வினாக்கள்… விடைகள்…!
மனிதர்களைக் கொன்ற புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். – செய்தி
அப்பாடா! தமிழ்நாட்டில் உண்மையான ஒரு ‘என்கவுண்டர்’ இப்போதுதான் நடந்திருக்குது.
தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கம்; தி.க. தலைவர் கி.வீரமணி சதி; அழகிரி தாக்கு. – செய்தி
இது அபாண்டம்! உண்மையில் கி.வீரமணிக்கு இதில் தொடர்பிருந்தால் “அழகிரியுடன் – கழத்தினரோ, கழகக் குடும்பத்தினரோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்ற வாசகம் – அறிக்கையில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்!
காஞ்சி ஜெயேந்திரன், தில்லை நடராசன் கோயிலின் உள் பிரகாரத்துக்குள்ளே காரில் வந்து தரிசனம்; கோயில் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை. – ‘தமிழ் இந்து’ செய்தி
அடுத்த முறை தரிசனத்துக்கு ‘நட ராஜனையே’ காரில் ஏற்றி காஞ்சி புரத்திற்கு அனுப்புவாங்க பாருங்க! நிர்வாக அதிகாரம் முழுமை யாக தீட்சதர்களிடமே வந்துடுச்சே!
போக்குவரத்துக்கு இடையூறு! சிவாஜி சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு. – செய்தி
அதே இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி, அதில் சிவாஜி சிலையை வைத்திருந் தால், இப்படி ஒரு விபரீதம் நடந் திருக்குமா? இராமகோபாலனே தெருவில் வந்து போராடியிருப்பாரே!
பணத்துக்காக வாக்குகளை விற்கக் கூடாது! – தேர்தல் ஆணையம்
சரி; அப்ப அமெரிக்க டாலராகவாவது தரச் சொல்லுங்கள்!
நீங்கள் எனக்கு 60 மாதங்களைக் கொடுங்கள்; நான் உங்களின் வாழ்வை மாற்றிக் காட்டுகிறேன். – மோடி உ.பி.யில் பேச்சு
5 வருடம் ஆட்சியிலிருந்த வாஜ்பாயை இப்படி எல்லாம் மோடி அவமானப் படுத்தலாமா? என்னங்க நியாயம்?
கச்சத் தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர் களுக்கு உரிமையே கிடையாது. – மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் மனு
போச்சு! மீனவர் உரிமையும் போச்சு; மீனவர்களுக்கு உண்மையில் பாடுபடு வது காங்கிரஸ்தான் என்று பேசி வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுரிமையும் சேர்ந்து போச்சு!
உ.பி.யை குஜராத்போல் மாற்ற முலாயம் சிங்கால் முடியாது. அதைச் செய்ய 56 அங்குல மார்பு உள்ளவர்களால்தான் முடியும். – மோடி பேச்சு
விதியை தளர்த்துங்க மோடி ஜி; 55 அல்லது 54 அங்குலம் இருந்தாலும் பரவா யில்லைன்னு கொஞ்சம் சலுகைக் காட்டக் கூடாதா? உங்களுக்குத் தெரியாத அரசியலா?
குடியரசு தினவிழா; அரசு அலுவலகங் களில் உற்சாகக் கொண்டாட்டம். – ‘தமிழ் இந்து’ செய்தி
அரசு அலுவலகத்துல தான் கொண்டாடு வாங்க; மக்களா கொண்டாடப் போறாங்க?
பெரியார் முழக்கம் 30012014 இதழ்