வினாக்கள்… விடைகள்…!
தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்; அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது. -மோடிக்கு அத்வானி அறிவுரை
ஆமாம்! ‘ராமபிரான்’ அனுமார் படையுடன் வெற்றியை காலடியில் கொண்டுவந்து சேர்த்து விடுவான் என்று அதீதமாய் நம்பி ஏமாறக் கூடாது; சரிதானே!
மோடி – பிரதமராகவே முடியாது. தேனீர் வேண்டு மானால் விற்கலாம். – மணி சங்கர் அய்யர்
அவர் தேனீர் விற்கட்டும்; நாட்டை நாங்கள்தான் விற்கவேண்டும் என்கிறீர்களா?
“என்னை தீவிரவாதிகள் கடத்தப் போகிறார்கள் என்றும், ஊடகங்களுக்கு இதைக் கூற வேண்டாம்” என்றும் கூறிவிட்டு, உளவுத் துறையே ஊடகங் களுக்கு செய்தி கொடுத்துவிட்டது. – கெஜ்ரிவால்
ஆமாம்! தீவிரவாதிகள் உளவுத் துறைக்கு தகவல் தருவார்கள். உளவுத் துறை பத்திரிகைகளுக்கு தகவல் தரும்.
உறவு முறையில் திருமணம் செய்வதால்தான் காது கோளாறுகள் ஏற்படுகின்றன. – ‘தினமணி’ செய்தி
ஜாதி வெறி பேசும் தலைவர்களே, காதில் விழுகிறதா?
மத்திய அரசைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி முன் விவசாயிகள் சட்டை அணியாமல் ‘நாமம்’ போட்டுப் போராட்டம். – செய்தி
‘வைணவர்’களாக மாறிப் போராடுகிறார்கள் என்று கவுரவமாக சொல்லுங்கள்.
கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ‘காந்தி ஜாதி’ என்று பெயர் சூட்டக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு. – செய்தி
நல்லாத்தான் இருக்கு. ஆனால், கோட்சே ஜாதிக் காரங்க கலவரம் செய்யாமல் கண்காணிக்கணும்.
விஷ ஊசித் தட்டுப்பாடு, அதன் விலை உயர்வு காரணமாக, அமெரிக்காவில் மரணதண்டனை நிறைவேற்றம் குறைகிறது. – செய்தி
எங்களால் உயிரைக் காக்கவும் முடியும் என்று அரசுகளுக்கு உணர்த்திய விஷ ஊசிகளே! நன்றி, நன்றி!
கொசுத் தொல்லையிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற தமிழகம் முழுதும் கொசுவலைகளை வழங்க வேண்டும். – தா. பாண்டியன்
அப்படி கொசுவலைகளை வழங்க முடியா விட்டால், கொசுக்களை தேச விரோதிகளாக அறிவித்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் முதல்வர் பரிசீலிக்கலாம்.
‘பிராமணர்கள்’ முன்னேற்றத்துக்கு பெரிதும் தேவை, உழைப்பா, தியாகமா என்று ‘பிராமணர்’ இளைஞர் மாநாட்டில் பட்டிமன்றம் நடந்தது. – தினமலர் செய்தி
உழைப்பும் இல்லை; தியாகமும் இல்லை; ‘உழைப்பை தியாகம்’ செய்ததே முன்னேற்றத்துக்கான காரணம்! இதுதான் இந்த நாட்டாமையின் தீர்ப்பு!
பம்பையிலேயே அய்யப்ப பக்தர்களை முடக்கி வைத்து கேரள போலீசார், கூண்டுக்குள் அடைக் கிறார்கள். நெரிசலில் சிக்கிய பக்தர்கள் ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்று முழக்கமிட முடியாமல், ‘அய்யோ… அம்மா’ என அலற வேண்டியிருந்தது. – தமிழ் ‘இந்து’ செய்தி
‘அய்யோ அம்மாதான்’ இயல்பான அபயக்குரல் என்பதை, இப்போதாவது புரிஞ்சுக்குங்க சாமி!
பெரியார் முழக்கம் 23012014 இதழ்