சோதிடத்தைப் பற்றிஆச்சாரியார்!

ஜோதிடத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று  இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி)  கூறியிருக்கிறார்.  அவர் மேற்கு வங்க முதல் ஆளுநராக இருந்தபோது  அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித்தனர்.

வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். இராஜாஜியின் முழுப் பெயரில் உள்ள எழுத்துக்களைக் கூட்டி, அதை வைத்து, ‘எண் சோதிடம்’ கூறுவதாக அவரை ஒரேயடியாக புகழ்ந்து  நல்ல பலன்களாகவே கூறினர்.

இவைகளுக்கு இராஜாஜி பதிலளித்துப் பேசுகையில், “உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோதிடத்தை நம்புவதில்லை; எனக்கு அதில்  நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று  உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோதிடத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை  நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள்.

இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன”  என்றார்.

(இராஜாஜியின் இராணுவச் செயலாளராக  இருந்த டாக்டர் பீமனேஷ் சாட்டர்ஜி எழுதிய ‘இராஜாஜியுடன் ஆயிரம் நாள்கள்’ என்ற  நூலிலிருந்து. )

 

ஆவியை படம்பிடிக்க முடியுமா?

“ஆவிகளை படம் பிடிக்க முடியும்” என்று  மந்திவாதிகள் கூறுவது உண்மைதானா என்பதைக்  கண்டறிய ஒரு குழுவொன்று அமைக்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை ‘டெய்லி மெயில்’ (னுயடைல ஆயடை)  என்ற பத்திரிகை செய்தது. ஆவிகளை அடையாளம் காண மூன்று ஆன்மீகவாதிகளையும் அவற்றைப் படம்  எடுக்க மூன்று புகழ்பெற்ற புகைப்பட நிபுணர்களையும்  அது நியமித்து ஆவிகளைப் படமெடுக்கக் கூறியது.  ஆவிகளை உணர்ந்து படம் எடுப்பதற்கு அதற்கான  மனோ பக்குவம். உளநிலையும் புகைப்பட நிபுணர்களுக்கு இல்லை என்று மூன்று ஆன்மீகவாதிகளும் புகைப்பட நிபுணர்கள் மீது குற்றம்சாட்டினர். அதனால் அதில் வெற்றி பெற முடியாது என்று அந்த ஆன்மீகவாதிகள் கூறினர். தங்கள் முன் ஆவிகள் என்று கூறக்கூடிய எந்த வகையான நிரூபணங்களையும் ஆன்மீகவாதிகள் காட்டவில்லை. எனவே அவர்கள் கூறும், ‘ஆவி படம்’ சாத்தியமானதல்ல என்று புகைப்பட நிபுணர்கள் பதில் கூறினர். ஆவிகளின் படங்கள் என்று அந்த ஆன்மீகவாதிகள் கூறிய படங்களை வரவழைத்து அந்தப் படங்களை மூன்று புகைப்பட நிபுணர்களும் நுணுக்கமாக ஆராய்ந்தனர். ஆய்வில் அது ஆவியின் படங்கள் அல்ல. அதற்கான ஆதாரமும் சிறிதளவேனும்  இல்லை. மக்களை ஏமாற்றும் மோசடி – ஏமாற்று  வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டி தாங்களாகவே தயாரித்த படங்கள் அவை என்று அந்த புகைப்பட நிபுணர்கள் அறிவித்தனர்.

தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 1909 ஜூன் 25

 

சோதிடம் பொய் : 186 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை

“மக்களின் வாழ்க்கைக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்தவிதமான அறிவுப்பூர்வமான ஆதாரமும் கிடையாது. சோதிடம் பொது மக்களிடையே மூடத்தனத்தை வளர்த்துப் பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்த சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப் போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவைகள்.”

இவ்வாறு 186 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு ‘தி ஹியுமனிஸ்ட்’ ஏட்டின் சிறப்பிதழிலே அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுள் 18 விஞ்ஞானிகள் ‘நோபல்’ பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஊதுவத்தியின் ஆபத்து

வாரத்திற்கு ஒரு நாளைக்கு மேல் ஊதுவத்தியை உபயோகித்து அதிலிருந்து வெளிவரும் நறுமணப் புகையை முகர்வதால் இரத்தப் புற்றுநோய் உண்டாகலாம் என்கிறது அமெரிக்காவிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவிப்பு ஒன்று! ஊதுவத்திப் புகையில் பென்ளோபைரின் ஹைட்ரோ கார்பன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன.

இதனால் மூச்சுக் குழலில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது இந்த அறிவிப்பு

பெரியார் முழக்கம் 28072016 இதழ்

You may also like...