முற்றுகைப் போராட்டம் ஏன்?
தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன், கோகுல் ராஜ், இப்போது சங்கர். இன்னும் எத்தனை படுகொலைகள் தொடரப் போகிறதோ? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.
தென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் ஜாதி வெறி சக்திகள் சவால் விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறையோ, தமிழக அரசோ எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் ‘கவுரவக் கொலைகளே’ நடப்பது இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்,
ஓ. பன்னீர் செல்வம். மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘கவுரக் கொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான்.
தென் மாவட்டங்களில் 5 ஆண்டு களில் நடந்த 600 படுகொலைகளில் 70 சதவீதம் ஜாதி ஆணவக் கொலைகள், இதைத் தடுத்து நிறுத்த காவல்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனாலும், காவல்துறை தோல்வி அடைந்தே நிற்கிறது. தமிழக காவல்துறைக்கே இது மிகப் பெரும் தலைக்குனிவு!
ஜாதி ஆதிக்க சக்திகளின் வாக்கு வங்கிகளை இழந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே கவலையாக உள்ள அ.தி.மு.க. – தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் ஜாதி வெறி சக்திகளைக் கண்டிக்காமல், ‘கள்ள மவுனம்’ சாதிக் கின்றன.
வாங்கு வங்கி அரசியலுக்காக ஜாதிய அணி திரட்டல்கள் நடக்கின்றன. இதற்கு வலிமை சேர்க்க ஆதிக்க ஜாதித் தலைவர்கள் கட்சிகளை உருவாக்கு கிறார்கள்.
பார்ப்பனியம் விரும்பும் ஜாதிய கட்டமைப்பு உறுதியாகி வெறியூட்டப் பட்டு படுகொலைகளாக உருவெடுக் கின்றன.
தமிழகத்தை ஆளத் துடிக்கும் பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, இந்த படுகொலை குறித்து முதலில் கருத்து சொல்லவே மறுத்தார். பிறகு வாக்கு வங்கி அச்சத்தில் எதிர்ப்பதாக கூறினார். பா.ஜ.க. அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், அவரவர் ஜாதிக்குள் திருமணம் செய்து கொண்டால் பிரச்சினை வராது என்று ‘குலதர்மம்’ பேசுகிறார்.
எனவேதான், திராவிடர் விடுதலைக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறது.
- ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் வரவேண்டும்.
- ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
- ஜாதி மறுப்புத் திருமணம் புரிந் தோரின் வாழ்வுரிமைப் பாது காப்பைப் புறக்கணித்து, வாக்குரிமை பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
- ஜாதி எதிர்ப்பு – தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டக் களத்தை மேலும் வலிமையாக்கிட ஜாதி எதிர்ப்பு, சமூக நீதி இயக்கங்களின் வலிமையான ஒற்றுமை உருவாக வேண்டும்.
(திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட அறிக்கை)
பெரியார் முழக்கம் 24032016 இதழ்