அன்புமணி மீதான வழக்கு என்ன?

அன்புமணி மீதான சி.பி.ஐ. வழக்குகள் குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். “அவர் மீது முதல் வழக்கு, ம.பி. மாநிலம் இந்தூரில் பதிவு செய்யப்பட்டது. இங்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ‘இன்டெக்° மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரில் சுரேஷ் சிங் என்பவர் புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினார். 2008-2009 ஆம் கல்வியாண்டில் இந்தக் கல்லூரி எம்.பி.பி.எ°. இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்காக, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்து.

இந்திய மருத்துவக் கவுன்சில் குழு அங்கு சென்று ஆய்வு செய்து, ‘கூடுதல் மாணவர்களை சேர்க்கத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என அறிக்கை கொடுத்துவிட்டது. பின்னர் சுரேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன் பேரில் நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய, அந்தக் குழுவும் முதல் குழுவைப் போலவே அறிக்கை தாக்கல் செய்தது.

இதன் பிறகுதான் சுரேஷ் சிங், அன்புமணியின் இலாகாவை நாடியிருக்கிறார். மத்திய சுகாதாரத் துறை இதில் அதீத ஆர்வம் எடுத்துக் கொண்டு, புதிதாக துபியா, குப்தா என இரு டாக்டர்களை அனுப்பி ஆய்வு செய்தது. அவர்கள் கொடுத்த ‘ரிப்போட்’ அடிப்படையில் இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு சுகாதாரத் துறை அனுமதித்தது. ஆனால் மீண்டும் மருத்துவக் கவுன்சிலின் ஆய்வில், மேற்படி துபியா, குப்தா ஆகியோரின் அறிக்கையில் ஏக குளறுபடிகள் இருப்பது தெரிய வந்தது. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் ‘கவனிப்பில்’ அவர்கள் திளைத்ததாகவும் தெரிய வந்தது.

மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி, சுரேஷ் சிங், ஆய்வுக் குழு உறுப்பினர்களான துபியா, குப்தா மற்றும் அப்போதைய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் பலரும் வழக்கில் சிக்கியுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையை டெல்லி தனி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

இதேபோல உ.பி. மாநிலம் பரேலியில் உள்ள கோகில்கந்த் மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்திலும் அன்புமணி மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 25இல் லக்னோ தனி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இரு வழக்குகளும் ஒரே மாதிரியான தன்மை கொண்டவை. இரு வழக்குகளிலும் குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளின் பட்டியலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை! எனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, லக்னோ வழக்கும் கடந்த மார்ச் மாதம் டெல்லி தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஒரே நீதிமன்றத்தில் நடக்கும் இந்த இரு வழக்குகளும்தான் அன்பு மணியின் அமைச்சர் கனவைத் தகர்த்திருக்கின்றன. தவிர, அவரது எதிர்கால அரசியலையும் இந்த வழக்குகளே நிர்ணயிக்க இருக்கின்றன” என்கிறார்கள், விவரமறிந்த டெல்லி பிரமுகர்கள்.

5.6.2014 – ‘குமுதம் ரிப்போர்ட்டர்’

பெரியார் முழக்கம் 19062014 இதழ்

You may also like...