பெரியார் நினைவு நாள் – சென்னை – 24-12-2010 கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை
ரஷ்யாவில் தைத்துவிட்ட செருப்பை எடுத்துகொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம்.
[24-12-2010 – சென்னை – தா.செ.மணி]
இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக்கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்தநாள் விழாக்களை விட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்ககளை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள், அவர்களிடம் இருந்து ஏதாவது பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு. இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம், அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவிற்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டிய தேவையை, இவை எல்லாவற்றையும் எண்ணி பார்க்கிற நிகழ்ச்சியாகவும் இருக்கும். நினைவு நாள் கூட்டம் என்பதுதான் ஒரு இயக்கத்திற்கு மிகவும் தேவையானது என்ற அடிப்படையில், இன்று நாம் பெரியார் நினைவு நாள் எடுக்கிறோம்.
நம் நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிகப்பெரிய தலைவராக கருதப்பட்ட, மனிதர்களுக்கும் மேலாக கருதப்பட்ட ’மகாத்மா’க்களெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் என்பது, அவருடைய படத்திற்கு, மாலை அணிவித்து வணங்குவதை படம் பிடிக்க, செய்தியாளர்களை ஏற்பாடு செய்வது, என்ற அளவோடு முடிந்துவிடுகிறது. நினைவு நாள் கூட்டங்களில் அவருடைய கொள்கைகளைப் பற்றி பேசுவதில்லை, அவர் நம்மிடம் என்ன எதிர்பார்த்தார் என்பதையோ, நாம் அவருடைய வழியில் ஏன் செல்லவேண்டும் என்ற தேவையை விளக்குவதற்கோ எந்த முயற்சியும் செய்வதில்லை. தமிழ் நாட்டிலும் பெரியாருக்கு இணையாக [வயதில்] வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார். இந்த நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தார், குடிஅரசு தலைவருக்கு இணையான, கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு உள்துறை அமைச்சர், இலாகா இல்லாத அமைச்சர், முதலமைச்சர், என இருந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குள் இறந்துபோன இராஜாஜி. அவர் உயிரோடு இருந்த காலத்தில் முன்னேற்ற கழகத்தினர், அவரை மூதறிஞர் என்றெல்லாம் கூட பாராட்டினர். இன்று அவரைப் பற்றிப்பேச ஆள் இல்லை. சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் இராஜாஜி சிலை இருக்கிறது. அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், நகராட்சி ஊழியர்கள் சலிப்போடு ஒரு மாலை அணிவிக்கிறார்கள். வேறு யாரும் மாலை கூட அணிவிப்பதில்லை.
ஆனால் பெரியார் அவர்கள் மறைந்து இவ்வளவு காலங்களுக்கு பின்னால், முப்பத்திஏழு ஆண்டுகள் கடந்த பின்னாலும், அவருடைய கொள்கைகளைப் பேச, செயலாற்ற பல இயக்கங்கள், பெரியாரை இன்றும் பேசியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பல இயக்கங்கள் இருப்பதை பார்க்கிறோம். பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரை விமர்சித்தவர்கள் கூட, இன்று பாராட்டி போற்றுவதை பார்க்கிறோம். பொதுவுடமை இயக்கங்கள் எல்லாம் அவரைப் பற்றி பேசினார்கள். முதலாளித்துவ சிந்தனையாளர் என்று சொன்னார்கள். அடிக் கட்டுமானத்தில் இல்லாத சமயத்தை சாதியை பற்றி பேசிகொண்டிருக்கிறார் என்று எகத்தாளம் செய்தவர்களெல்லாம், இன்று அவர் கொள்கைகளைதான் பேசிகொண்டிருக்கிறார்கள். அதை செயல் திட்டமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் தங்களைவிட அறிவாளிகள் யாரும் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கிற ஒரு இயக்கம் சி.பி.எம் கட்சி. அவர்கள் பெரியாரைப் பற்றி செய்கிற விமர்சனங்கள் [பெரியாரை மட்டும் அல்லாமல் தமிழர்,தமிழீழம் பற்றியும்] எதிராகத்தான் இருக்கும். இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று வைத்துக்கொண்டு, சாதி ஒழிப்பை ஒரு செயல் திட்டமாக வைத்திருக்கிறார்கள். அதை நாம் விமர்சிக்கவில்லை வரவேற்கிறோம். பெரியார் இறுதியாக கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருந்தார். அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவிலின் கருவறையில், தொண்டர்களோடு நுழைய போவதாக அறிவித்தார். அப்போது வரவேற்றார்களோ இல்லையோ, இப்பொழுது வருகிற ஜனவரி 30 ஆம் நாளில், இந்திய பொதுவுடமைக் கட்சி அதே மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவிலில் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் சொன்ன, சமய வழிபாட்டு இடங்களிலும் சமத்துவம், தமிழ் மொழிக்கு முன்னுரிமை வேண்டும் என்பதைப் பற்றிதான் பேசுகிறார்கள்.
பெரியார் 1925 க்கு முன்னால் பேசியவற்றை, சுமார் எண்பது, எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுது எல்லோரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல மருத்துவர் என்பவர் நோயை துல்லியமாக தெரிந்துகொள்வார், அதுவே பாதி மருத்துவம் முடிந்தது போல என்று சொல்வார்கள். அதுபோல பெரியார், இந்த சமுதாயத்தின் நோயை மிகத் துல்லியமாக அறிந்திருந்தார். அதற்கான மருந்தை மிகச் சரியாக மக்களிடத்தில் கொண்டுபோய் கொடுத்தார் என்பதை பெரியார் தொண்டர்களைவிட அவர்கள் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒரு பக்கம். இன்னொருபக்கம், பழுத்த மரத்தின் மீதுதான் கல்லடி படும் என்று சொல்வார்கள், இப்பொழுது அரசியல்வாதிகளுக்கு, தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு பழுத்த மரமாக கண்ணுக்கு தெரிவது பெரியார்தான். பெரிய தத்துவங்களை பேசுகிறவர்கள் எல்லாம், பெரியார் மீது தங்கள் விமர்சனங்களை பேச துடிக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள். அவர் மீது குற்றசாட்டுக்களை வைத்து தங்களை அறிவாளிகளாக காட்டிகொள்ள நினைக்கிறார்கள். தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் மணியரசன் அவர்கள் கூட, பெரியாரை தமிழ் தேசத்தின் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார். [அவரிடம் நாம் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை]. பெரியார் குழப்பமாக பேசினார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
பெரியார், தமிழ் தேசியமே பேசவில்லை, தனி தமிழ்நாடு வேண்டும் என்று தான் பேசினார் என்பதை இவர்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும். தமிழ் தேசியம் என்றால், ஸ்டாலினும், லெனினும் ஒரு கொள்கையை உண்டாக்கி வைத்துவிட்டார்கள், என்பதற்காக பெரியார் இங்கு தனி தமிழ்நாடு கேட்கவில்லை. ரஷ்யாவில் தைத்துவிட்ட செருப்பை எடுத்துகொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் – அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். பிரிந்து செல்லும் உரிமையோடு, இணைந்து வாழ விரும்புகிற சிந்தனை அவருக்கு இருக்கவே இல்லை. நாம் இணைந்து வாழ முடியாது, பிரிந்தே சென்றாக வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னவர். அருகோ என்ற [பலபேருக்கு தெரியாத, நாம் சொல்லி சிலருக்கு தெரியும்] ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் ”திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டு நாள் அன்று காலை வரை, தமிழர் கழகம் என்று பெயர் வைப்பதாக இருந்ததாம், நீங்கள் கன்னடராயிற்றே, தமிழர் கழகம் என பெயர் வைப்பதா என்று, சத்யமூர்த்திஅய்யர் பெரியாரிடம் தொலைபேசியில் கேட்டாராம், உடனே திராவிடர் கழகம் என பெரியார் மாற்றிகொண்டாராம்”. சத்யமூர்த்திஅய்யர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான், அந்த மாநாடே நடைபெற்றது. இறந்துபோனவர் எப்படி தொலைபேசியில் பேசமுடியும் என நமது பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதினார். பிறகு இராஜாஜி பேசியதாக மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி என்றாலும், நுணுக்கமான கேள்விகளைப் பார்ப்பனர்கள்தான் கேட்கமுடியும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலும். 1939 முதல் தமிழர், திராவிடர் என்பதை பற்றி பேசி விவாதிக்கப்பட்டு, பெரியார் தெளிவான விளக்கத்தையும் சொல்லியிருக்கிறார். தமிழர் கழகம் என்பது மொழி போராட்டத்திற்கு தான் பயன்படும். சமூக விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதிதான் மொழி போராட்டமேயொழிய, அதுவே முழு போராட்டமாகி விடாது. இந்தி எதிர்ப்பு என்பது மொழி போராட்டம் அல்ல, தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, சமயயியல் இவற்றில் ஆரியத்தை, மனுதர்மத்தை புகுத்த நினைக்கும் சூழ்ச்சிக்கு எதிரானது என்றே பெரியார் சொன்னார்.
பெரியார் மறைந்த அடுத்தமாதமே, 1974 ஜனவரியில் திராவிடர் கழகத்தால் ஒரு பிரச்சார பயணம் தொடங்கப்பட்டது. அப்பொழுது மணியம்மையார் அவர்கள் தலைவராக இருந்த காலம். ”பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடிப்போம்” என்று சூளுரை பொதுக்கூட்டத்தில் நாங்களெல்லாம் உறுதிமொழி எடுத்தோம். உறுதிமொழியை எங்களுக்கு சொன்ன மணியம்மையார் மறைந்தார். அவருக்கு பின்னால் சொல்லிக் கொண்டிருந்தவர் சூளுரையை மறந்துவிட்டார். இப்பொழுது நாங்கள் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் மக்களுக்கு தெரியபடுத்தினால் தான், அதை பின்பற்ற சொல்ல முடியும். பெரியாரின் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று சொல்லிகொண்டிருந்த வீரமணி அவர்கள், நாங்கள் வெளியிட்ட பெரியாரின் நூல்களுக்கு, ’குடிஅரசு’ தொகுப்பு வெளியீட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார். பெரியார் நீண்ட காலமாக திராவிடர் என்ற சொல்லை எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாரென்பது, அந்த குடிஅரசு பக்கங்களை புரட்டும் போது தெரிகிறது. திராவிடர் என்ற சொல்லை இன விடுதலைக்கு, சமூக விடுதலைக்கு அவர் பயன்படுத்தினார். நம்மை அடிமையாக்கிய ஆரியத்திற்கு எதிரான சொல்லாக திராவிடத்தை பார்த்தார். அரசியல் விடுதலைக்கு தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசினார். சமூக விடுதலை என்று வருகிற போது திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தினார்.
1944 இல் தென்னிந்திய நல உரிமை சங்கம், திராவிடர் கழகம் என மாற்றப்படுவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்க தலைமையோடு, நீதிகட்சி தலைமையையும் பெரியார் ஏற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே, பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப் பட்டுவிட்டன. 1942 ஆம் ஆண்டிலேயே திருச்சியில் உள்ள பொண்மலையில் திராவிடர் கழக ஆண்டு விழா கூட்டத்தில் பெரியார் கலந்துகொண்டு பேசுகிறார். 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை துவங்கி வைக்கிறார். 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையில் திராவிடர் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் பேசுகிறார். திராவிடர் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இயங்குகிறது என்றாலும், அதிகாரபூர்வமாக பெயர் மாற்ற எப்பொழுது முடிவு செய்தார்கள் என்றால், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தேவாங்கர் பள்ளிக்கூடத்தில் நீதிக்கட்சியின் தலைமை நிர்வாககுழு கூட்டம் பெரியார் தலைமையில் நடைபெற்றிருக்கிறது, 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாத குடிஅரசில்,(26-11-1943) அக்கூட்டதின் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம் என்பதை, தமிழில் திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் செளத் இந்தியன் திரவிடியன் பெடரேசன்(south indian Dravidian federation) என்றும் பெயர் மாற்றப்படவேண்டும் என்றும், கடந்த திருவாரூர் மாநாட்டில் திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் இதை அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று தமிழ் தேசியவாதிகள், காலையில் முடிவு செய்து மாலையில் பெரியார் மாற்றிகொண்டதாக, பொய்ப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரியார் ஒரு பழுத்த மரம் என்பதுதான்.
பெரியார், திராவிட நாடு என்று சென்னை மாகாணத்தைதான் சொன்னார். நான்கு நாடுகளின் கூட்டுஅரசை தான் திராவிட நாடு என்று, அண்ணாதான் சொன்னார். அண்ணாகூட பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளின் கூட்டு அரசாகதான் திராவிட நாட்டை கூறினார். மொழி வழி பிரிந்தும், இன வழி கூடியும் உள்ள நாடாகதான் திராவிட நாட்டை கூறினார். முப்பது மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையோடு, கூடி வாழ ஒப்புகொள்கிறவர்கள், பிரிந்து செல்லும் உரிமையோடு நான்கு நாடுகள் கொண்ட அண்ணாவின் திராவிட நாட்டை ஏன் விமர்சிக்கிறார்களோ, நமக்கு புரியவில்லை.
அப்படிதான் எல்லைப் போராட்டத்தில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்றும், இப்பொழுது ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 1953 இல் ஆந்திரா பிரிந்த போதுதான் இந்த சிக்கல் வந்தது. அப்போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று, திருத்தணியில் நடந்த ஒரு எல்லைப் போராட்டம், மற்றொன்று சென்னை நகரை ஆந்திராவுக்குக் கேட்டார்கள் என்பது. இதில் பெரியார் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, வேலூரில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசுகிறார், எல்லைப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி வருகிறது, அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். ’முதல் கூட்டத்தில் ம.பொ.சி உட்பட நாங்கள் எல்லோரும் கலந்து கொண்டோம், எல்லைப் போராட்டத்தைப் பற்றி பேசினோம், அப்போது நான் ஐந்து திட்டங்களை முன் வைத்தேன். ”எல்லைப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள தயார். இந்த போராட்டத்தோடு இந்தி எதிர்ப்பையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். படை, போக்குவரத்து, வெளியுறவு துறை தவிர, அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குதான் இருக்கவேண்டும், சென்னை ராஜ்யம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றப்படவேண்டும். காங்கிரஸ் கட்சி தட்சிண பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நினைக்கிறது அதை எதிர்க்கவேண்டும்” என்று. இந்த ஐந்து கோரிக்கைகளில், தமிழ் தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால் தமிழ் தேசத்தின் தந்தையாக கருதப்படுகிற மா.பொ.சி, சொன்னார் – அவர் ””நான் இந்தியன் என்பதால் இந்தி மொழியை ஏற்றுக்கொள்கிறேன், நான் இந்து என்பதால் என் சமய சடங்குகளில், சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்கிறேன்” என்றவர். இதை இரண்டையும் எதிர்த்த பெரியார் வைத்த அந்த கோரிக்கைகளுக்கு, ’கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவே வேண்டாம்’ என மா.பொ.சி சொன்னார். மா.பொ.சி உயிரோடு இருந்த காலத்தில் பெரியார் இதை பதிவு செய்துள்ளார். தாராளமாக நீங்கள் போராடுங்கள், நாங்கள் உங்களோடு இணைந்து நிற்கமுடியாது என்று பெரியார் தெரிவித்து விட்டார்.
அதன் பின்னால் சென்னையைப் பற்றி வந்த போதுதான், நான் விஸ்தீரணத்திற்கு போராடுபவன் அல்ல, விடுதலைக்கு போராடுபவன் என்று அழுத்தமாக பெரியார் சொன்னார். இருந்தாலும் இதில் ஏன் சம்பந்தபட்டிருக்கிறேன் என்றால், மொழிவாரி என்று பேசுகிறவர்கள், மொழிவாரியாக பிரிந்துவிட்டு, மொழி அல்லாத நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார்களே என்ற கருத்துதானே அல்லாமல், மற்றப்படி சென்னை நகரம், தமிழர்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ, பெரிய தொண்டு செய்திருக்கிறது, செய்து வருகிறது அல்லது செய்ய முன்வரும் என்பதற்காக அல்ல என்று, பேசியிருக்கிறார். இந்த இரண்டயையும் சொன்ன பெரியாரின் கருத்துக்களை, எங்கள் பழைய தலைவர் [வீரமணி] மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால், இந்த தமிழ் தேசியவாதிகள் சொல்லும் புரட்டுகளை மக்கள் புரிந்திருப்பார்கள். பெரியாரின் கொள்கைகள் திடலுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது. வெளி கொண்டுவருபவர்களையும், தடுக்க பார்க்கிறார்கள். குடிஅரசு வழக்கில் பார்த்திருப்பீர்கள், உச்சநீதி மன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை, விசாரணைக்கே தகுதி அற்றது என்று தள்ளுபடி செய்த செய்தி, வீரமணி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது, கோரிக்கைகளை மாற்றிக்கொள்கிறோம் என்ற மனுவை, இப்பொழுது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் நினைவு நாள் பரிசாக அவருக்கு கொடுத்திருக்கிறது.
பெரியார் கொள்கைகளை எடுத்து சொல்லுகிற, நடைமுறை படுத்துகிற, பெரியாரின் வழியில் தொட்ர்ந்து போராடுகிற இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள சக்தி குறைவாக இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தி, செயல்படுத்த வேண்டும் என்று கருதுகிறோம். அதன் வெளிப்பாடாகதான், பல போராட்டங்களை நடத்துகிறோம். அண்மையில் ஆயுதபூசை அன்று கூட ஒரு போராட்டம் நடந்தது. அரசியல் சட்டம் எழுதப்பட்டபோதே, இது மதசார்பற்ற நாடு என்று எழுதிவிட்டார்கள். அரசு அலுவகங்களை கோவிலாக்காதே, கடவுள் படங்கள் இருந்தால் அகற்றுங்கள் என அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆணை பிறபித்தார். அதன் பின்னர், அடிக்கடி கலவரம் ஏற்பட காரணம் என்ன என்பதை கண்டறிய, 1994 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிகாலத்தில், உள்துறை மூலமாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் மதம் கலப்பதுதான் இதற்கு காரணம் என அந்த குழு அறிவுறுத்தியது. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை நீக்கவும் மத வழிபாடுகள்கூடாது என்றும், மத சுலோகங்கள் எழுதப்படக்கூடாது என்றும், மத வழிபாட்டிடங்களை கட்டக்கூடாது என்றும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சுற்ற்றிக்கை அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது, தலைமை செயலாளர் இப்போது இருப்பதை போலவே அப்போதும் ஒரு பார்ப்பனர்தான் [ஹரி பாஸ்கர்]. அவர் அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்ற்றிக்கை அனுப்பியுள்ளார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு எ.டி.ஜி.பி யாக இருந்த லத்திகாசரன் [இப்போது டி.ஜி.பி] அவர்கள், காவல் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பிய சுற்ற்றிக்கையில் குறிப்பாக காவலர் குடியிருப்புகளில் கூட மதவழிபாடு நடத்தக்கூடாது என்று உள்ளது. இவ்வளவு இருந்தும் தொடர்ந்து காவல் நிலையங்களில் ஆயுதபூசை நடைபெற்று வந்தது. இவ்வாறு இந்த ஆண்டும் நடக்குமேயானால், அதை தடுக்கும் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என, பெ.தி.க தலைமை செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, பல இடங்களில் எங்கள் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சென்னையிலும், மேட்டூரிலும் தடுத்து, வழக்குகளை சந்தித்தார்கள். பெரியார் வன்முறையை விரும்பமாட்டார் என்று அப்போது பலர் சொன்னார்கள்.
ஆனால் பரதிதாசன் பாடல்களை பாடநூல்களில் சேர்க்கப்பட வேண்டும் என்ற செய்திகளைக் குறிப்பிட்டுவிட்டு, ”எனக்கு பின்னால் இதை சொல்லவும் ஆள் இல்லை, தி.மு.க வை தவிற இதை செய்யவும் கட்சியில்லை. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றாவிட்டால், நானும் எனது தோழர்களும் உள்ளே நுழைந்து அகற்றுவோம்” என, 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெரியார் விடுதலை நாளேட்டில் ஒரு அறிக்கை விடுகிறார். அதை இன்று நாங்கள் செய்திருக்கிறோம். பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடித்திருக்கிறோம். இதுதானே நாம் பெரியார் மறைந்தவுடன் எடுத்த உறுதிமொழி.
நாம் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பதில் பெரியாரின் நிலைபாடு என்ன என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். எப்பொழுதும் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று பார்ப்பனர்கள் சொல்லி கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் கட்சியயை எதிர்த்தவண்ணம் இருந்த பெரியார், 1954 இல் காமராசர் வந்தவுடன் ஆதரித்தார். அடுத்து தி.மு.க வை ஆதரித்தார் அவ்வளவுதான்.
காமராசர் ஆட்சியின் போதுகூட காங்கிரஸை ஆதரிக்கிறேன் என்பது தவறு, காமராசரைதான் ஆதரிக்கிறேன் என்று பலமுறை தெளிவாக கூறியிருக்கிறார். காமராசருக்கு பின், ஆட்சிக்கு வந்த பக்தவசலத்தை எதிர்த்து, 1965 இல் பக்தவசலம் ஆட்சி கண்டன கூட்டம் நடத்தியவர் பெரியார். எப்பொழுதும் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று சொல்லப்பட்டபோது, ”எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்கான காரணம்” என்ற தலைப்பில் 19-09-1968 இல் ஒரு அறிக்கை எழுதினார். எனது ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாக, (நாத்திகர்களாக) ஆக வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், உலகில் பார்ப்பனர்கள் இருக்கக்கூடாது, பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகதான், இனி எந்த கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ, எனக்கே தெரியாது என்று எழுதிவிட்டு, கீழே குறிப்பு என்று ஒன்று எழுதுகிறார். அதில், ”இந்த மூன்றுக்கும் தி.மு.க எதிரியானால், என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று எழுதியுள்ளார். அண்ணா ஆட்சியில் இருக்கும்போதே இதை எழுதியுள்ளார். கல்வி துறை உட்பட எந்த துறையில் பார்ப்பனர்கள் இருந்தாலும், பெரியார் உடனடியாக விடுதலை நாளேட்டில் பட்டியல் போட்டுவிடுவார். ஆட்சியாளர்கள் மாற்றிகொள்வார்கள். எனவே தவறு நடந்தால் பட்டியல் போட்டு சுட்டிக்காட்ட ஒருவர் வேண்டும்.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்…. என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு ஆட்சிக்கு ஜால்ரா அடிப்பதல்ல பெரியார் தொண்டனின் வேலை. 2001 முதல், இந்த நாட்டில் தொடர்ந்து யார் தலைமை செயலாளராக இருக்கிறார்கள்? பாப்பாத்தி ஆட்சியை கூட விட்டுவிடுங்கள், ’திராவிடர்கள்’ ஆட்சி வந்தபின்னால், திரிபாதி, ஸ்ரீபதி, மாலதி உட்பட எல்லோரும் பார்ப்பனர்கள். இந்த நாட்டின் தலைமை செயலாளராக தொடர்ந்து பார்ப்பனர்களே இருந்தால் நமக்கு என்ன நடக்கும்? இதை சுட்டிகாட்ட வேண்டாமா? சுட்டிகாட்டாமல் இருப்பது தவறு என்றுதான், எங்கள் பங்காளி இயக்கத்திற்கு சொல்கிறோம். கல்லூரி முதல்வராக இருந்த போது ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சரிசெய்ய மாணவிகளை அனுப்பி வைத்ததாக இரண்டு முறை குற்றம்சாட்டப்பட்ட மீனா என்ற, ஒரு பாப்பாத்தி திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்திற்கு இப்போது துணைவேந்தராக வந்துள்ளார். உடனே இவ்வளவு காலம் இயங்கிவந்த ’பெரியார் உயராய்வு மய்யம், பாரதிதாசன் உயராய்வு மய்யம்’ உடனடியாக மூடப்பட்டுவிட்ட்து. நாம் யாருமே போராடதான் இல்லை.
பெரியாரின் முதல் கொள்கையாக இருந்தது ஜாதி ஒழிப்பு. காங்கிரஸ் காரராக இருந்தபோதே, கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, அது மலையாள நாடாக இருந்தபோதும், அங்கு சென்று போராடினார். அப்போது, தென்னாட்டில் நடந்த இரண்டு சம்பவங்கள் என் மனதை உலுக்கியது என்றும், .அதில் ஒன்று வைக்கத்தில் இராமசாமி நாய்க்கர் நடத்திய போராட்டம், என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஏட்டில் தலையங்கம் எழுதினார்.
1922 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக இருந்த போது, தாழ்த்தப்பட்டவர்களையும், நாடார்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, திருப்பூர் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தார். பின்னாளில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தியதாக சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர் இராமாயனத்தையும் மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டி, அதை எதிர்த்துப் பேசினார். இராமாயணமும், மனுதர்மமும் என் மக்களை கோவிலில் நுழைய தடுக்குமேயானால், அதை எரிக்க வேண்டும் எனப் பேசினார் பெரியார். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடன், ஜாதி ஒழிப்பு வேலைகளைதான் செய்தது. 1926 முதல் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசினார். 1928 இல் இருந்து பொதுவுடமையைப் பற்றிப் பேசினார். 1938 இல் தனி தமிழ்நாட்டைப் பற்றி பேச தொடங்கினார். பெரியார் தொண்டர்கள் என்பவர்கள் இந்த நான்கு கொள்கைகளை முன்னெடுத்து செல்வதுதான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்ற பிரச்சனையைப் பற்றி உங்களுக்கு தெரியும். 1971 இல் கலைஞர் அவர்கள் சட்டம் போட்டார். 234 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. ஒட்டு மொத்த தமிழகமும் ஏற்றுக்கொண்டதை, பதினொரு பார்ப்பனர்கள், பதிமூன்று வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார்கள். அப்போது தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும், பார்ப்பனர் அல்லாதாரை நியமித்தால் என்னிடம் வா என்று உச்சநிதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ’ஆப்ரேசன் சக்சஸ், பேசண்ட் அவுட்’ என பெரியார் சொன்னார். பி.வி. கானே என்ற ஒருவன் ஒரே ஒரு புத்தகம் எழுதினான் [சட்டப்புத்தகம் அல்ல] இந்து சட்டங்கள் பற்றிய தொகுப்பு எழுதினான். அதை வைத்து தீர்ப்பு சொன்னார்கள். பெரியார் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர் ஒரு குழு அமைத்தார். ஆய்வு செய்தார்கள். கலைஞர் வந்து அர்ச்சகர் பயிற்சி கொடுத்தார், எல்லாம் முடிந்தது. மீண்டும் பார்ப்பனர்கள் தடை ஆணை வாங்கிவிட்டார்கள். நீதிமன்றம் சொல்லிவிட்டது, நான் என்ன செய்வது என கலைஞர் சொல்லிவிட்டார்.
ஆனால், சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ உறுப்பினர்கள் இல்லாத பெரியார், தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற கொள்கையோடு வைத்திருந்த இயக்க தோழர்களை கொண்டு பெரியார் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டுவந்தார். எனவே நாம் மக்களை திரட்டி போராடியிருக்க வேண்டும். கேரளாவில் ராகேஷ் என்ற தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக்கியதற்கு, ஆதித்யன் என்ற பார்ப்பான் வழக்கு தொடுத்தான். மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் பராசரன் வாதாடினார். இந்தியாவில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னால், சாஸ்திரம் உட்பட எதுவும் செல்லாது என தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பை சொன்னவர்கள், தமிழ்நாட்டை சார்ந்த துரைசாமிராஜு அவர்களும், கர்நாடகத்தில் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டில் படித்து, பகுத்தறிவு பெற்ற ராஜேந்திரபாபு அவர்களும் நீதிபதிகளாக இருந்தார்கள். தென்னாட்டை சார்ந்தவர்கள் சட்டம்தான் பெரிது என்றார்கள். ஆனால் நமக்கு எதிராக தீர்ப்பு சொன்ன வடநாட்டு பார்ப்பனர்கள் சாஸ்திரம்தான் பெரிது என்கிறார்கள்.
உங்களுக்கு சாஸ்திரம் பெரிது என்றால், எங்களுக்கு, தமிழர்களுக்கு, குறைந்தபட்சம் இறை நம்பிக்கையுள்ள தமிழர்களுக்கு, திருமூலம் பெரிது. திருமூலர் சொல்கிறார்
“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சிக்கில்
போர்கொண்ட மன்னர்க்கு பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”
பாப்பான் பூஜை செய்தால், நாட்டில் பஞ்சம், ஆட்சி செய்கிறவர்களுக்கு நோய்வரும் என்கிறார் திருமூலர்.
அதேபோல தொல்காப்பியம், பார்ப்பனர்களுக்கு என்ன வேலை என்பதை சொல்கிறது.
காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,
செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்,
அன்னவை பிறவும் பார்பார்க்கு உரிய,
என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர் வந்துவிட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டு விட்ட்து, சிறுநீர் கழிக்கிறது – இது நல்லது கெட்டது என்று கூறுவது), செலவுறு கிளவி – இப்போது செல்லலாம் – அப்பா வெளியூர் போயிருக்கிறார், அம்மா கோவிலுக்கு போயிருக்கிறார் அவள் தனியாகத்தான் இருக்கிறாள் என்பது போல. – செலவழுங்கிளவி – செல்லக்கூடாது என்ற செய்தி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறான், இன்று அந்த பக்கம் போய்விடாதே-உதைதான் விழும் என்பது போல…) இவைகள் தானய்யா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக்கூறுகிறார். பூஜை செய்வதை அல்ல…..
ஒளயையார் சொல்கிறார்
“நூலெனிலோ கோல்சாயும், நுந்தமரேல் வெஞ்சமராம்,
கோலெனிலோ பாங்கே குடிசாயும் – நாலாவான்
மந்திரியுமாவான், வழிநடைக்குத் துணையும் ஆவான்,
அந்த அரசே அரசு”……. என்று.
(பார்ப்பான் ஆட்சி செய்தால் காட்டிகொடுத்து நாடுகெட்டுவிடும் , சத்ரியன் ஆட்சி செய்தால் சண்டையாகவே இருக்கும், வைசியன் ஆட்சி செய்தால் வரி போட்டே ஒழித்துவிடுவான், சூத்திரன் ஆள்வதுதான் நல்ல அரசு)
தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் இவைகளெல்லாம்தானே சட்டமாக இருந்திருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு எந்த தடையும் வந்திருக்காதே!
பெரியார், காரைக்குடி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசுகிறபோது சொல்கிறார் “பறையன், சக்கிலியன் என்பதைவிட சூத்திரன் (வேசிமகன்) என்பவன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது கொள்கை. குடிப்பதற்கு தண்ணீர் தராமல், அவன் குளிக்கவில்லை என்று சொல்வது உன் தவறா? அவன் தவறா? என்று கேட்டார். இப்படி வாழ்கிறபோது இருக்கிற ஜாதி கொடுமை, இறந்தபின்னால் சுடுகாட்டிலும் இருக்கிறது. இதை ஆதிக்கசாதிகள் மட்டும் அல்ல, அரசும் செய்கிறது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்படும் சுடுகாட்டில், தாழ்த்தப்பட்டவர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என பிரித்து வைத்திருக்கிறார்கள். தீண்டாமை வன்கொடுமை சட்டம் யார்மீது பாயவேண்டும்? மாவட்ட ஆட்சி தலைவர், திட்ட அலுவலர், வட்டார அதிகாரிகள் மீதல்லவா பாயவேண்டும்? தீண்டாமயை ஒழிக்கிறேன் என போலிதனமாக பேசிகொண்டிருந்த, காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள், போராட்டத்தை எடுத்தோம். அப்போது, குறைந்தபட்சம் அரசு திட்டங்களில் கட்டப்படும், இரட்டை சுடுகாடுகளையாவது அகற்றுங்கள் என்று பெரியாரின் சிந்தனைகளை ஆட்சியில் நடைமுறை படுத்த வேண்டும் என்று சொன்ன அண்ணா அவர்களின் நினைவு நாள் வரை அரசுக்கு ஒரு கால அவகாசத்தை கொடுத்தோம். பெரியார் நினைவு நாளில், பெரியாரின் விரல்பிடித்து அரசியல் நடைபயின்ற, கலைஞரிடம் நாம் வைக்கிற வேண்டுகோள், உங்களை ஆளாக்கி, அமைச்சரவையில் உட்கார வைத்த அண்ணா அவர்களின் நினைவு நாளுக்குள், குறைந்தபட்சம் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட சுடுகாடுகளில்,இடுகாடுகளில் இருக்கும், இடைச் சுவரை அகற்றவேண்டும். இல்லாவிட்டால், சட்டவிரோதமாக இருக்கும் இடைச்சுவரை, சட்டத்தை நடைமுறை?