19122015 சேலம் – மக்களைப் பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்

தீர்மானம் : 1

உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக  வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் : 2

கடவுள் நம்பிக்கை கொண்ட பார்ப்பனரல்லாத மக்கள் மீது சுமத்தப்பட்ட ‘சூத்திர’ இழிவு ஒழிப்புக்காக தனது இறுதி மூச்சு அடங்கும் வரை போராடிய தலைவர் பெரியார் ஆவார். கோயில்களில் ஆகமங்களின் வழியாக நிலை நிறுத்தப்படும் ‘இழிவு’ மாற்ற முடியாதது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டதால், ஆகம கோயில்களுக்கு சென்று பார்ப்பன அர்ச்சகர்கள் வழியாக கடவுளை வழிபடுவதைப் புறக்கணித்து, தங்களின் சுயமரியாதை உணர்வை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என்று – பார்ப்பனரல்லாத – கடவுள் நம்பிக்கை உள்ள நம்மின மக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 3

தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி தடை செய்யப்படாத நிலையில் இறைச்சிக்குப் பயன்படுத்தக் கூடிய மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் வணிகத்தை, நமது வணிகர்கள் நடத்தி வருகிறார்கள். வன்முறை வழியாக விற்பனைக்கு செல்லும் மாடுகளைத் தடுத்து பறிமுதல் செய்யப்படுகின்றன. விவசாயிகளால் வாங்கிச்செல்லப்படும் மாடுகளையும் பறிமுதல் செய்கிறார்கள்.

மதவெறி சக்திகள் மாணவர்கள் பெயரில் – சில வன்முறையாளர்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படும் இந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்தாமல், காவல்துறை இந்த அடாவடிக்கு துணை போவதை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

இதனால் பாதிப்புக்குள்ளாகி வரும் வணிகர்களுக்கும் , விவசாயிகளுக்கும் தனது முழுமையான ஆதரவை திராவிடர் விடுதலைக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது; தேவைப்பட்டால் மாடுகளைப் பறிமுதல் செய்யும் வன்முறைகளைக் கண்டித்துப் போராடவும் தயாராக இருக்கிறது என்பதை அறிவித்துக் கொள்கிறது.

You may also like...