மறுவாழ்வு ஆணையருக்கு தமிழீழ ஏதிலியர் உரிமை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை

அய்யா!

      வணக்கம். அண்மையில் வந்துபோன வர்தா புயல் தந்த பாதிப்புகளை நீங்கள் அறிவீர்கள். அரசு உடனடி நடவடிக்கைகள் செய்ததும் சென்னை மாநகராட்சி தொய்வின்றிச் செய்யும் பணிகளும் நம்மை மீட்டுள்ளன.  முழுமையாக மீளவேண்டியுள்ளது என்பது வேறு செய்தி.
       புலம்பெயர்ந்து இங்கே வாழ்ந்து வரும் ஈழத் தமிழரின் முகாம்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை நீங்கள் இந்நேரம் அறிந்திருக்கக் கூடும்.எவ்வித  மீட்புப்  பணிகளும் குறிப்பாக கும்முடிப்பூண்டி முகாமில் நடைபெறவில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக்  கொண்டு வர விழைகிறோம்.
       இப்போதுவரை அங்கே மின்சாரம் மருந்துக்கும் இல்லை. அதனால் தண்ணீரை மேலேற்ற முடியவில்லை. குடிப்பதற்கோ கழுவிக்கொள்வதற்கோ  தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். சில தன்னார்வலர்கள் உதவியால் ஏதோ அடிப்படைத் தேவைகளை சிக்கனமாய் நிறைவு செய்துகொள்ளும் அவலநிலை. இரவெல்லாம் இருண்ட வனவாழ்வு வாழ்கின்றனர். மரங்கள் வீடுகள் மேல் விழுந்ததை அப்புறப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை. அவர்களே முயன்று ஒழுங்கு  செய்துகொண்டுள்ளனர். வேலைக்கும் வழியற்று சோற்றுக்கும் கையேந்திக் கொண்டுள்ளனர். இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, தண்ணீர், மின்சாரத்திற்கான எவ்வித முயற்சியும் எடுக்கப்பட வில்லை.
       பெண்களின் நிலையும் குழந்தைகள் முதியவர்கள் நிலையம் எவ்விதம் இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. இப்படி ஒரு இயற்கைப் பேரிடர் வந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்  போது அம்மக்களைப்  பாதுகாக்க யாரும் இல்லை என்பதே நடப்பு நிலையாக உள்ளது. கும்முடிப்பூண்டி முகாம் நிலை இதுவானால் மற்ற முகாம்களின் நிலை பற்றியும் நமக்கு கவலையே மிஞ்சுகிறது.
       கும்முடிப்பூண்டி முகாமில் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து  மீட்புப்  பணிகளையும்  உடனடியாகச் செய்யத் தொடங்க வேண்டும். எந்தத் தன்னார்வலர்கள் அமைப்புகளின் உதவியும் தேவைப்படாத வகையில் அவர்களுக்கான அடிப்படைகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக அவர்களின் தண்ணீர், உணவு, மின்சாரத் தேவைகள் தொய்வின்றிக் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். குறிப்பாக ஈழத் தமிழர் முகாம்கள் மீது அரசு நிர்வாகம் கடைபிடிக்கும்  போக்கு களையப்பட வேண்டும். கும்முடிபூண்டியோடு உங்கள் பொறுப்பின் கீழ் உள்ள அனைத்து முகாம்கள் நிலையை நேரில் கண்டு அவர்கள் நிலை வழி காண வேண்டும்..
     இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக மீட்புப் பணிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
தமிழீழ ஏதிலியர் உரிமை கூட்டமைப்பு
பங்கு பெற்றுள்ள அமைப்புகள் :
அம்பேத்கர் சிறுத்தைகள்
அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம்
இளந்தமிழகம் இயக்கம்
இளைஞர் எழுச்சி இயக்கம்
கலகம்
காஞ்சி மக்கள் மன்றம்
குமுக விடுதலைத் தொழிலாளர்கள்
சி பி (எம் – எல்) மக்கள் விடுதலை
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தமிழ்த் தேச மக்கள் கட்சி
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தமிழக மக்கள் முன்னணி
தமிழர் நலம் பேரியக்கம்
தமிழர் விடுதலைக் கழகம்
திராவிடர் விடுதலைக் கழகம்

You may also like...