2 மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் கழகத் தோழர்கள்
ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை கைது செய்து, இரண்டு மாதங்கள் உருண் டோடி விட்டன. சேலம் சிறையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்கள் கிருஷ்ணன், அருண் குமார், அம்பிகாபதி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 2 ஆம் தேதி விடியற்காலை தோழர் கொளத்தூர் மணி, அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 30 ஆம் தேதி மற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
அக்டோபர் 29 ஆம் தேதி சென்னையில் தோழர்கள் உமாபதி, இராவணன், மாரிமுத்து, மனோகரன் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதங்களாகவும் தீர்மானங்களாகவும் வலியுறுத்திய கோரிக்கையை கழகத் தோழர்கள் வலியுறுத்தினால் அது தேசப் பாதுகாப்பு என்ற குற்றமாகி விடுகிறது.
இது ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்!
ஆட்சிகள் மாறினாலும் தொடர்ந்து அடக்குமுறைச் சட்டங்களுக்கு பெரியார் இயக்கத் தோழர்கள் பலிகடாவா கிறார்கள்!
கடந்த நவம்பரில் உயர்நீதிமன்றத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் வழக்கு விசாரணையை 6 வாரம் தள்ளிப் போட்டுள்ளது.
இடைக்கால பிணை கோரியும், தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஜனவரி 2 ஆம் தேதி கழக வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
பெரியார் முழக்கம் 02012014 இதழ்