புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்
“பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்”
இது 2001 ஆம் ஆண்டில் 5 பெரியாரிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தந்தைபெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட முன்வந்தபோது மக்கள் முன் வைத்த பிரகடனம், இந்த ஐந்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகளின் அடையாளங்களைவிட பெரியாரின் இலட்சியத்தை கொண்டு செலுத்தலே முதன்மையான பணியாக ஏற்றன என்பதை இந்தப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.
ஆனால் அந்த இலட்சியத்தை அடையவே இயக்கம் என்ற பாதைமாறி, தங்கள் முந்தைய இயக்க அடையாளத்தை முன்னிறுத்தலே முதன்மை இலக்கு என்ற நிலை, பெரியார் திராவிடர் கழகத்திற்குள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமாகும். பெரியாரின் அடிப்படைத் தத்துவமான சாதிஒழிப்பு என்ற இலட்சியத்தையே தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன் காரணமாகவே இணைப்பு நிகழ்வின் போது கீழ்க்கண்ட உறுதிமொழியையும் ஏற்றது.
“பெரியாரியலை இலட்சியமாக ஏற்றுக்கொண்டுள்ள நான், அதை சமுதாயத்தில் பிரச்சாரம் செய்வதோடு நின்று விடாமல், எனது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றுவேன் என்று உறுதி ஏற்கிறேன்.
தீண்டாமை, சாதீய உணர்வுகளிலிருந்து முழுமையாக விடுவித்துக்கொண்டு சாதி, மத மறுப்பாளனாக வாழ்ந்து காட்டுவேன் என்றும், எனது குடும்பத்தில் சாதிமறுப்புத் திருமணங்களையே நடத்த முழுமையாக முயற்சிப்பேன் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையிலும், பெண்களுக்குச் சமஉரிமை வழங்குவதிலும் சொல்லொன்று செயலொன் றாக இல்லாமல் உண்மையாக நடந்துகொள்வேன் என்றும், உதட்டளவில் சாதி எதிர்ப்புப் பேசிக் கொண்டு உள்ளத்தில் சாதிய வாதியாக இருக்கும் எவரும் பெரியாரியலுக்கு எதிரானவர்கள் என்றே கருதி வெறுப்பேன் என்றும் உறுதி ஏற்கிறேன்.
ஒழியட்டும் சாதி அமைப்பு! மடியட்டும் பெண்ணடிமை! வெல்லட்டும் பெரியாரியப் பண்பாட்டுப் புரட்சி!”
ஆம். உறுதியேற்றவாறு சொல்லொன்று செயலொன்றாக இருக்க மாட்டேன் என்ற உறுதியை நாம் உண்மையாகப் பின்பற்றினோமா? இதுவே இப்போது எழுந்துநிற்கும் முக்கியமான கேள்வி. இந்த உறுதியைப் பின்பற்றிச் செயல்படவில்லை என்பதற்குச் சான்றாக கழகத் தோழர்களின் கவனத்திற்கு சில நிகழ்வுகளை முன்வைக்க விரும்புகிறோம்.
மேற்கண்ட உறுதியை ஏற்று 2001 இல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்ட தோழர் கோவை கு. இராமக்கிருட்டிணனின் ‘தமிழ்நாடு திராவிடர் கழகம்’ இணைப்புக்குப் பிறகு சில மாதங்களில் தனி அமைப்பாக செயல்படத் தொடங்கிவிட்டது என்பதே உண்மை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் அதன் தொடக்க விழாவிலேயே முன்வைத்த கொள்கை சார்ந்த பண்பு மாற்றம் குறித்த புரிதலோ, அதை ஏற்கும் மனநிலையோ தமிழ்நாடு திராவிடர் கழகத்திற்கு இல்லாமலேயே போய்விட்டது. தமிழ்நாடு திராவிடர் கழகம் தொடங்கிய முறையைக் கூர்ந்து கவனித்தாலே இதற்கான விடை கிடைத்துவிடும்.
1987 ஆம் ஆண்டு தோழர் கி.வீரமணிக்கு எதிராக தோழர் கு. இராமக்கிருட்டிணன் தொடங்கிய தனது அமைப்புக்கு ‘திராவிடர் கழகம்’ என்றே பெயர் சூட்டிக்கொண்டார். திராவிடர் கழகத்தின் கொடியையே தனது கொடியாக அறிவித்துக்கொண்டார். தனது அமைப்பே உண்மையான திராவிடர் கழகம்; வீரமணி நடத்துவது உண்மையான தி.க அல்ல என்றும் அறிவித்து செயல்படத் தொடங்கினார். பெரியார் இலட்சியங்களைவிட திராவிடர் கழகம் என்ற அமைப்பை எதிர்ப்பதே அவரது முதன்மை நோக்கமாக இருந்தது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் 1996 இல் ஆனூர் செகதீசன், வழக்கறிஞர் துரைசாமி, விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமையில் வீரமணியின் தி.க விலிருந்து விலகி வந்த பெரியாரியவாதிகள், வீரமணிக்குப் போட்டி அமைப்பு நடத்துவதைவிட பெரியார் இலட்சியத்தைப் பரப்புவதற்கே முன்னுரிமை தந்தனர். அதன் காரணமாகவே ‘பெரியார் திராவிடர் கழகம்’ என்ற தனி அமைப்பையும், தனிக் கொடியையும் உருவாக்கிக்கொண்டு சாதி – தீண்டாமை ஒழிப்பை இலக்காகக் கொண்டு செயல்பட்டனர். பல்வேறு தலித் அமைப்புகளை அணிதிரட்டி நட்பு சக்திகளாக்கி பெரியார் இயக்கம் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பாகிவிட்டது என்ற குற்றச்சாட்டைத் தகர்த்து செயல்பட்டனர். இந்தக் காலகட்டத்திலும்கூட கோவை இராமக்கிருட்டிணன் தனது அமைப்பை திராவிடர் கழகம் என்ற பெயரில்தான் நடத்தி வந்தார்.
அன்றைய பெரியார் திராவிடர் கழகமும் அன்றைய தமிழ்நாடு திராவிடர் கழகமும் இணைந்து புதிய பெயரில் சாதி ஒழிப்பு இலட்சியத்தை முன்னிறுத்தி செயல்படுவதற்கான முயற்சிகளை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்டது. அப்போதும் கோவை இராமக்கிருட்டிணனும் அவரது அணியினரும் தங்களது அமைப்புக்கான அடையாளத்தையும், பதவி அதிகாரத்தையுமே முன்னிறுத்தினர். எனவே அந்த இணைப்பு நிகழாமலேயே போய்விட்டது. இந்த உண்மைகள் அன்றைய பெரியார் திராவிடர் கழகத்தை வழிநடத்திய ஆனூர் செகதீசன், வழக்கறிஞர் துரைசாமி ஆகியோருக்கு நன்றாகவே தெரியும்.
1987 இல் தொடங்கப்பட்ட கோவை இராமக்கிருட்டிணன் தலைமையிலான அணி 2001 இல் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் இணையும்வரை சாதி – தீண்டாமை ஒழிப்புக்காக எந்த இயக்கத்தையும் முழுவீச்சில் நடத்தியதே இல்லை. சில அடையாளப் போராட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டன. இத்தகைய பின்னணியோடுதான் தமிழ்நாடு திராவிடர் கழகம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற புதிய அமைப்பு முன்வைத்த “இலட்சியத்திற்காகவே இயக்கம்” என்ற பண்பு மாற்றத்தை உள்வாங்கியிருக்க வேண்டும். இதற்காகவே நாம் இணைப்பு நிகழ்வில் உறுதி மொழிகளையும் பிரகடனத்தையும் அறிவித்தோம். ஆனால் அப்படி எந்த மாற்றமும் கோவை இராமக்கிருட்டிணன் அணியில் ஏற்படவில்லை என்பது தான் இப்போது எழுந்துள்ள பிரச்சனையின் மையம். இது ஏதோ தனி நபர் அதிகாரப் போட்டி அல்ல.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டு வர விரும்பிய பண்பு மாற்றத்திற்கு இரண்டு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகிறோம்.
திண்டுக்கல் நகரத்தில் கி.வீரமணி தி.க வின் நகரச் செயலாளர் இராசேந்திரன் பெரியார் கொள்கை பரப்புப் பணியின்போது, மதவாத சக்திகளால் வெட்டப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர் கி.வீரமணியின் தி.க என்று கருதாமல், அவர் ஒரு பெரியாரி°ட் என்ற பார்வையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் களமிறங்கிப் போராடியது. அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கண்டனக் கூட்டத்தையும் நடத்தியது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால்தான் குற்றவாளிகள் தாங்களாகவே ஓடிவந்து காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
அதேபோல் திருச்சி திருவரங்கத்தில் திராவிடர் கழகத்தினர் நிறுவிய பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சியினர் சேதப்படுத்தியபோது அது தி.க வைத்த சிலைதானே என்ற கட்சிப்பார்வையை ஒதுக்கிவிட்டு, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் களமிறங்கி பார்ப்பன நிறுவனங்களைத் தாக்கி பதிலடி தந்தனர். இதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கழகத் தோழர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். பெரியார் திராவிடர் கழகத்தின் இந்தப் பண்பு மாற்றத்தை தமிழ்நாடு தி.க உள்வாங்கவில்லை.
விளக்கமாகக் கூற வேண்டுமானால் பெரியாரின் கொள்கைக்காகப் பாதிக்கப்பட்டவர் வேறு அமைப்பாக இருந்தாலும், அவர்களுக்காகப் போராட தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்வந்தது. அதே நேரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்திலேயே தன்னை இணைத்துக்கொண்ட தமிழ்நாடு தி.க அணியோ இயக்கத்திற்குள்ளேயே நடக்கும் கொள்கை நிகழ்வுகளைக்கூட அது எந்த அணியால் நடத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளை எடுத்தது.
இதனையொட்டி, கழகத்திற்குள் கொள்கைக்கும் அமைப்புக்கும் இடையே நிகழ்ந்துவரும் முக்கிய முரண்பாடுகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
1. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொடி ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் கொடி போல தோற்றமளித்ததால் அதை மாற்றியமைக்க வேண்டும் என்று கழகத்தோழர்கள் பலரும் விரும்பினர். அப்போது கரூரில் நடந்த மாநில செயற்குழுவில் இக்கருத்து முன்வைக்கப்பட்டபோது, ‘தமிழ்நாடு திராவிடர் கழக’ மாக தாங்கள் இயங்கியபோது இருந்த அந்தக்கொடியை மாற்றவே கூடாது என்றும், தமிழ்நாடு திராவிடர் கழகத்தை அழிக்க சதி நடக்கிறது என்றும், வா°து பார்த்து கொடியை மாற்றுகிறீர்களா என்று கேலிசெய்தும் எதிர்த்துப் பேசினார்கள். கொடி மாற்றத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள மறுத்து தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் அடையாளத்தை காப்பற்றுவதிலேயே கவனமாக இருந்தனர். இணைப்புக்குப்பின் அடுத்தசில ஆண்டுகளிலேயே இது தொடங்கிவிட்டது.
2. பெரியார் திராவிடர் கழகத்தின் பயணத்தில் குறிப்பிடத்தகுந்த செயல்பாடு கி.வீரமணியிடம் முடங்கிக்கிடந்த பெரியாரின் எழுத்து பேச்சுகளை மீட்டெடுத்து மக்கள் சொத்தாக்கியதாகும். பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழுவின் ஒப்புதலோடு மிகப்பெரும் சவாலான ‘குடிஅரசு’ தொகுப்புப் பணிகள் தொடங்கின. ‘குடிஅரசு’ இதழ்களைத் தேடிக் கண்டுபிடிப்பது – அவற்றைத் தொகுப்பது – நூல்வடிவமாக்குவது – அச்சிடுவது – அதற்கு கழக ஒப்புதலோடு அறிவிக்கப்பட்ட முன்வெளியீட்டுத் திட்டத்தின்கீழ் முன்பதிவுகளைச் சேர்ப்பது – நிதிதிரட்டுவது என்ற கழகப் பொறுப்பாளர்கள் தந்த உறுதிமொழிகளை நம்பி, கழகத்தலைவர் கொளத்தூர் மணியும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும் முழுமையாகக் களமிறங்கினர். அவர்களோடு குடி அரசு வெளிவர வேண்டும் என்ற துடிப்பு நிறைந்த தோழர்கள் பேரார்வத்தோடு இணைந்து செயல்பட்டனர். இந்த நிலையில் இந்தத் தொகுப்புகள் வெளிவருவதைத் தடுக்க கி.வீரமணி நீதிமன்றம் சென்றார். எனவே வழக்கையும் கழகம் சந்திக்க வேண்டியிருந்தது. இத்தகைய கடும் நெருக்கடிகளை கழகம் சந்திக்க வேண்டிய சூழலில் பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன் ஒதுங்கியே நின்றார். எவ்விதப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறோம்.
குடிஅரசு நமக்குக்கிடைத்த கருத்து ஆயுதம்; இன்று, பெரியார் முன்வைத்த ‘திராவிடர்’ பற்றிய கருத்துக்களைச் சிதைப்போருக்கும், ‘திராவிடர் கழகம்’ பெயர் சூட்டியபோது பெரியார் மீது வீசப்படும் அவதூறுகளுக்கும் உரிய பதிலடி தரமுடிகிறது என்றால் இந்தக் குடிஅரசு தொகுதிகளை வெளிக்கொண்டு வந்ததால்தான். இவற்றை வெளிக்கொணராது முடக்கிப்போட்ட கி.வீரமணி நாம் தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான் அவரும் வெளியிடவேண்டிய கட்டாயத்தை உருவாக்கினோம்; வழக்கில் வெற்றிபெற்ற பிறகு – இப்போது ஏராளமான பதிப்பகத்தார் பெரியார் நூல்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். பெரியார் கொள்கைக்கு – பெரியார் திராவிடர் கழகம் பெற்றுத்தந்த – வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முயற்சி பெரியார் திராவிடர் கழகத்திற்குப் பெருமை சேர்த்தது. பாராட்டுக்களைக் குவித்தது. இந்த மகத்தான பெரியார் கொள்கை சார்ந்த முயற்சிகளை கழகத்தின் மாநில செயற்குழுவின் ஒப்புதல் பெற்றே நாம் தொடங்கினோம். கோவை இராமக்கிருட்டிணனோ அவரது தமிழ்நாடு திராவிடர் கழகமோ எத்தகைய பங்களிப்பையும் வழங்கவில்லை. ஒதுங்கியே நின்றனர்.
எப்படி பணிகள் நடக்கின்றன என்பதைக்கூட விசாரித்து அறியாமல் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழுக்கு அளித்த பேட்டியில் தவறான கருத்துக்களை கோவை இராமக்கிருட்டிணன் முன்வைத்தார். அவர் வெளியிட்ட கருத்துதான் வீரமணி தொடர்ந்த வழக்கிற்கே அடிப்படையாக அமைந்துவிட்டது. ஆனாலும் கழக மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோ ஆகியோர் மேற்கொண்ட பெரும்முயற்சிகளால் வழக்கில் நாம் வெற்றிபெற்றோம். பெரியார் எழுத்துக்களை எல்லோரும் வெளியிடும் உரிமையை கழகம் பெற்றுத் தந்தது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் தமிழ்நாடு தி.க அணியினர் குடி அரசு முன்பதிவிற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. சுமார் 40 இலட்ச ருபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் தமிழ்நாடு தி.க வின் பங்களிப்பு உடுமலையில் 4 முன்பதிவும், திருப்பூரில் 5 முன்பதிவு மட்டுமே. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணனோ வெறும் 10 முன்பதிவுகளை மட்டுமே திரட்டியிருந்தார். குடிஅரசு வெளியிடுவதில் கடும் நிதி நெருக்கடியை கழகம் சந்தித்த நேரத்திலும் இந்த 10 முன்பதிவுகளின் பணத்தைக்கூட வழங்க முன்வராமல் வழக்கு தீர்ப்பு வரும்வரை இராமக்கிருட்டிணன் காத்திருந்தார். வழக்கில் வெற்றி பெற்று அதன் வெளியீட்டு விழா நடந்த அன்றுதான் இந்த 10 முகவர்களின் முன்வெளியீட்டுத்திட்டத்திற்கான தொகையை கழகத் தலைவரிடம் தர முன்வந்தார்.
ஒரு பொதுச்செயலாளரின் இத்தகைய அணுகுமுறையால் வேதனையுற்ற கழகத்தலைவர் கொளத்தூர் மணி இந்த சிறு தொகையைக்கூட முன்கூட்டியே தந்திருக்கக்கூடாதா என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது “நான் மறந்துவிட்டேன்” என்பதுதான் அவரின் பதிலாக இருந்தது.
ஸ தொடக்கத்தில் குடிஅரசு தொகுப்புகளை ஒவ்வொன்றாகவே வெளியிட்டோம். 1925 ஆம் ஆண்டு முதல் தொகுதியை 2003 இல் சேலத்திலும், அடுத்த ஆண்டு 1926 ஆண்டின் முதல் பகுதியைத் திருப்பூரிலும் வெளியிட்டோம். எந்த ஒரு வெளியீட்டுக்கும் பதிப்பாளர் பெயர் இருந்தால்தான் அதை நூலகத்தில் வாங்குவார்கள். அந்த அடிப்படையில் முதல் இரண்டு தொகுதிகளும் கழகத்தலைவர் என்ற முறையில் கொளத்தூர் மணியைப் பதிப்பாளராகக்கொண்டு வெளிவந்தன. உடனே தமிழ்நாடு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஆறுச்சாமி, கொளத்தூர் மணியின் பெயரைப் போட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார். ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்ற உணர்வு இருந்திருந்தால் கழகத் தலைவருக்கு மட்டும் கடிதம் எழுதியிருக்கலாம். குடிஅரசு வெளியீட்டைவிட கொளத்தூர் மணி பெயர் இடம்பெறலாமா? என்பதே அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. அந்த எதிர்ப்பையும் நாம் ஏற்றுக்கொண்டோம். 1926 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பகுதியில் பதிப்பாளர் என்ற இடத்தில் கொளத்தூர் மணி பெயரை நீக்கி பெரியார் திராவிடர் கழகம் என்று மட்டும் வெளியிட்டோம்.
ஆனால் 1926 ஆம் ஆண்டு முதல் தொகுதிக்கு 400 முன்பதிவுகளை சேர்த்த தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் பதிப்பாளராக கொளத்தூர் மணி பெயர் அதில் இடம்பெற்றிருந்த காரணத்தினால் 1926 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பகுதி முன்பதிவுசேர்ப்புப் பணியையும் செய்யவில்லை – 2005 சேலத்தில் பெரியார் நினைவுநாளையொட்டி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் இராஜா கலந்துகொண்ட வெளியீட்டு விழாவை தமிழ்நாடு தி.க வினர் (திருப்பூர் அங்கக்குமார் தவிர) அனைவரும் புறக்கணித்தனர். பொதுச்செயலாளர் இராமக்கிருட்டிணனும் பங்கேற்கவில்லை.]
இவ்வளவுக்குப் பிறகும், குடிஅரசு தொகுப்புப் பணிகள் எவ்வளவு இடர்ப்பாடுகளுக்கிடையே நடந்தது என்பதை விரிவாக விளக்கி முதல் தொகுதியில் ஒரு நீண்ட முன்னுரையை கழகத்தலைவர் கொளத்தூர் மணியும், கழகப்பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும் இணைந்து உருவாக்கிய போது இந்த வரலாற்றுப் பணியில் கோவை இராமக்கிருட்டிணன் பெயரும் ஒரு நிரந்தரப் பதிவாக இருக்கட்டும் என்ற நோக்கத்துடன் கூட்டுழைப்பின் விளைச்சல் என்ற அந்த பதிப்புரையை எழுதியதாக கோவை இராமக்கிருட்டிணன் பெயரையும் இணைத்தோம். 27 தொகுதிகளையும் முழுமையாகப் படித்து அதன் உள்ளடக்கத்தை விளக்கி முன்னுரைகளை எழுதிய பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெயரையும் – மீண்டும் பெயர் போடுவது குறித்த விமர்சனங்கள் வந்துவிடக்கூடாதே என்பதற்காக – தவிர்த்துக்கொண்டோம்.
3. பெரியார் திராவிடர் கழகத்தின் அடுத்த முக்கிய செயல்பாடுகளாக நாம் கருதுவது சாதி ஒழிப்புக்கான பரப்புரை – போராட்ட இயக்கங்களாகும். இதுவரை 5 பரப்புரை பயணங்களை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் அவர் கோவையில், தான் நடத்திவந்த வணிகத்திலேயே முழுக்கவனம் செலுத்தி வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தப் பரப்புரை வேலைதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது ஒவ்வொரு முறையும் ஒப்புதலுக்காக கோவை இராமக்கிருட்டிணனின் வணிக நிறுனத்திற்கு நேரில் எடுத்துச்சென்று ஒப்புதலைப் பெறுவதுதான் வழக்கமாக இருந்தது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்நாடு தி.க அணியினர் தங்கள் மாவட்டங்களில் இந்தப் பரப்புரைப் பயணங்களுக்குப் போதிய ஆதரவு காட்டவில்லை.
அப்பணிகளை தமிழ்நாடு தி.க வின் செயல்திட்டம் அல்ல என்று கருதியே ஒதுங்கி நின்றனர். தான் ஒப்புக்கொண்ட இந்த 5 பரப்புரை பயணங்களுக்கு கோவை இராமக்கிருட்டிணனும் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. தொடக்க விழாக்களிலோ, நிறைவு விழாக்களிலோ எந்த பயணத்திலும் பங்கேற்கவில்லை.
இவர்களுடைய ஒத்துழையாமை எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
4. அப்போதைய கோவை தெற்கு மாவட்டம் கடத்தூரில் ‘இரட்டைக்குவளை எதிர்ப்புப் பயணத் தொடக்க விழா’ அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது. கழகத் தலைவரும் வர ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மாவட்டத்தின் செயலாளரும் தமிழ்நாடு தி.க அணியைச் சேர்ந்தவருமான தோழர் கருமலையப்பன் – காவல்துறை அனுமதித்தாலும்,கழகத் தலைவர் ஒப்புதல் தந்திருந்தாலும் தனது மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடக்கவிழாவை தான் அனுமதிக்கமுடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார். அதன் காரணமாகவே அதே கடத்தூரில், 100 மீட்டர்களே தள்ளியிருந்த திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியிலிருந்து பயணம் தொடங்கியது.
5. பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. கோவை இராமக்கிருட்டிணன் அணியைச் சேர்ந்த அதே கருமலையப்பன் உள்ளிட்ட தோழர்கள் இதைச் செய்ய விருப்பம் தெரிவித்தபோது கழகத் தலைமை அதற்கு மகிழ்வுடன் ஒப்புதல் வழங்கியது. இதைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பணியாகவே நாம் கருதினோம். தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் செயல்திட்டமாக இதைப் பிரித்துப் பார்க்கவில்லை. அதன் காரணமாகவே தோழர் தாமரைக்கண்ணன் தான் சேகரித்திருந்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் இராமக்கிருட்டிணன் அணியினரிடம் ஒப்படைத்தார். தஞ்சையில் சாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தி அதில் நூல் வெளியீட்டு நிகழ்வை நடத்தும் பொறுப்புகளைத் தாங்களே ஏற்றுக்கொள்வதாக இராமக்கிருட்டிணன் அணியினர் கூறினார்கள். ஆனால் மாநாட்டு ஏற்பாட்டுக் கான எந்த முயற்சியையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. மாநாட்டு நாள் நெருங்கிய நிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் இணைந்து தஞ்சையில் முகாமிட்டு மாநாட்டை நடத்தி முடித்தனர். அந்த சாதி ஒழிப்பு போராட்ட நூலில் இடம்பெற்றிருந்தவை தோழர் தாமரைக்கண்ணன் அளித்திருந்த ஆவணங்கள் மட்டும்தான். கூடுதலாக திருச்சி தோழர் செல்வேந்திரன் எழுதிய ஒரே ஒரு கட்டுரை மட்டும் அதில் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரையும்கூட சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பெரியாரின் அணுகுமுறையை மறைமுகமாகக் குறைகூறியிருந்தது. பெரியார் திராவிடர் கழகத் தலைமை சார்பாக வழங்கிய ஆவணங்களைக் கொண்டு அச்சிடப்பட்ட இந்த நூலைக்கூட தங்கள் அணியின் வெளியீடாகவே வெளியிடக் கருதி, கோவை மாவட்ட பெரியார் தி.க வெளியீடு என்று குறிப்பாகப் பதிவுசெய்தனர். அந்த நூலைத் தொடர்ந்து வந்த சில வெளியீடுகளும் கோவை மாவட்ட வெளியீடு என தனியாகவே வெளியிடப்பட்டடன.
பெரியார் திராவிடர் கழகத்திற்குள் நிகழும் செயல்பாடுகளை கழகத்தலைமை அணிபிரித்து வேறுபடுத்திப் பார்க்கவில்லை – ஆனால் தமிழ்நாடு தி.க வினர் பிரிவினைப் பார்வையோடுதான் எப்போதும் இயங்கினர் என்பதற்குச் சான்றாகவே இந்நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறோம்.
தமிழ்நாடு தி.க வினரின் இத்தகைய அணுகுமுறை இயக்க வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஒரு சில உதாரணங்களைக் குறிப்பிடுகிறோம். கழகத்தின் சாதி – தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட ஏராள இளைஞர்கள் கழகத்தில் செயல்பட முன்வந்தனர். ஆனால் என்ன நடந்தது?
தமிழ்நாடு தி.க வினர் கட்டுப்பாட்டில் கோவை மாவட்டக்கழகம் இருப்பதால் சாதி ஒழிப்புக்கொள்கையில் உரிய அழுத்தம் தராத அவர்களின் செயல்பாடும் தமிழ்நாடு தி.க வின் திட்டங்களையே செயல்படுத்த வேண்டும் என்ற தவறான அணுகுமுறையும் இயக்கம் நோக்கி வந்த புதிய தோழர்களை ஒதுங்கி நிற்கச் செய்துவிட்டது. அல்லது தனி அமைப்பாகச் செயல்பட வைத்துவிட்டது.
1. கோவை மாவட்டத்தில் துடிப்புடன் செயல்பட்டு பல போராட்டங்களைச் சந்தித்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம், வெள்ளமடை நாகராசன் ஆகியோர் முயற்சி எடுத்து தாக்குதலுக்கு உள்ளான ஒரு தலித் தோழர் வழக்கை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்ய வைத்தனர். ஆனால் இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதற்கான சமரச முயற்சிகள் பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன் முன்னிலையில் கழகத்தின் கோவை மாவட்டத் தலைமை அலுவலகத்திலேயே நடந்தது. அதிர்ச்சியடைந்த தோழர் பன்னீர்செல்வம் தனது எதிர்ப்பை கழகத்தின் தலைமைக்குக் கொண்டு சென்றார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் இன்றுவரை கோவை கழகப் பணிகளில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை திரும்பப்பெறும் சமரச உடன்பாடு, கோவை பெரியார் தி.க தலைமை அலுவலகத்திலேயே நிகழ்கிறது என்றால், கழகம் நடத்தி வரும் சாதி தீண்டாமை எதிர்ப்புப் பரப்புரை இயக்கங்களின் நம்பகத்தன்மையையே மக்கள் மன்றத்தில் சீர்குலைத்துவிடாதா?
2. கழகத்தின் மற்றொரு முக்கியச் செயல்பாடு களப்பணியாளர்களுக்கான பயிற்சித்திட்டம். கொள்கை மற்றும் களப்பணிகளுக்கான இரண்டு பயிற்சி வகுப்புகள் ( 8 நாட்கள் ஒருமுறை, 5 நாட்கள் ஒருமுறை) நடத்தப்பட்டன. தமிழ்நாட்டின் முக்கிய சமூகவியலாளர்கள் பயிற்சி அளித்தனர். இந்த முக்கிய நிகழ்வுகளை பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன் புறக்கணித்தார். ஏதேனும் ஒரு நாளில் சிலமணி நேரம் ஒதுக்கி தோழர்களிடம் உரையாற்ற விடுத்த அழைப்பைக்கூட அவர் ஏற்கவில்லை. மாறாக இந்தப் பயிற்சித் திட்டங் களுக்கும் ‘குறுங்குழுவாத’ முத்திரை குத்தி கோவை இராமக்கிருட்டிணனுக்கு எதிராக நடக்கும் பயிற்சி என்று அவரது அணியினர் குற்றம் சாட்டி அவர்களும் இந்தப் பயிற்சி வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
பெரியார் கொள்கைகளை ஆழமாகப் புரிந்துகொண்ட தோழர்களை உருவாக்குவதுதான் இயக்கத்தின் வலிமை. அந்த நோக்கத்தோடுதான் கொள்கைப் பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டன. இதற்கு பொதுச்செயலாளர் இராமக்கிருட்டிணன் அனுமதியும் பெறப்பட்டது. சமூகவியல் சிந்தனை யாளர்கள் தோழர்கள் வே.ஆனைமுத்து, சுப.வீரபாண்டியன், தியாகு, சி.மகேந்திரன், முகிலன், பேராசிரியர் ஜெயராமன், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், மனித உரிமையாளர்கள் எவிடன்° கதிர், பிரிட்டோ, பத்திரிக்கையாளர் ஜவஹர் போன்றவர்கள் பயிற்சி அளித்தனர். ஆனால் இந்த கொள்கைப் பயிற்சி வகுப்புகள் கோவை இராமக்கிருட்டிணனுக்கு எதிராகவே நடந்ததாக கோவை தலைமைச் செயற்குழுவில் குற்றம்சாட்டினர்.
3. பெரியார் தி.க வின் செய்தி மடலாகவும், கழகத் தலைமைக்கும் தோழர்களுக்கும் இடையே ஒரு இணைப்பாகவும் இயங்கிய பெரியார்முழக்கம் ஏட்டிற்கு சந்தா சேர்ப்பது தொடர்பாக, 2001 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு தி.க வினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பெரியார் முழக்கத்தின் சந்தாதாரர்கள் மிகக்குறைவாக இருப்பது கோவை மாவட்டப் பகுதிகளில் மட்டுமே. ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியினால் பெரியார் முழக்கம் இரண்டு வாரங்கள் தடைபட்டு நின்றபோது பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஒரு வெளியீட்டுக்கான தொகையையாவது அனுப்பி உதவுங்கள் என்று நேரில் கேட்டும் பொதுச்செயலாளர் இராமக்கிருட்டிணன் பொருட்படுத்தவில்லை.
அதுமட்டுமல்ல. பெரியார்முழக்கத்தைப் போல தங்களுக்குத் தனியாக ஒரு பத்திரிக்கை தொடங்க கோவை இராமக்கிருட்டிணன் திட்டமிட்டார். செய்தி அறிந்த பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கருரில் நடந்த ஒரு பயிற்சி வகுப்பின்போது கோவை இராமக்கிருட்டிணனிடமே நேரில் கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். கழகத்தில் இரண்டு பத்திரிக்கைகள் வெளிவந்தால் இரண்டையுமே வெற்றிகரமாக நடத்த முடியாது, வீண் குழப்பங்கள் ஏற்படும், என்று கூறிய பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியார் முழக்கத்தையே கோவையில் இருந்து வெளியிடுங்கள். எனக்கு மறுப்பேதும் இல்லை என்றும் கூறினார். அதே வேளையில் திருச்சி செல்வேந்திரனை ஆசிரியராகக் கொண்டு தமிழ்நாடு திராவிடர் கழக செய்திகளை மட்டுமே தாங்கி செய்தி மடல் ஒன்று சில இதழ்கள் வெளிவந்தன.
இவ்வளவு நெருக்கடிகளை தமிழ்நாடு திராவிடர்கழகம் உருவாக்கிய நிலையில் கோவையில் 2011 பிப்ரவரியில் 26, 27 தேதிகளில் பொதுச்செயலாளர் இராமக்கிருட்டிணன் முயற்சியில் கூட்டப்பட்ட தலைமைச் செயற்குழு குறுங்குழு வாதங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. கழகத்தின் சாதி எதிர்ப்பு இயக்கங்களைக் கொள்கைப் பார்வையில் அணுகாமல் கோவை இராமக்கிருட்டிணனுக்கு எதிரான செயலாகவே அவரது அணியினர் கடுமையாக விமர்சித்தனர். தனது அணியினருக்கு ஆதரவாக நின்ற கோவை இராமக்கிருட்டிணன் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் என்பதையும் மறந்து தனது ஆதரவு அணியினர் முன்வைத்த வாதங்களையே கூர்மைப்படுத்தினார். இறுதியில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “இனியும் இணைந்து செயல்படமுடியுமா என்பதை மீண்டும் ஒரு கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்த பிறகு அடுத்த கட்ட செயல்பாடுகளைத் தொடரலாம்” என்று அறிவித்தார். தொடர்ந்து மூன்று முறை சென்னையில் ஒற்றுமையைக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
2011 மார்ச் மாதத்தில் சென்னையில் நடந்த ஒற்றுமை முயற்சியின்போதுகூட கழகத்தலைவர் கொளத்தூர் மணியும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனும் வெளிப்படையாகவே பிரிந்து செயல்படுவதே சிறந்தது என்ற கருத்தையே வலியுறுத்தினர். அப்போது பேசிய கோவை இராமக்கிருட்டிணன் நடந்த தவறுகளை மறந்து ஒற்றுமையையே வலியுறுத்தி உருக்கமாகப் பேசினார். இவ்வளவுக்கும் பிறகு, ஒற்றுமையை வலியுறுத்திய கோவை இராமக்கிருட்டிணனும் அவரது அணியினரும் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையே தொடர்ந்து செய்தனர். ஒற்றுமை முயற்சிகளுக்குப் பிறகு நடந்த சில நிகழ்வுகளை மட்டும் பட்டியலிடுகிறோம்.
1. பரமக்குடியில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பயணம் தொடங்கியபோது தியாகி இம்மானுவேல் பேரவையின் நிறுவனர் தோழர் பூ.சந்திரபோ° பயணத்தைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டிருந்தார். அவரும் ஒப்புக்கொண்டார். அதே நாளில் கோவையில் தான் நடத்த இருக்கும் ஒரு நிகழ்வுக்கு பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டினன் தோழர் சந்திரபோஸை அழைத்தார். சாதி வெறியர்கள் உசிலம்பட்டியில் கழகத்தின் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரையை எதிர்த்து கழகத்தோழர்கள்மீது கல்வீசித் தாக்கியதில் தோழர் இராவணன் கை எலும்பு முறிந்தது. மதுரை மாவட்டப் பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு தி.க வினர் பரப்புரைப் பயணத்தைப் புறக்கணித்ததோடு தோழர்கள் தாக்கப்பட்ட சூழ்நிலையில்கூட தகவல்தெரிந்தும் அதுபற்றி விசாரிக்கக்கூட இல்லை.
மதுரை மாநகரம், மதுரை புறநகரம், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவைதெற்கு, கோவை வடக்கு மாவட்டங்களில் இருக்கும் தமிழ்நாடு தி.க வினர் ( கா.சு.நாகராசு தவிர ) இந்தப் பயணத்தைப் புறக்கணித்தனர். கரூர் மாவட்டத் தலைவரக இருக்கும் தமிழ்நாடு தி.க வைச் சேர்ந்த தனபால், “பயணக்குழு கரூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தால் எல்லையிலேயே அடிப்பேன்” என தோழர் தாமரைக்கண்ணனிடம் தொலைபேசியில் மிரட்டினார். மேலும் கருர் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் தலைமைக்கழகத்தின் அனுமதி இல்லாமல் பயணம் வருகிறது. இந்தப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டாம்“ என புகார் அளித்திருந்தார்.
2. சூலூரில் எப்பொழுதும் கழக நிகழ்ச்சிகளையும் பயிற்சி வகுப்புகளையும் குடும்பத்துடன் முன்னின்று நடத்தி வந்தவர்களான சூலூர் பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அதே சூலூரில் தமிழ்நாடு தி.க வினரை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு ஆர்ப்பாட்டத்தையும் மற்றொரு பொதுக்கூட்டத்தையும் பொதுச் செயலாளர் தோழர் இராமக்கிருட்டிணனே முன்னின்று நடத்தினார்.
3. ‘சுயமரியாதை பதிப்பகம்’ என்ற தனி பதிப்புப்பிரிவைத் தொடங்கி தமிழ்நாடு தி.க வினர் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் வழியாகவே நூல்களை விற்பனை செய்துவருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் மூன்று முறை கூடிப்பேசி ஒற்றுமையாக செயல்படுவதாக முடிவுசெய்த பிறகு நடந்தவைகளாகும். தமிழ்நாடு தி.க கூறும் ஒற்றுமை இதுதானா?
சமுதாய மாற்றத்திற்குப் போராடும் இயக்கங்கள், ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்றவை அல்ல. அரசியல் கட்சிகளின் ஒரே இலக்கு அதிகாரத்தைப் பிடிப்பதுதான். எனவே அந்தக் கட்சிகளின் கட்டமைப்பு களுக்குள் அதிகாரப்போட்டிகள் மேலோங்கி நிற்கும். ஆனால், பெரியாரோ இதற்கு மாறாக, கொள்கைக்காக சுயநலமற்ற சமுதாயத் தொண்டர்களைக் கொண்டு இயக்கத்தை நடத்தினார். அமைப்புக்குக் கண்டிப்பான சட்டதிட்ட விதிகளை உருவாக்கிக்கொண்டு அவற்றைக் கறாராக பெரியார் செயல்படுத்தியதில்லை. “வேலை நடக்க வேண்டும், கொள்கை பரவ வேண்டும்” என்பது ஒன்றே பெரியாரின் பார்வையாக இருந்தது. அதற்கேற்ற நெகிழ்ச்சித் தன்மையோடு இயக்கத்தை நடத்திவந்தார். கொள்கைகளை விட இயக்கமும் கட்டுப்பாடும் முக்கியம் என்ற நிலை தோழர் வீரமணி காலத்தில் உருவானது. கொள்கைக்கு உழைக்கிறவர் களைவிட தனக்கு விசுவாசிகளே தேவை என்ற மனப்போக்கு வீரமணி தலைமையிடம் மேலோங்கி நின்றது. கட்சி அதிகாரம் தந்த மாயைதான் கொள்கை வழி செயல்பட்ட பல தோழர்களை கழகத்திலிருந்து வெளியே தூக்கி எறிவதற்குக் காரணமாயிற்று. இந்த ஆபத்தான கொள்கைக்கேடுகளை உருவாக்கும் கட்சிவாத மனப்போக்கை கோவை இராமக்கிருட்டிணனும் அவரது தலைமையிலான அணியினரும் உள்வாங்கிக் கொண்டிருப்பதால்தான் கழகத்தின் கொள்கைக்கான திட்டங்களைக் குறைகூறி, அதற்கு பங்களிப்பு வழங்காமல் முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள், வருகிறார்கள்.
சாதி ஒழிப்புப்பரப்புரைப் பயணமானாலும், களப்பணியாளர்களுக்கான பயிற்சிகளானாலும், குடிஅரசு வெளியீட்டு முயற்சியானாலும் அதன் பின்னணியிலுள்ள ஆழமான இலட்சிய உணர்வைக் கருதிப் பார்க்காமல் தங்களின் தமிழ்நாடு தி.க என்ற கட்சியை முன்னிறுத்தியே பார்த்தார்கள். இது கழகத்தில் எல்லோரும் அறிந்தது தான்.
பெரியார் திராவிடர் கழகம் மட்டுமே இன்று பெரியார் கொள்கைகளைத் திசைதிருப்பாமல் கொண்டு செல்லும் இயக்கமாக உள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. பெரியார் கொள்கைகளுக்கு மட்டுமல்ல, பெரியாருக்கே எதிரான விஷமப் பிரச்சாரங்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. இது தவிர, உலகமயம், பன்னாட்டுச் சுரண்டல்கள், தனியார் துறையில் வலிமை பெற்றுவரும் பார்ப்பன ஆதிக்கம், தமிழ்தேசிய வாதிகளின் திராவிட எதிர்ப்பு, கவுரவக்கொலைகள், சாதி மறுப்புத் திருமணங்களை வெளிப்படையாக எதிர்க்கும் சாதி வெறி அமைப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் பெரியார் இயக்கத்தின் முன் எழுந்துள்ள சவால்களாக உள்ளன. இவற்றிற்கெல்லாம் முகம் கொடுத்து பெரியாரியலை வளர்த்தெடுக்க வேண்டிய சூழலில் நாம் நிற்கிறோம். இதற்கேற்றவாறு நமது ‘அமைப்புச்சூழலும்’ இணக்கமுடன் அமையவேண்டும் என்பது மிக மிக அவசியமாகும். அமைப்புச்சூழல் கொள்கைப் பயணத்துக்கு உதவும் போது தான் நாம் இயக்கப் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்க முடியும். பெரியார் திராவிடர் கழகத்திற்குள்ளேயே தமிழ்நாடு தி.க என்று தங்களைத் தனித்து இயக்கிக்கொண்டதன் மூலம் இத்தகைய ஆரோக்கியமான அமைப்புச்சூழல் உருவாகாமல் தடுக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாடு திராவிடர் கழகம் தனக்கான உள்ளூர்பிரச்சனைகளுக்கான செயல்திட்டங்கள், தனக்கான கருத்துப் பரப்பல்கள், தனக்கான தனிப்பட்ட பேச்சாளர்கள், தனக்கான தனி பதிப்பகம், தனக்கான தனி தலைமை என்ற அடிப்படையிலேயே நீண்டகாலமாக செயல்பட்டுக்கொண்டு, வெளியே ஒற்றுமை என்ற வெற்றுமுழக்கத்தை முன்வைப்பது பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைப் பயணத்தை முடக்குவதாகவே உள்ளது.
இணைப்புக்குப் பிறகு பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட ஏராளமான தோழர்கள் தமிழ்நாடு தி.க வினரிடம் சந்தித்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு இனியும் எப்படி இணைந்து செயல்படமுடியும் என்ற கேள்வியையே பல ஆண்டுகளாக நம்மிடம் கேட்டு வருகிறார்கள். நாம் அவர்களை அமைதிப்படுத்தி நீண்ட காலமாகவே பொறுமை காத்துவந்தோம். இனியும் தொண்டர்களின் ஆற்றல்களை, பங்களிப்பை போலி ஒற்றுமைக்காக விரயமாக்குவது பெரியாரியலுக்கு இழைக்கப்படும் தீங்கே ஆகும் என்று நாம் உறுதியாகக் கருதுகிறோம். எனவே நட்புரீதியாகப் பிரிந்து தேவை ஏற்படும் காலங்களில் பொதுத் திட்டங்களில் இணைந்து இயங்குவதே சரியாக இருக்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு வந்துள்ளோம்.
தோழர் இராமக்கிருட்டிணன் மீதோ, அவரது அணியினர் மீதோ தனிப்பட்ட முறையில் நமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. தோழர் கோவை இராமக்கிருட்டிணனின் கடந்தகால இயக்கப் பங்களிப்புகளைக் குறைத்து மதிப்பிடவும் முடியாது. அவற்றை மதிக்கிறோம். ஆனால், கொள்கையைப் பரப்புவதிலும் அதற்கேற்றவாறு அமைப்பை இணக்கமாகக்கொண்டு செல்வதிலும், அதற்கு இசைவான இயக்கப் பண்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு திராவிடர் கழகத்திற்கும் நமக்கும் இட்டு நிரப்பவே முடியாத இடைவெளியும், சந்திக்கமுடியாத புள்ளியும் விழுந்துவிட்டது.
ஒற்றுமை ஒற்றுமைக்காக அல்ல; அது கொள்கைகளுக்காகத்தான். ஒன்றுபட்ட இயக்கம் என்ற அடையாளத்திற்குள், பிளவுபட்டு செயல்படாமல் இருப்பதைவிட – பிரிந்து விட்ட அமைப்புகளாக கொள்கை ஒற்றுமையுடன் செயல்படுவதே சாலச் சிறந்தது என்பதை பெரும் மனவேதனையுடன் முன்வைக்கிறோம்.
கொளத்தூர் தா.செ. மணி விடுதலை.க.இராசேந்திரன்
தலைவர் பொதுச்செயலாளர்
பெரியார் திராவிடர் கழகம்
இடம் : தலைமைச் செயற்குழு, சென்னை
நாள் : 07.07.2012