எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
23-7-2016 அன்று மாலை 4-30 மணியளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், புது தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) மருத்துவ முதுநிலை (பொது மருத்துவம்) படிப்பில் இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் 77ஆம் இடம் பெற்று, அனுமதியான பத்தே நாட்களில் மர்மமான முறையில் இறந்துபோன திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரவணனின் கொலையைக் கண்டித்தும், வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் குண கோகுல் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மூர்த்தி, வி.சி.க.வின் மாநிலத் துணைச் செயலாளர் துரை வளவன், ஆதிதமிழர்ப் பேரவையின் வழக்கறிஞர் அணிச் செயலாளர் கனகசபை, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சரவணின் தந்தை கணேசன் சரவணனின் கல்வி ஆர்வத்தை, அவரது பொதுநல சிந்தனையை, அவரது உடலைப் பெற சென்றிருந்தபோது தில்லியில் தாங்கள் பார்த்தும் , கேட்டும் அறிந்தவற்றை விளக்கினார். மாணவர் கழக உறுப்பினர் கனல்மதி வரவேற்றார். மாணவர் கழகத்தின் கதிர் முகிலன் நன்றியுரையாற்றினார்.
கண்டன உரைகளில், மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில், தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் துன்புறுத்தப்படுவதால், இடைநிற்றலும், தற்கொலைகளும், பலவேளை எதிர்ப்பு தெரிவிப்போர் கொல்லப்படுவதும் தொடர்ந்து நடப்பதைப் பலரும் கவலையுடன் சுட்டிக்காட்டினர். 19ஆம் தேதிவரை ஏற்படும் காலி இடங்களுக்கு 24-7-2016 அன்று மூன்றாம் கட்ட அனுமதி நடைபெற இருந்தவேளையில் இது நடந்திருப்பதும், இறந்த வலக்கை பழக்கமுள்ள மருத்துவர் சரவணன் தனது வலது கையில் தானாகவே நரம்பினை சரியாகக் கண்டறிந்து தானே ஊசி போட்டிருக்க முடியுமா என்பதும், அவர் கையில் போடப்பட்டிருந்த மருந்தின் காலி குப்பி அவ்வறையில் இல்லாதிருந்ததும், தாளிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் அவரது அறையின் எந்த தாழ்ப்பாளும் எவ்வித சேதமின்றி இருப்பதும் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் 2006இல் இறந்த ஒரு மாணவரின் சாவுகுறித்து விசாரித்த பேராசிரியர் தோரட் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தையும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மாணவர்களின் குறைகளைக் களைய, பல்கலைக் கழக மானியக்குழு 2012ஆம் ஆண்டில் ஆணையிட்டிருப்பதைப் போல ‘பாகுபாடு களைவு அலுவலர்’ ஒவ்வொரு கல்லூரியிலும் உடனடியாக பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.