ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி அம்பேத்கர் பிறந்த நாள் 18042016
”ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழாவில்’கழக தலைவர் கொளத்தூர் மணி பேச்சு
மன்னார்குடி ஏப். 20. தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற ஆணவ படுகொலைகளை தடுத்து
நிறுத்திட தமிழக அரசு உடனடியாக தனி சட்டத்தை இயற்ற வேண்டுமென அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழா கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர்மணி பேசினார்.
புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி சிட்டி ஹாலில் கருத்தரங்கம் திருவாரூர் மாவட்ட செயலாளர் காளிதாசு தலைமையில் நடைபெற்றது.
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நாகை மாவட்ட செயலாளர் மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பசரன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், புதுக்கோட்டை மாவட்ட
செயலாளர் பூபதி கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட செயலாளர் சித.திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கத்தில் தலைவர்களின் படதிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியார் படத்தினை எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் விலாயத்உசேன், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தினை மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சீனிஜெகபர்சாதிக், பட்டுக்கோட்டை அழகிரி படத்தினை எழுத்தாளர் வெங்கடேசன், பகத்சிங் படத்தினை திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், ரோஹித் வெமுலா படத்தினை பெரியார் அம்பேத்கர் மக்கள் கழக அமைப்பாளர் செல்வன், பட்டுக்கோட்டை சதாசிவம் படத்தினை தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர்.
ஜாதி மறுப்பு திருணமங்களும், ஆணவ படுகொலைகளும் என்கிற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் ”கம்யூனிஸ்ட் அறிக்கையை இந்தியாவிலேயே தமிழில் முதலில் மொழி பெயர்த்த தலைவர் பெரியார் ஆவர். அம்பேத்கரை தமிழகத்தில் வெகுஜன மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பெரியார். அம்பேத்கரின் பாரளுமன்ற உரைகள் மற்றும் அயல்நாடுகளில் அம்பேத்கர் பேசிய உரைகளை தமிழில் மொழிபெயர்த்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவரும் பெரியார்தான்.
இந்தியாவிலேயே ஜாதிமுறை அமைப்புகள் குறித்து 24வயதிலேயே கட்டுரைஎழுதி அதை சமர்பித்த ஒரே தலைவர் அம்பேத்கர் ஆவார். சட்ட மேதை மட்டுமல்ல இன்றைக்கு பொருளாதார நிபுணர்களின் அறிக்கைகளில் பின்புலமாக இருப்பது அம்பேத்கரின் சிந்தனையாகும், பெரியாரும் அம்பேத்கரும் சமகாலத்தில் மக்களுக்காக உழைத்த பெரும் தலைவர்கள் ஆவார்கள். ஜாதிய ஒடுக்குமுறை காரணமாக அம்பேத்கர் லட்சகணக்கான மக்களோடு புத்த மதத்திற்கு மாறினார். நான் இந்துவாக பிறந்தது எனது தவறு அல்ல ஆனால் நான் ஒருபோதும் இந்துவாக சாகமாட்டேன் என கூறியவர் அம்பேத்கர் ஆனால் இன்றைக்கு இந்துத்துவ பேசுகின்ற பாஜகவினர் அம்பேத்கரை இந்து மத சீர்திருத்தவாதியென பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஜாதியின் பெயரால் கடந்த 3 ஆண்டுகளில் 80திற்கும் மேற்பட்டோர் ஆணவ படுகொலைகள் செய்யப்பட்டிருக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் கூறுகிறது. மத்திய சட்ட ஆணையம் மத்திய மகளிர் ஆணையம் இனைந்து வடிவமைத்து கொடுத்திருக்கின்ற திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டம் குறித்து பல்வேறு மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை கூறிவிட்டன. ஆனால் இன்றுவரை தமிழக அரசு இச்சட்டம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனவே ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசே உடனடியாக ஒரு தனி சட்டத்தை இயற்ற வேண்டும். மேலும் ஜாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்யும்போது தேவையில்லாத ஆவணங்களை கேட்டு அப்பதிவுகளை காலதாமதபடுத்துவது கண்டனத்திற்குரியது. பதிவு திருமணத்திற்கு வயது சான்றிதழ் மட்டுமே போதுமானது தமிழக அரசு திருமண பதிவு முறைகளை எளியமையாக்கவேண்டும்” என கூறினார்.
மன்னார்குடி நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்