ஏழு தமிழர் விடுதலை கோரி வாகன பேரணி – ஜூன் 11 வேலூர்

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

”ஏழு தமிழர் விடுதலை கோரி ஜூன் 11 ஆம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் சிறைச்சாலை முன்பு துவங்கி சென்னை கோட்டை வரை நடைபெற உள்ள வாகன பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க கோரி இப்பேரணி நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக தன் மகனுக்காக மட்டுமல்லாமல் அனைத்து சிறைவாசிகளுக்காகவும் நீண்டதொரு மனித உரிமைப் போராட்டத்தை நடத்திவரும் அற்புதம் அம்மாள் அவர்கள் தலைமையில் 7 தமிழர் விடுதலை கூட்டியக்கம் ஒருங்கிணைக்கும் இந்த பேரணியை 7 பெண்கள் துவங்கி வைக்கின்றனர்.

சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் 11 ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்ததமாக காவல்துறை விசாரணைக்கு என பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார்.பின்பு அவர் மீது பேட்டரி வாங்கி கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கில் பிணைக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது. அண்மையில் அம்மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் பேரறிவாளன் அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த மத்திய புலனாய்வுத் துறை காவல் கண்காளிப்பாளர் தியாகராஜன் அவர்கள்  ஒப்புதல் வாக்குமூல பதிவில் தான் செய்த பிழையை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பிழையாக பதிவு செய்யப்பட்ட  ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமானது. இவ்வழக்கில் மரணதண்டனையை உச்சநீதிமன்ற ஆயத்தில் உறுதிப்படுத்திய மூத்த நீதிபதி கே.டி.தாமஸ் அவர்களே கூட பின்பு இவர்களுக்கான விடுதலையை பரிந்துரை செய்துள்ளார்.மேலும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற  நீதிபதி கிருஷ்ணய்யர் உள்ளிட்ட  பல நீதிபதிகள்,மனித உரிமை ஆர்வலர்கள் இவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் விடுதலையை வலியுறுத்திய பிறகும் இன்னமும் இவர்களின் விடுதலை தள்ளிப்போவது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.

தமிழக முதல்வர் அவர்கள் 7 தமிழர் விடுதலையில் உள்ள நியாயங்களை உணர்ந்து குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகளின்படி விடுதலை செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டால் பலன் இன்றி போனது.

இந்நிலையில் தமிழக அரசு அரசியல் சட்ட 161 ஆம் பிரிவின்படி தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன் படுத்தி 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இக்கோரிக்கை  நடைபெற இருக்கும் இப்பேரணியில்  அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மனிதாபிமான கோரிக்கையின் அடிப்படையில்  நடைபெறும் இப்பேரணியில் பங்கேற்கும் அமைப்புகள்,கட்சிகள் எந்தவிதமான கட்சி அடையாளங்களோ,பதாகைகளோ,கொடிகளோ இல்லாமல் மனித நேயர்களாக மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் இரு சக்கர வாகனத்தில் பேரணியில் கலந்து கொள்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் இந்த கோரிக்கை பேரணியில் மிகுந்த பொறுப்புணர்வோடு கலந்து கொண்டு பேரணி சிறப்புற நடந்தேற முழு ஒத்துழைப்பு நல்குமாறு கனிவுடன் கோருகிறோம்.

‘கொளத்தூர் தா.செ.மணி’,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
13254378_1241866565838610_5613521085052318915_n

You may also like...