வஞ்சகம் – பார்ப்பன சூழ்ச்சிக்கு பலியானவர்! அப்சல்குருவை நினைவு கூர்வது தேசத் துரோகமா?

தொலைக்காட்சி விவாதங்களில் சங்பரிவாரங் களின் பிரச்சார பீரங்கிகள் செவிப் பறைகளைக் கிழிக்கிறார்கள். “அப்சல் குருக்களாக மாறுவோம்; ஓராயிரம் அப்சல்குருக்கள் உருவாகுவார்கள்” என்று முழக்கமிட்டவர்கள் தேச துரோகிகளா? இல்லையா? இதை எப்படி ஒரு தேசம் அனுமதிக்க முடியும்? மீண்டும் மீண்டும் இதே கேள்விதான்.
அப்சல் குரு உண்மையிலே தேசத் துரோகி தானா? நாடாளுமன்றத் தாக்குதலில் அவர் பங்கு பெற்றவரா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை; கையில் சிக்கிய ஒரு அப்பாவியை வஞ்சகமாக பொய்யாகக் காவு கொடுத்தக் கயவர்கள் இவர்கள் என்பதை இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும்.
இந்த வழக்கில் நடந்த முறைகேடுகளை – மோசடிகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
• 2001, டிசம்பர் 3 ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் முன் தாக்குதல் நடந்தது. இந்த கொடும் குற்றத்தில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 7 பேரும் இதில் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கான திட்டங்களை வகுத்தவர்கள், மசூத் அசார், காசி பாபா, தாரிக் அகமது என்று காவல்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், அவர்களை பாதுகாப்புப் படையோ, டெல்லி சிறப்புப் போலீசோ கைது செய்யத் தவறி விட்டன. அவர்கள் வேறு நாட்டில் இப்போதும் இருக்கின்றனர். இந்த நிலையில் நாடாளு மன்றத்தை உண்மையில் தாக்கியது யார் என்பதற்கான அடையாளங்கள் எவருக்குமே தெரியாது.
• ஆனால், நாடாளுமன்றத்தைத் தாக்கியதாக ‘குற்றவாளிகள்’ எவரையாவது சிலரை நாட்டுக்கு அடையாளப்படுத்த வேண்டிய நெருக்கடியில் பாதுகாப்புப் படை இருந்தது.
• தாக்குதல் நடத்திய அடுத்த இரண்டாவது நாளிலேயே டிசம்பர் 15 ஆம் தேதி நான்கு பேரை சிறப்புப் புலனாய்வுத் துறை கைது செய்து, இவர்கள்தான் தாக்குதலுக்கு திட்டமிட்ட வர்கள் என்று குற்றம்சாட்டியது. டெல்லி பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் கிலானி, அப்சல் குரு, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சவ்கத்குரு, அவரது கர்ப்பிணி மனைவி நவ்ஜோதி ஆகியோரே குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
• தாக்குதலில் ஈடுபட்ட சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் தங்கள் சட்டைப் பைக்குள்ளேயே திட்டமிட்டவர், மற்றும் உதவி செய்தவர்களின் விவரங்களையும் முக்கிய தொடர்பு எண்களையும் வைத்திருந்தார்களாம். அதனடிப் படையில் “குற்றவாளி”களைக் கைது செய்ததாகப் புலனாய்வுத் துறை கூறியது.
• அன்றைக்கு ஆட்சியிலிருந்த வாஜ்பாய் தலைமை யிலான ஆட்சியும் ஊடகங்களும் இதை உணர்ச்சிக் களமாக கட்டமைத்தன.
• குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டரீதியாக தண்டிக்க முடியாது என்பதை உணர்ந்த டெல்லி சிறப்புக் காவல்துறை, பொய் வழக்குகளின் ஓட்டைகளை அடைத்திட, பத்திரிகையாளர், தொலைக்காட்சியாளர் முன் விசாரணை நடத்தும் ஒரு “அதிசயத்தை” அரங்கேற்றியது. பார்ப்பனர் களும் இந்துத்துவா உணர்வு கொண்டவர்களும் நிறைந்த ஊடகவியலாளர்களின் சந்திப்பு ஒன்றை புதுடில்லி லோடி சாலையிலுள்ள புலனாய்வு சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு அப்சல்குரு கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். “நாடாளுமன்றத் தாக்குதலுக்கு நானே திட்டமிட்டேன் என்று தன்னைத் தானே குற்றம்சாட்டிக் கொள்ள வேண்டும்” என்று அப்சல்குரு அச்சுறுத்தப்பட்டார். “அப்படி கூறாவிட்டால் ஏற்கனவே சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ள அப்சல் குரு தம்பி பிணமாக்கப்படுவார்” என்று அச்சுறுத்தினார்கள். இப்படி ஒரு சட்டவிரோத கூத்து, எந்த விசாரணையிலும் நிகழ்ந்தது இல்லை. அப்போதும்கூட பேராசிரியர் கிலானி சதியில் ஈடுபட்டார் என்று கூறுவதற்கு மறுத்த அப்சல்குரு, பத்திரிகையாளர்கள் முன்னிலை யிலேயே மிரட்டப்பட்டார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவரை அதற்கு முன்பே ஊடக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது பற்றி நீதிமன்றத்தில் கேள்வி வந்தபோது அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று புலனாய்வுத் துறை அதிகாரி அப்பட்டமாக பொய் சொன்னார்.
• தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பிலும் அப்சல் குரு உறுப்பினராக இல்லை என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இவர் மீது ‘பொடா’ சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. காரணம், அவை எல்லாமுமே வலுவற்றவை களாக இருந்தன. காவல்துறை சார்பில் விசாரிக்கப் பட்ட 80 சாட்சிகளிலும் ஒருவர்கூட அப்சல்குரு பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருந் தார் என்று கூறவில்லை.
• காஷ்மீர் குடிமகனான அப்சல்குரு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு படித்துக் கொண்டிருந்த போது காஷ்மீர் இளைஞர்களின் உணர்வுகளில் உந்தப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியில் இணைந்து, பாகி°தான் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயிற்சிக்கு போனார் என்பது உண்மை. ஆனால், மூன்று மாதங் களிலேயே பாகி°தான் காஷ்மீரைத் தனது நாட்டுடன் இணைப்பதற்காகவே இந்தப் பயிற்சிகளை அளிக்கிறது என்பதைப் புரிந்து, அதை வெறுத்து பயிற்சியைத் தொடர மறுத்து திரும்பிவிடுகிறார்.
• காஷ்மீர் திரும்பிய அப்சல்குரு, எல்லை காவல் படையின் முன் சரணடைந்து, இனி திருந்தி வாழப் போவதாகக் கூறிவிட்டார். சரணடை வதற்கு முன், வேறு இரு ‘தீவிரவாதி’களை சரணடையச் செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்புப் படை விதித்த நிபந்தனைகளையும் ஏற்று செயல்பட்டார். அவர் சரணடைந்த போராளி என்பதற்கான சான்றிதழையும் எல்லைப் பாதுகாப்புப் படை வழங்கியது.
• ஆனால், சரணடைந்த போராளிகளை அவ்வப் போது முகாம்களுக்கு இழுத்துச் சென்று சித்திரவதை செய்வதும், விடுதலை செய்வதற்கு லஞ்சம் கேட்பதும், பாதுகாப்புப்படையின் வழக்கம். இப்படி அடிக்கடி சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டார் அப்சல்குரு.
• ஒருமுறை ‘ஹீம் ஹமா’ என்ற அதிரடிப்படை முகாமுக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்து, உதவி கண்காணிப்பாளர்களாக இருந்த வினய் குப்தா என்பவரும், தரீந்தர் சிங் என்பவரும் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். சரணடைந்த பிறகு திருமணம் செய்து கொண்டவர்தான் அப்சல்குரு. திருமணம் முடிந்த அடுத்த சில வாரங்களிலேயே இந்த சித்திரவதை நடந்தது. உடனே வீட்டிலிருந்த எல்லா உடைமைகளையும் விற்று, அந்த லஞ்சப் பணத்தைக் கொடுத்து, அப்சல் குருவை மீட்க வேண்டியிருந்தது என்று அப்சல்குருவின் மனைவி, கண்ணீருடன் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
• காஷ்மீரில் சரணடைந்த பிறகு எல்லைப் பாதுகாப்புப் படையின் சித்திரவதைகளை சந்திக்க முடியாத அப்சல்குரு, டெல்லிக்கு குடிபெயர திட்டமிட்டு டெல்லிக்கு வந்தபோது தான் அவர் மீது ‘நாடாளுமன்ற தாக்குதல் சதி’ சுமத்தப்பட்டது. அப்போது மருத்துவ சிகிச்சைக்கான கருவிகளை வாங்கி, விற்கும் தொழிலைச் செய்து கொண்டிருந்தார் அப்சல்குரு.
• ஒரு வழக்கறிஞர் வைத்துக்கூட வாதாடும் வசதியற்றவராக அப்சல்குரு இருந்தார். ‘தேசபக்தி’, ‘பயங்கரவாதம்’ என்று கட்டமைக்கப்பட்ட உணர்வுகளுக்கு எதிராக அப்சல்குருவுக்காக வாதாட வழக்கறிஞர்கள் எவரும் முன்வரவில்லை. சிறப்பு நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும் வாய்ப்புகள் முழுமையாக அப்சல் குருவுக்கு மறுக்கப்பட்டது. கண்துடைப்புக்காக சிறப்பு நீதிமன்றம் ‘இந்துத்துவா’ உணர்வுள்ள ஒருவரையே சட்ட ஆலோசகராக அப்சல் குருவுக்காக நியமித்தது. அவர் சிறையிலிருக்கும் அப்சல்குருவை ஒருமுறைகூட சந்திக்கவில்லை. அப்சல்குருவுக்கு எதிராக சாட்சி சொன்னவர்களை குறுக்கு விசாரணை செய்யவும் இல்லை. அப்சல்குரு மீதே அவர் வெறுப்பைக் கக்கினார். வழக்கை விசாரித்த நீதிபதி திங்ரா என்பவரிடம் அப்சல்குருவே இதை முறை யிட்டார்.
நீதிபதி கண்டு கொள்ளவே இல்லை.
• அப்சல்குருவுக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப் பட்டது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, அப்சல்குருவுக்காக வாதாட ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறிய கருத்துதான் ஆச்சரிய மானது. “அப்சல்குரு தனக்கு கழுத்தில் தூக்குப் போட விரும்பவில்லை. விஷ ஊசி மூலம் சாகடிக்கப்படவே விரும்புகிறார்” என்று கூறினார். தனக்கு எதிராக தனக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், இப்படி ஒரு விபரீத கருத்தைக் கூறினார் என்ற உண்மைகூட அப்சல்குருவுக்கு, உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்த பிறகுதான் தெரிய வந்தது.
• நாடாளுமன்றத் தாக்குதலுக்கு அப்சல்குரு திட்டமிட்டார் என்பதற்கு எந்த ஒரு நேரடி சாட்சியமும் இல்லை. அப்சல்குருவை சித்திரவதைக்குள்ளாக்கி அவரிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்தான் – அவருக்கே எதிராக முன் வைக்கப்பட்டது; ‘பொடா’ சட்டம் இதை அனுமதிக்கிறது. நாடாளுமன்றத் தாக்குதல்களை செய்தார் அப்சல் குரு என்பதற்கு வேறு எந்த சாட்சியமும்
இல்லை.
• இந்த வழக்கை புலனாய்வு செய்த தலைமை அதிகாரி, ராஜ்பீர்சிங் ஊழல் புகாரில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டார். புலனாய்வு செய்த மற்றொரு முக்கிய ஊழல் அதிகாரி இலஞ்சப் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டார்.
• அப்சல்குரு தூக்கிலிடப் போகிறார் என்ற செய்தி முறைப்படி அவரது குடும்பத்துக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை. தொலைக்காட்சி வழியாகவே இந்த செய்தியை அறிந்து கொண்டதாக அவரது மனைவி கூறியுள்ளார்.
எல்லாவற்றையும்விட கொடுமை தூக்கு தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றம் அதற்கு கூறிய காரணம்தான்! “இந்திய மக்களின் மனசாட்சி இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று விரும்புவதால் அதை திருப்திப்படுத்த தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது” – இப்படி ‘உலகையே வியக்க’ வைத்த ஒரு தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்.
நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதில் சதித் திட்டம் இருந்தது என்று “கண்டுபிடித்து” நாட்டுக்குச் சொல்லியே ஆக வேண்டும் அல்லவா? அதற்குத்தானே மக்களின் பல ஆயிரம் கோடி வரிப் பணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் புலனாய்வுத் துறை சிறப்பு புலனாய்வுத் துறைகள் இருக்கின்றன.
தாக்குதலை முன்கூட்டியே தடுக்க முடியாமல் நாடாளுமன்ற வளாகம் வரை தீவிரவாதிகளை நுழைய அனுமதித்தவர்களுக்கு, வீராப்பு தேச பக்தியை காட்ட வேண்டிய கட்டாயம்! அதற்காகவே மனம் திருந்தி, திருமணமும் செய்து கொண்டு, தொழில் தொடங்கி புதிய வாழ்க்கைப் பாதைக்குத் திரும்பிய அப்சல்குருவை, பலி கொடுத்தார்கள். சட்டங்களை மரபுகளை காலில் போட்டு மிதித்தது – அன்றைய காங்கிரஸ் ஆட்சி தான் இதை செய்தது. ஏன்? பா.ஜ.க. ‘அப்சல்குரு’வை அரசியல்
பகடையாக பயன்படுத்தி வந்தது. அதன் வாயை அடைப்பதற்காக அப்சல் குருவின் கதையை முடித்தது காங்கிரஸ்.
இந்த அப்சல்குருவுக்கு ஏன், நினைவு நாள் நடத்தக் கூடாது? அந்த நாளில் ஏன் தூக்குத் தண்டனைக்கு எதிராக முழங்கக் கூடாது?

02-1425301211-afsal-guru-600

பெரியார் முழக்கம் 03032016 இதழ்

You may also like...