க்கையை கடவுளின் கவுரவத்திற்கு தியாகம் செய்வது என்ற பெயரால் சாகடிப்பது; தேவதாசி முறையில் ஒரு இளம் பெண்ணைத் கடவுளுக்கு மணம் முடிப்பது; அதன் மூலம் பாலியல் தொழிலில் இளம் பெண்ணை உள்ளாக்குவது; கங்கை நதியில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொள்வது; இவை போன்ற இளம் பெண்களுக்கு இழைக்கும் சமூக பழக்கவழக்கம் எனும் கொடுமைகள் ‘தேவதாசி பிரதா’ எனும் பெயரில் நடந்தது.
காஸிகர்வதா: காசியில் உள்ள விஸ்வேஸ்வ நாத் ஆலயத்தில் ஒரு தீர்த்தக் கிணறு இருந்தது. மோட்சம் அடைய விரும்புபவர்கள் அந்தக் கிணற்றில் வீழ்ந்து மரணம் அடைந்தால் மோட்சமடைந்து விடலாம் என்ற நம்பிக்கை. இது பண்டைய மூடநம்பிக்கை.
சதி பிரதா : கணவன் இறந்துவிட்டால் அவனோடு மனைவியும் உடன்கட்டை ஏறி எரிந்து உயிருடன் சாக வேண்டும். இளம் மனைவி மறுத்தால் உறவினர் சேர்ந்து பலாத்காரமாக அவளை எரியும் நெருப்பில் தள்ளி விடுவார்கள். இது பண்டைய மூட நம்பிக்கை.
இரத யாத்ரா : மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜெகநாத்புரியில் திருவிழா நடைபெறும். இரத உற்சவத்தைக் கண்டு தரிசிக்க மக்கள் திரள் திரளாகச் செல்லுவார்கள். சிலர் ஓடிக் கொண்டிருக்கும் இரதத்தினுடைய சக்கரத்தின் அடியில்பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வார்கள். அவ்வாறு உயிர் துறந்தவர்கள் மோட்சத்திற்குச் சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை. இது அன்றைய மூடநம்பிக்கை.
கங்கை பிரவாஹ் : குழந்தை இல்லாதவர்கள் கங்கையில் நீராடினால் குழந்தைப் பிறக்கும்.ஏனெனில், குழந்தை தரும் பெண் தேவதை கங்கை. இந்த நம்பிக்கை வளர்க்கப்பட்டது; இதனால் குழந்தை இல்லாதவர்கள் ‘மலடு’ என்ற பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக. குழந்தை பிறந்தால் முதலில் பிறக்கும் குழந்தையை கங்கைக்கு அர்ப்பணித்து விடுவதாக நேர்த்திக் கடன் எடுப்பார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கங்கை நதியில் குழந்தையை மூழ்கடித்துச் சாகடித்து விடுவார்கள். கங்கையின் நேர்த்திக் கடனைத் தீர்ப்பார்கள்.
மஹா பிரஸ்தான்: வயதானவர்கள் தண்ணீரில் விழுந்து அல்லது எரியும் நெருப்பில் பாய்ந்து உயிருடன் சாவது. இவ்வாறு இறந்தால் மோட்சம் செல்லுவார்கள் என்ற நம்பிக்கை வளர்க்கப்பட்டது.
‘நரவதா’ : ஒரு குழந்தையின் நலனுக்காக தாய் தந்தை இல்லாத ஆதரவற்ற ஏழைகளின் குழந்தையைப் பிடித்துக் கொண்டு வந்து, கடவுள் அல்லது தேவதைக்குப் பலியிடுவது.
கன்யவதா: இராஜபுதனத்தின் இராஜ புத்திரர்கள் தங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது தந்தைகள் தங்களின் உறவினர் முன்பு தலைகுனிந்து வணங்க வேண்டும். அவ்வாறு பணிவதை இராஜபுத்திரர்கள் விரும்புவதில்லை. இதனால் பெண் குழந்தை பிறந்த உடனே கொன்று விடுவது பழக்கம். சமூக சீர்திருத்தவாதிகள் நடத்திய இயக்கங்களின் விளைவாக இது போன்ற நடவடிக்கைகள் பல கடுமையான சட்டங்கள் போட்டு தடுத்து நிறுத்தப்பட்டன என்பது வரலாற்றுண்மையாகும்.
நன்றி : எம்.வி. சுந்தரம் எழுதிய “சாத்திரப் பேய்களும், சாதிக் கதைகளும் (மார்க்சியப் பார்வை)” நூலிலிருந்து
பெரியார் முழக்கம் 28072016 இதழ்