ஈரோடு பெரியார் சிலை முன் நடந்த ஆவணப்பட வெளியீடு … Sending to Clouds

‘பை பாஸ்’ ஆவணப்பட வெளியீடு !

கழகத் தலைவர் அவர்கள் ஈரோடு பெரியார் சிலை முன் ஆவண படத்தை வெளியிட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையில்,தடய அறிவியல் ஆய்வுகளில் உள்ள குளறுபடிகளை ஆவணப்படுத்தி கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் மற்றும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி ஆகியோர் ஆவணப்படமாக ”பை பாஸ்” எனும் தலைப்பில் இயக்கி இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட 25 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று 21.05.2016 காலை ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலை முன் இந்த ஆவணப்பட வெளியீடு நடைபெற்றது..

வரவேற்புரையாற்றிய தோழர் பொன் சந்திரன்,
”ராஜீவ் வழக்கிலும், ஈழப் பிரச்சினைகளிலும், புலிகள் தொடர்பான வழக்குகளிலும் கைதானவர்களும், காவல்துறை நெருக்கடிகளில் பாதிக்கப்பட்டவர்களும். தொடக்க காலத்திலிருந்து புலிகளை ஆதரித்தவர்களும், உதவியவர்களும் பெரிதும் பெரியார் தொண்டர்களே என்பதால் பெரியார் பிறந்த மண்ணில், பெரியார் சிலைக்கு முன்னால் பெரியார் இயக்கத்தவர் வெளியிடுவதே பெரிதும் பொருத்தமானது” என்று குறிப்பிட்டு, கழகத்தலைவர் கொளத்தூர் மணியை ஆவணப்பட குறுந்தகட்டை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.

வெளியீட்டு உரையாற்றிய கழகத் தலைவர், ”சமூக அக்கறையுடன் இயங்கிவரும் மருத்துவர்கள் புகழேந்தி, மருத்துவர் ரமேஷ் ஆகிய இருவரும் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து சேகரித்த தகவல்களை உள்ளடக்கியதாக இந்த ஆவணப் படம் வெளிவருகிறது. இதில் கூறப்பட்டுள்ள தகவல்களில் என்ன அய்யங்கள் எழுப்பப்பட்டாலும் அவற்றை களைய அவ்ர்கள் இருவரும் தயாராக உள்ளனர். அவற்றில் கூறப்படும் தகவல்கள் ராஜிவ் வழக்கின் தீர்ப்பு, பல பிழையான ஆதாரங்கள் மீதே வழங்கப்பட்டுள்ளதை நிறுவிக் காட்டலாம்; அவை அய்யம் திரிபற இருக்குமேயானால், நம்மை போன்றோரின் கடமையென்ன? ஊடகங்கள், சமூக, மனித உரிமைப் போராளிகள் கடமையென்ன? அரசின் கடமையென்ன?

நமது நீதிமன்ற மரபில், உச்ச நீதிமன்ற ஆயம் வழங்கிய தீர்ப்பை மீண்டும் மறு விசாரணை செய்ய வழிவகை ஏதும் இல்லை. ஒரு புதிய மரபாக புதிய ஆதாரங்கள் கிடைத்தால் மறு விசாரணை செய்யலாம் என்பதை உண்டாக்குவதா? அல்லது இது போன்ற புது சூழல் உருவாகும்போது மாநில, மத்திய அரசுகள் அவற்றைக் கணக்கில் கொண்டு அரசியல் அமைப்பு அவர்களுக்கு வழங்கியுள்ள 161, 72 ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்த நிர்ப்பந்திப்பதா? விடுதலை செய்யப்பட்டாலும் கால்நூற்றாண்டு காலம் தங்கள் வாழ்க்கையின் வசந்தத்தை கழித்தோரின் இழப்பை எப்படி ஈடுசெய்வது என பலவற்றையும் ஆய்ந்து செயல்பட வேண்டியது நம் கடமையல்லவா?” என்று பல கேள்விகளை எழுப்பினார்.

இந்த நிகழ்வில் ஆவணப்படத்தை இயக்கிய மருத்துவர் ரமேஷ்,கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மற்றும் தோழர் பொன்.சந்திரன், தோழர் நிலவன், வழக்கறிஞர் கி.சிதம்பரன்,கழக அமைப்புச்செயலாளர் தோழர் ரத்தின சாமி, தோழர் ஈரோடு இளங்கோவன்,தோழர் சண்முகபிரியன், தோழர் சரவணன் உள்ளிட்ட கழகத் தோழர்கள்,ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக ”sending to clouds” எனும் நிகழ்வில் கழகத் தலைவர் அவர்கள் ஆவணப்படம் இணைக்கப்பட்ட வண்ண பலூன்களை வான்வெளியில் பறக்கவிட்டு நிகழ்வை நிறைவு செய்தார்

 

IMG_0448 IMG_0452 IMG_0454 IMG_0456 IMG_0466 IMG_0467 IMG_0468 IMG_0470

You may also like...