வினாக்கள்… விடைகள்…!
மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர், தான் போட்டியிடும் கர்நாடக-கோலார் தொகுதியில் வாக்குப் பதிவு எந்திரத்தை வாஸ்து சாஸ்திரப்படி திருப்பி வைத்து வாக்களித்தார். – செய்தி
தண்டவாளத்தில் ஓடும் ரயில் என்ஜினையும் வாஸ்துப்படி திருப்பி விடாதீங்கய்யா….
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அமைச்சரவையில் தி.மு.க.வை சேர்க்க மாட்டோம். – ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்
தேர்தலை சந்திக்காமலேயே அமைச்சரவை அமைக்க புதுசா ஏதோ வழி கண்டுபிடிச்சிருக்கார் போலிருக்கு.
சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களியுங்கள். – ப. சிதம்பரம்
‘கார்ப்பரேட்’ கம்பெனி தேவைகளை நான் பூர்த்தி செய்துவிட்டேன்; இனி எனது மகன், சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வந்திருக்கிறார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை திருடிவிட்டது பா.ஜ.க. – மத்திய அமைச்சர் ஆனந்த் வர்மா
புரியுது; எங்களுக்கு ஒரே கொள்கைதான்னு சொல்ல வர்றீங்க. அதை ஏன் இவ்வளவு ஆத்திரத்தோடு சொல்றீங்க?
இந்தத் தேர்தலில் வாக்களிக்காதவர்களை அடுத்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்காமல் தண்டிக்க வேண்டும். – அத்வானி
ஆமாம்! வாக்களிக்காதவர்களை தேர்தல் ஆணையம் தண்டிக்கட்டும். வாக்களித்த அப்பாவிகளை ஆட்சிக்கு வந்தவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
‘மிருகவதை கூடாது’ என்ற கொள்கைக்காக ‘இந்து’ பத்திரிகை அலுவலகத்தில் அசைவ உணவு சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. – நிர்வாகம் அறிவிப்பு
நல்ல கொள்கைதான். மாடுகளிடமிருந்து கறக்கப்படும் பால், அதிலிருந்து எடுக்கப்படும் தயிர், மிருகத்தின் தோலிலான காலில் போடும் செருப்பு – இதற்கெல்லாம் அனுமதி உண்டா சார்?
(பதவி ஓய்வு பெறும்) ஏப்.25ஆம் தேதிக்குள் சாந்தன், பேரறிவாளன், முருகன் விடுதலை குறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. – கலைஞர் பேச்சு
இதேபோலத்தான் டி.எம்.செல்வகணபதி ஊழல் செய்தது உண்மை என்று, சி.பி.அய். நீதிமன்றம் தேர்தல் காலம் என்றுகூட பார்க்காம அச்சத்தை ஏற்படுத்தி தண்டனை வழங்கியிருக்கு! இப்படி எல்லாம் நீதிமன்றம் எல்லை மீறுவதை சகிக்க முடியாது. விடாதீங்க; நல்லா அடிச்சுப் பேசுங்க, தலைவரே!
பெரியார் முழக்கம் 24042014 இதழ்