வினா-விடை!

நாட்டை தூய்மைப்படுத்தும் பணியை வாரணாசி யிலிருந்து தொடங்குவோம்.  – மோடி

நேர்மையான பேச்சு; உலகிலேயே அதிக சுகாதாரக் கேடு கொண்ட நகரம் அது தானே!

எதிர்க்கட்சியாகும் தகுதியைக்கூட பெறாமல் காங் கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.        – செய்தி

இருக்கலாம். ஆனால், காங்கிரசையே கலைக்கச் சொன்ன காந்தியின் லட்சியத்தை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்களே! இது சாதனை தானே?

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு களின் சதவீதக் கணக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   – செய்தி

இது யாருக்குப் பயன்படாவிட்டாலும் அடுத்த தேர்தலில் ‘வெற்றிக் கூட்டணி’க்கு கணக்குப் போடுவதற்கு தோழர் தமிழருவி மணியனுக்கு நிச்சயம் பயன்படும்.

தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையீட்டை எதிர்த்து வெற்றி பெற்ற தீட்சதர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தில்லை காவல் நிலையத்தில் புகார்.  – தினமலர் செய்தி

இதுக்கு மட்டும், அரசு தலையிடு வேண்டுமா? தில்லை நடராசனிடம் நேரடியாக ‘பாதுகாப்பு’ அர்ச்சனை செய்ய வேண்டியது தானே?

பெரியாறு அணை நீர் மட்டத்தை கேரள அரசு குறைத்த நாளிலிருந்து நீரில்லாத வைகை ஆற்றில்தான் கள்ளழகர் நீராடி வந்தார்.  – ‘தினமலர்’ செய்தி

நீராடுவதோ ஆண்டுக்கு ஒரு முறை; அதுவும் நீரில்லாத ஆற்றில். ‘புளுகு’க்கு அளவே இல்லையா?

கூடங்குளம் முதலாவது அணு உலையில் நீராவி – வெப்ப நீர் செல்லும் குழாய் உடைந்து 6 பேர் காயம்.  – செய்தி

தொழிலாளர்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்குப் பிறகும்        கூடங்குளத்தில்    பாதுகாப்பு இல்லை என்று வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது.

தமிழ்நாட்டில் 5.82 லட்சம்பேர் (1.4 சதவீதம்) ‘நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.  – செய்தி

‘நோட்டா’வே கட்சியாகி ஆட்சியைப் பிடித்து விடும் போல!

தமிழகத்தில் போட்டியிட்ட 835 வேட்பாளர்களில் 734 பேர் ‘டெப்பாசிட்’ இழப்பு.       – செய்தி

பாவம்! ஓட்டுக்கு பணமே கொடுக்காத இந்த வேட்பாளர்களின் ‘டெப்பாசிட்’ தொகையையும் தேர்தல் ஆணையம் பறிக்கலாமா?

முடிந்த வரை சிறப்பாக சேவை செய்ய முயற்சித் தேன்.   – பிரதமர் மன்மோகன் சிங்  கடைசி உரை

அந்த முயற்சி இறுதி வரை வெற்றி பெறவே இல்லை என்ற நிலையிலும் முயற்சித்துக் கொண்டே இருந்த, உங்கள் முயற்சியைப் பாராட்ட வேண்டும்!

சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர் தற்கொலை.      – செய்தி

இந்த செய்தி அறிந்த காங்கிரஸ் வேட்பாளர் அதிர்ச்சியடையாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!

முதன்முறையாக ‘நாசா’ விண்வெளி ஆய்வு மய்ய விஞ்ஞானிகள் செயற்கை நட்சத்திர துகள்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.  – செய்தி

ப்பூ… இது ஒரு சாதனையா? எங்கள் நாட்டில் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் ஜோதிடர்களை நாங்கள் இயற்கையாகவே உருவாக்குகிறோம், தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் தோல்வி ஆய்வுக்குரியது கவலைக்குரியது அல்ல.    – தமிழக காங்.  தலைவர் ஞான தேசிகன்

அதெல்லாம் இல்லை; தோல்வி கவலைக்குரியதே தவிர, ஆய்வுக்குரியது அல்ல என்று ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் எதிர்க்காமல் இருந்தால் சரி!

தேர்தல் வெற்றிக்கு திருவள்ளூர் அ.தி.மு.க.வினரும், தோல்விக்கு திண்டுக்கல் தி.மு.க.வினரும் கோயி லில் மொட்டை அடித்துக் கொண்டனர்.   – செய்தி

‘லஞ்சம்’ வாங்குவதில் கடவுள் எப்போதுமே பாகுபாடு காட்டமாட்டார். ‘ஆண்டவன்’ சன்னதி யில் அனைவரும் சமம்!

14 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 11 இடங்களில் டெபாசிட் இழந்தது.       – செய்தி

மூன்று இடங்களில் எப்படி டெபாசிட் கிடைத்ததுன்னு மறு வாக்குப் பதிவு நடத்த முடியாதுங்க! தேர்தல் ஆணையத்தில் வேலை முடிஞ்சு போச்சு!

பெரியார் முழக்கம் 22052014 இதழ்

You may also like...