மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

‘நெல்லை தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை’யும் ஐந்திணைத் தொண்டு நிறுவனமும், ஊர்க்காவல் படையினருடன் இணைந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்தபோது ஆற்று மணலில் புதையுண்டுக் கிடந்த சுமார் 125 டன் அழுக்குத் துணிகளை வெளியே எடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் வீசி எறிந்தவை. இதில் பட்டுச் சேலை, வேட்டிகளே அதிகம். இதுபோன்ற அழுக்குத் துணி மற்றும் பூஜைப் பொருட்களால் ஆற்று நீர் கடுமையாக மாசுபடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

திதி கொடுக்கும்போது புதிய வேட்டி, சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இதனால் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் மாசுபட்டு பிற உயிரினங்கள் வாழ லாயக்கற்றதாகப் போய் விட்டது. நீரின் மேல் எண்ணெய்ப் படலம் தேங்கி நிற்பதால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மீன், தவளைகள் அழிந்து போகின்றன. தண்ணீருக்குள் கிடக்கும் உடைந்த பாட்டில்களால் தினமும் பத்து பேருக்காவது ரத்தக் காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

பெரியார் முழக்கம் 29052014 இதழ்

You may also like...