வளர்ச்சி நோக்கி மனிதப் பற்று
எனக்கு வளர்ச்சியே முக்கியம். எனக்கு வேறு எந்த அபிமானமும் கிடையாது. இந்த விசியத்தில் மானாபிமானமும் கிடையாது. மானாபிமானனான குடும்ப வாழ்க்கைக்காரனுக்கு அதாவது தனது சுயநலனுக்குத்தான் அது தேவை. மானம் போனால் எப்படி பிழைக்கிறது என்பவனுக்குத்தான் அது தேவை.
எனக்கு, நான் பிழைக்க வேண்டுமே, என் வாழ்வு வளம்பெற வேண்டுமே, மக்களிடையில் எனக்கு மதிப்பு வேண்டுமே, என் அந்தஸ்து, எனது நிலை, எனது போக்கு வளம்பெற வேண்டுமே, என்னைப் பலர் மதிக்க வேண்டுமே, எனக்குப் பலரின் ஆதரவு வேண்டுமே என்பன போன்ற – என், எனக்கு என்கின்ற கவலையுள்ளவனுக்குத்தான் மானாபிமானம், அது போலவே தேசாபிமானம், மொழி அபிமானம், இலக்கிய அபிமானம், சமய அபிமானம், முதலிய அபிமானங்கள் வேண்டும். எனக்கு வெறும் மனிதாபிமானந்தான் ; அதிலும் வளர்ச்சி அபிமானந்தான் முக்கியம்.
‘விடுதலை’ 15.10.1962
பெரியார் முழக்கம் 06012022 இதழ்