இந்துத்துவ அரசியல்-ஒரு வரலாற்றுப் பார்வை (3) இட்லர் – முசோலினியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ். க. முகிலன்
ஆர்.எஸ்.எஸ். எதற்காக – ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்ற அறிக்கையில் ஹெட்கேவர் கூறுகிறார்:
“மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத் தின் விளைவாக நாட்டில் தேசியத்துக்கு ஆதரவு குறைந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தினால் தோற்று விக்கப்பட்ட சமூகத் தீமைகள் ஆபத்தான முறையில் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றன. தேசியப் போராட்ட வெள்ளம் வடிந்தவுடன் பரஸ்பர விரோதங்களும் பொறாமைகளும் மேற்பரப்புக்கு வந்துள்ளன. வெவ்வேறு சமூகங்களுக் கிடையே சண்டைகள் ஆரம்பமாயின. பிராமணர்-பிராமண ரல்லாதார் சண்டை மிக வெளிப்படையாக நடைபெற்றது. எந்த ஸ்தாபனமும் ஒற்றுமையாக இல்லை. ஒத்துழையாமைப் பாலை குடித்து வளர்ந்த இசுலாமியப் பாம்புகள் தமது விஷ மூச்சினால் கலகங்களைத் தூண்டின.”
சோதிராவ் புலே 1870இல் தொடங்கிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாகிய – உண்மை நாடுவோர் சங்கமும், 1920ஆம் ஆண்டு முதல் மராட்டியத்தில் மேதை அம்பேத்கர் உருவாக்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கமும் வலிமையாக இருந்ததையும், இசுலாமியர் தங்களுக்குரிய பங்கைக் கேட்பதையும்தான் ஹெட்கேவர் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஹெட்கேவருக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக வந்த கோல்வால்கர் அரசியல் செயல்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு, இந்து மதக் கலாச்சாரத்தை முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டினார். ‘அரசியல் தேசியம்’, ‘தேச பக்தி’ என்று பேசுவோர் பிற்போக்காளர்களாகிவிட்டனர் என்று குறை கூறினார். இசுலாமியர்களே இந்நாட்டின் எதிரிகள் என்று அடையாளப்படுத்துவதன் மூலம், பல்வேறு சாதிகளாக, மொழி பேசுவோராக வாழும் இந்துக்களை மதம் என்ற குடையின்கீழ் கொண்டுவர முயன்றார். இவருடைய கோட்பாடு ‘கலாச்சார தேசியம்’ எனப்படுகிறது.
கோல்வால்கரின் இந்துத்துவக் கருத்துகள் ‘சிந்தனைக் கொத்து’ என்ற பெயரில் நூலாக வெளி வந்துள்ளது. அதில் அவர்,
“இந்துஸ்தானத்தில் வசிக்கும் இந்து அல்லாதவர்கள் இந்துக் கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்து மதத்தை மதிப்பதற்கும் போற்றுவதற்கும் கற்க வேண்டும். இந்த இனத்தைப் பெருமைப் படுத்துவதைத் தவிர வேறு எத்தகைய கருத்துக்கும் இடமளிக்கக் கூடாது. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், அவர்கள் அந்நியர்களாக இருக்கக் கூடாது அல்லது இந்து இனத்துக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக, எதையும் எதிர்பார்க்காமல், சலுகைகளைக் கோராமல் அவர்கள் இந்த நாட்டில் வாழலாம். சிறப்பான முறையில் தங்களை நடத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. குடிமக்களின் உரிமைகள் கூட அவர்களுக்குக் கிடைக்காது.”
ஈடு இணையற்ற சுதந்திரப் போராட்ட வீரராகக் காட்டப்படும் சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்து, பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைப்பதாகவும், விடுதலை செய்யுமாறும் கேட்டு அரசுக்குப் பல மடல்கள் எழுதினார். 1924இல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட சாவர்க்கர் அவர் வாழும் இரத்தினகிரி மாவட்ட எல்லையைத் தாண்டக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிபந்தனை 1937ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப் பட்டது. அதன்பின் சாவர்க்கர் இந்து மகாசபையின் தலைவர் ஆனார்.
அவர் இந்துமகா சபையின் தலைவராக இருந்தபோது தான் 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நடந்தது. அப்போது இந்து மகாசபை, தன் உறுப்பினர்கள் உள்ளூர் ஸ்தாபனங்கள், சட்டமன்றங்கள் மற்றும் அரசாங்கப் பதவிகளில் நீடித்துக் கொண்டு, தமது வழக்கமான கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதுதான் சாவர்க்கரின் ‘தேசபக்தி’.
அப்போதுதான் சாவர்க்கர், “அரசியலை இந்து மயமாக்கு; இந்துமதத்தை இராணுவ மயமாக்கு” என்று அறைகூவல் விடுத்தார். இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் நாதுராம் கோட்சே 1948 சனவரி30 அன்று காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
1930களில் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தார். 1932இல் மேற்கு மகாராட்டிரப் பகுதியில் ஹெட்கேவர் சுற்றுப் பயணம் செய்தபோது அவருடன் அணுக்கமான தொண்டராகக் கோட்சே சென்றார். ஆனால் கோட்சே இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். லிருந்து விலகி இந்து மகாசபையில் சேர்ந்தார். தீவிர அரசியலில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடாமையேதான் விலகி யதற்குக் காரணம் என்று சொன்னார்.
காந்தியார் கொல்லப்பட்ட பின் 1948 பிப்ரவரி 4ஆம் நாள் ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. ஆயினும் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்குமாறு அதன் தலைவர் கோல்வால்கர் நேருவுக்கும், பட்டேலுக்கும் மடல்கள் எழுதினார். சமரசத் தூதுவர்களில் ஒருவராக ஜி.டி. பிர்லா செயல்பட்டார்.
எழுதப்பட்ட அமைப்பு விதிகளைப் பின்பற்றுவது, உறுப்பினர் பெயர்களைக் கொண்ட பட்டியலை முறையாக வைத்திருப்பது, கலாச்சாரத் துறையில் மட்டுமே வெளிப்படையாக இயங்குவது ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். ஒப்புக் கொண்டதன் பேரில், 1949 சூலை 12 அன்று, அதன் மீதான தடையை இந்திய அரசு விலக்கிக் கொண்டது. ஆயினும் இந்தியா குடியரசு என்று ஆனபின், 1951இல் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய அரசியல் கிளையாக – அரசியல் கட்சியாகப் பாரதிய சன சங்கத்தை நிறுவியது. வாஜ்பாய், அத்வானி முதலான பல முதன்மையான தொண்டர்களை சன சங்கத்தில் பணியாற்ற அனுப்பியது.
இதற்கிடையில் அயோத்தியில் 1949 திசம்பர் 22-23 நள்ளிரவில், இந்துத்துவக் கும்பல் ஒன்று, பாபர் மசூதியில் இராமர் சிலையை வைத்தது. இராமர் சுயம்புவாக எழுந்தருளினார் என்று கதை கட்டி விடப்பட்டது. இந்து-முசுலீம் கலவரம் மூண்டது. மசூதியில் உள்ள இராமர் சிலையை அகற்றுமாறு முசுலீம்கள் வழக்குத் தொடுத்தனர். பிரதமர் நேரு, உ.பி. முதலமைச்சருக்கு, இராமர் சிலையை அகற்றுமாறு மடல் எழுதினார். முதலமைச்சராக இருந்த கோவிந்த வல்லப பந்தோ, உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியோ சிலையை அகற்றட நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களின் இராமபக்தியே இதற்குக் காரணம்.
1926இல் நாகபுரியில் காலியாக இருந்த ஒரு இடத்தில் ஹெட்கேவர் முதல் ‘ஷாகாவை’த் (உடல் மற்றும் தத்துவப் பயிற்சி) தொடங்கினார். அங்குதான், இப்போது ஆர்.எஸ். எஸ். தலைமை அலுவலகமான ‘ஹெட்கேவர் பவன்’ கட்டப் பட்டுள்ளது. 1928 முதல் சுயம்சேவக்குகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கு சேர்க்கப்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ். இலட்சியத்துக்கும் இந்து தேசத்துக்கும் என் உயிரை அர்ப்பணிப்பேன்’ என்று உறுதிமொழி ஏற்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவரான மூஞ்சே இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்தார். அங்கு இளைஞர்களுக்குத் தரப்படும் பயிற்சியைப் பார்த்தார். அதைப் பற்றி மூஞ்சே, “பாசிசக் கருத்தாக்கம் மக்களிடையே ஒற்றுமை என்கிற சிந்தனையை ஏற்படுத்துகிறது. இந்துக்களை இராணுவ ரீதியில் புத்துயிர்ப்புச் செய்வதற்கு இதேபோன்ற ஒரு அமைப்பு இந்தியாவில் – குறிப்பாக இந்து இந்தியாவில் தேவை. இராணுவச் சீருடையில் இச்சிறுவர்களும் சிறுமியர்களும் எளிய உடற்பயிற்சிகளையும், ‘டிரில்’களையும் செய்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்” என்று எழுதினார்.
இத்தாலியிலிருந்து திரும்பிய பின், 1934 சனவரி 31 அன்று ஹெட்கேவர் தலைமையில், ‘பாசிசமும் முசோலினி யும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய மூஞ்சே, “இந்து தர்ம சாத்திரங்களின் அடிப்படையில் இந்தியா முழுவதும் மதத்தைச் சீரமைக்க வேண்டும். அதனடிப்படையில் இந்து ஒற்றுமையைக் காட்ட வேண்டும். நமது பழைய சிவாஜி அல்லது இன்றைய முசோலினி, இட்லர் போன்ற ஓர் இந்து சர்வாதிகாரியின் கீழ் நமக்குச் சுயராஜ்யம் கிடைக்காத வரையில் நாம் இதைச் சாதிக்க இயலாது. இதற்கான விஞ்ஞானப் பூர்வமான திட்ட மொன்றை உருவாக்கிப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறினார். சாவர்க்கரும் மூஞ்சேயும் கூறிய வகையில்தான் இன்றுவரை இந்தியா முழுவதும் நாள்தோறும் ஆர்.எஸ்.எஸ்சின் ஷாகாக்கள் இராணுவ மயமான இந்துத்துவப் பாசிசத்தை வளர்த்துக் கொண் டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். எப்போதும் இரகசிய அமைப்பாகவே செயல்படும். எனவே வெளியில் தீவிரமாகச் செயல்பட 1964இல் விசுவ இந்து பரிசத் என்ற அமைப்பையும், அதன்பின் பஜ்ரங் தள் என்ற குரங்குப் படையையும் ஏற்படுத்தியது. இந்திராகாந்தியின் நெருக்கடி நிலையை எதிர்த்து 1977இல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் முயற்சியால் உருவாக்கப்பட்ட ‘சனதா’ கட்சியில் சனசங்கம் இணைந் தது; ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் 1984 நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றது. எனவே பாபர் மசூதி உள்ள இடத்தில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்று விசுவ இந்து பரிசத் மூலம் கோரிக்கை வைத்தது. இந்துக்களின் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு, பிரதமராக இருந்த இராசிவ் காந்தி முட்டாள்தனமாக நீண்டகாலமாகப் பூட்டப்பட்டுக் கிடந்த பாபர் மசூதி நுழைவு வாயிலை 1986 பிப்ரவரியில் திறந்து விட்டார். இதனால் இராமனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதன் விளைவாக நரசிம்மராவ் ஆட்சியின் மறைமுக ஆதரவுடன் 1992 திசம்பர் 6 அன்று பாசிச சங் பரிவாரங்கள் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு, அங்கு ஒரு தற்காலிக இராமர் கோயிலை எழுப்பின. இதற்குப்பின் இசுலாமிய தீவிரவாதச் செயல்கள் வன்முறைகளாக வெடித்தன.
பின்னர் 1998 முதல் 2004 வரை பா.ச.க. கூட்டணி ஆட்சி வாஜ்பாய் தலைமையில் நடந்தது. கூட்டணி ஆட்சி என்பதால் பொது சிவில் சட்டம் உருவாக்குதல், காஷ்மீருக்குச் சிறப் புரிமை தரும் 370ஆவது பிரிவை நீக்குதல், அயோத்தியில் இராமர் கோயில் கட்டுதல் ஆகிய திட்டங்களைச் சங் பரிவாரங்களால் நிறைவேற்ற முடியாது போயிற்று. ஆயினும் இந்துத்துவக் கொள்கை பல வழிமுறைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடமும் பரப்பப்பட்டது.
இப்போது தனிப் பெரும்பான்மையுடன் இட்லர், முசோலினி ஆகிய இருவரின் ஒட்டு மொத்த வடிவமாக உள்ள நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்தது முதல், இந்துத்துவப் பாசிச அறிவிப்புகளும், செயல்பாடுகளும் பெருகி வருகின்றன.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் பேசப்பட்ட ‘இந்தியச் தேசியம்’ குறித்து, பெரியார் –
“சாதாரணமாக யோசித்துப் பார்ப்போ மானால், இந்தியாவில் தேசியம் என்கிற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார் – அதாவது மேல் சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தரகர்களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்ப்டடு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு பாதகமும், அபாயகரமுமான அர்த்தமற்ற வார்த்தையாகும்”
என்று சாடினார்.
இந்தியத் தேசியத்தைவிடப் பன்மடங்கு கொடிய நஞ்சு போன்றது இந்துத் தேசியம். எனவே, ‘மகாத்மா’ சோதிராவ் புலே, தந்தை பெரியார், மேதை அம்பேத்கர் ஆகியோர் பார்ப்பன பனியா – இந்துமத மேலாதிக்கத்திலிருந்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் சாதி மக்கள் விடுதலை அடைவதற்கான தத்துவ வலிமையை =- நடைமுறையை வழங்கியிருக்கிறார்கள்.
“நாம் இனி செய்ய வேண்டியது என்னவெனில் இந்த உலகை மாற்றுவதுதான்” என்று மார்க்சு கூறியதுபோல், புலே-பெரியார்-அம்பேத்கர்’ வழியில் இந்துத்துவப் பாசிசத்தை நேர் எதிர் நின்று வீழ்த்துவதுதான். வீழ்த்துவோம் வாரீர்!
நன்றி : ‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர்
பெரியார் முழக்கம் 23062016 இதழ்