அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை இலங்கைக்கு அனுப்பும் ஆஸ்திரேலியாவுக்கு கண்டனம்
அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல், அவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வருகிறது ஆஸ்திரேலிய அரசு. உயிருக்கு உறுதியில்லாமல் ஈழத் தமிழர்கள் அச்சத்தால் பரிதவிக்கிறார்கள். அடைக் கலம் தேடி ஆஸ்திரேலியா வந்த 46 தமிழர்களை சிறையிலடைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, இப்போது, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்திய அரசு, இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுதும் தமிழர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்த ஈழத் தமிழர்கள் 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைபட்டுள்ள ஈழத் தமிழர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவர் சிறையிலேயே தற்கொலை
செய்து கொண்டார். சிலர் மனைவி, குழந்தைகளுடன் நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.
கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இராஜபக்சேவை தீவிரமாக ஆதரித்துப் பேசிவர் ஆஸ்திரேலிய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. சில சூழ்நிலைகளில் சித்திரவதைகள் நடப்பது தவிர்க்க முடியாது என்று கூறினார். அடுத்த நாளே, இலங்கைக்கு ஆஸ்திரேலியாவிடமிருந்து இரண்டு கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போய்விட்டது. கடந்த சில ஆண்டுகளாக அடைக்கலம் தேடி வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பி வருகிறது, ஆஸ்திரேலியா! சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பெரியார் முழக்கம் 23012014 இதழ்