‘ஜாட்’ சமூகத்தினரின் மிரட்டலுக்கு மண்டியிடும் ஆட்சியாளர்கள்
அரசியலில் பொருளாதாரத்தில் வலிமையாகத் திகழும் ‘ஜாட்’ ஜாதிப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்துக்கு மாநில பா.ஜ.க. ஆட்சி பணிந்து, இடஒதுக்கீடு வழங்க முன் வந்திருக்கிறது. ஏற்கெனவே புபேந்திரசிங் ஹீடா, முதல்வராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் ‘ஜாட்’ இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டு, பிறகு உச்சநீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் ஒப்புதல் பெறாமலே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதே காரணம்.
பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ‘ஜாட்’ பிரிவினரை சேர்க்கவில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் உண்டு! மண்டல் ஆணையம் ‘பிற்படுத்தப்பட்டோரை’ ஒரு ஜாதியினரின் சமூக நிலை, கல்வி நிலை, பொருளாதார நிலைகளைக் கண்டறிந்து, அதனடிப்படையில் நிர்ணயம் செய்தது. இதற்காக அறிவியல் அடிப்படையிலான காரணிகள் தேர்வு செய்யப்பட்டன. மொத்தம் 22 காரணிகளை வரையறை செய்து, இந்த 22 காரணிகளில் (Factors) 50 சதவீதத்துக்கும் மேலாக பின் தங்கியிருந்த பிரிவினர் பிற்படுத்தப்பட்டோராக பட்டியலிட்டனர். இந்த அடிப்படையில் ‘ஜாட்’ பிற்படுத்தப்பட்டோராக வர முடியாத உயர்ந்த நிலையில் இருந்தனர். பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க ஒப்புதல் தரவில்லை.
மக்கள் தொகை மற்றும் பொருளாதார வலிமை கொண்ட பிரிவு, வன்முறை மூலம் மிரட்டி, அரசைப் பணிய வைப்பதும், வாக்கு வங்கி அரசியல் கட்சிகள் இதற்கு பணிந்து பிற்படுத்தப்பட்டோராக அறிவிப்பதும் சமூக நீதிக்கு இழைக்கும் அநீதி; துரோகம். ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரிவினர், இந்த ஆதிக்க சக்திகளோடு போராட முடியாமல் மிகவும் மோசமான நிலைக்கு மீண்டும் கீழே தள்ளப்பட்டு விடும் ஆபத்துகள் இதில் அடங்கியிருப்பதை கவனிக்க வேண்டும்.
‘இடஒதுக்கீடு’ என்ற சொற்றொடருக்குள்ளே மட்டும் சமூக நீதி அடங்கி யிருக்கவில்லை. அதன் உள்ளடக்கத்தில் தான் சமூக நீதி அடங்கியிருக்கிறது. மாநில பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ‘ஜாட்’ சமூகத்தினர் வந்து விட்டால் மத்திய அரசு பதவிகளுக்கும் பொருந்தும் என்ற நிலை உருவாகி, 27 சதவீத இடஒதுக்கீட்டிலும் பாதிப்புகளை உருவாக்கி விடும். அது, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோரை 27 சதவீத ஒதுக்கீடுகளில் பாதிக்கச் செய்து விடும் ஆபத்துகள் உள்ளன.
அரியானாவில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியும், இப்போது நடக்கும் பா.ஜ.க. ஆட்சியும் ‘ஜாட்’ சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க துடிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சமூக நீதிக்கு எதிரானது.
பெரியார் முழக்கம் 25022016 இதழ்