தமிழக அரசைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்: இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்காதே!
‘தமிழக அரசே; இடஒதுக்கீட்டைப் புறந் தள்ளாதே!’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஜன.25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. அதற்கான மருத்துவர்கள் தேர்வுக்கான அரசு அறிவிப்பில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்று அறிவிக்கப்பட் டிருந்தது. மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதால் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியாது என்றும், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ மனையில் இடஒதுக்கீடு பின்பற்றுவதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். எனவே ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரை மாற்றி, இடஒதுக்கீட்டைப் பின்பற்றக் கோரியும் கழகம் ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தியது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் காலியிடங்களுக்கான தேர்வில் மத்திய ஆசிரியர் தேர்வாணையம் நிர்ணயித்த தகுதி மதிப்பெண் அளவை தமிழக அரசு குறைக்க விரும் பாததால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் தகுதித் தேர்விலேயே வடிகட்டப்பட்டுவிட்டனர். இதனால், காலியாக உள்ள இடங்களுக்கேற்ப விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் அளவை குறைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மேலும் அதிகமாக தகுதித் தேர்வு வழியாக தேர்ந்தெடுக்கப்படும் உரிமையை மாநில ஆட்சிகளுக்கு மத்திய தேர்வு வாரியம் வழங்கியிருந்தும் ஜெயலலிதா ஆட்சி அதை ஏற்கவில்லை. பல்வேறு மாநில ஆட்சிகள் இப்படி தகுதித் தேர்வுக்கான மதிப்பெண் அளவைக் குறைத்துள்ளன. இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டில் இடஒதுக்கீடுகளைப் புறந்தள்ளக் கூடிய போக்கைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில்: சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஜனவரி 25 ஆம் தேதி முற்பகல் 11.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கி, ஒரு மணி வரை நீடித்தது. ஆர்ப்பாட் டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசிய அவர்,
“சமூகநீதியின் தலைநகர் என்று வி.பி.சிங் அவர்களால் புகழப்பட்ட தமிழ்நாட்டில், இட ஒதுக்கீடு புறந்தள்ளப்படுவது மிகப் பெரும் அவலம். இந்த ஆபத்தை முறியடிக்க வேண்டும் என்றார். சட்டங்களின் தடைகளைத் தகர்த்து, இடஒதுக் கீடுகளை அமுல்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தேடி நிறைவேற்றப்பட்ட தமிழகத்தில் இடஒதுக் கீடுகளைக் கைவிடுவதற்கான வழிமுறைகளை ஜெயலலிதா ஆட்சி தேடிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ‘நேர்முகத் தேர்வு’ என்ற முறை இருந்த போது, பின்தங்கிய சமூகப் பின்னணியில் வரும் மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களோடு, சமூகப் பின்னணிக்கான மதிப்புகளை வழங்கி, அவர் களுக்கான வாய்ப்புக் கதவுகள் திறந்து விடப்பட்டன. இதை சூழ்ச்சிகரமாக முறியடிக்க, ராஜ கோபாலாச் சாரி முதல்வராக இருந்தபோது, நேர்முகத் தேர்வுக் கான மதிப்பெண்ணை குறைத்தார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த காமராசர், அந்த மதிப்பெண் அளவை மீண்டும் உயர்த்தினார். பத்திரிகையாளர்கள் கேட்டபோது, எந்த காரணங்களுக்காக ராஜாஜி மதிப்பெண் எண்ணிக்கையைக் குறைத்தாரோ, அதே காரணங்களுக்காக அதிகரித்துள்ளதாகக் கூறினார். இதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.
69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு நீதிமன்றத்தால் நெருக்கடி வந்தபோது முதலமைச்சர் ஜெயலலிதா, அரசியல் சட்டத்தின் 31(சி) பிரிவின் கீழ், இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். இதன் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமை தடுக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனாலும், உச்சநீதிமன்றத் தில் வழக்கு விசாரணை வந்தபோது, ஜெயலலிதா ஆட்சி 31(சி) பிரிவின் கீழ் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்காமலேயே துரோகம் செய்தது. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு எதிரான எந்த ஆட்சியும் மக்களால் தூக்கி எறியப்பட்டதே வரலாறு” என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.
சமூகநீதிக்கான மருத்துவர் சங்கத்தின் அமைப்பாளர் மருத்துவர் ஜி.ஆர். இரவீந்தர்நாத், இது குறித்து விரிவான விளக்கங்களை முன் வைத்தார். தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வை கைவிட வேண்டும் என்ற சரியான கோரிக்கையை திராவிடர் விடுதலைக் கழகம் முன் வைத்திருப்பதை அவர் பாராட்டினார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் விண்ணப்ப தாரர்கள் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கத் தேவை இல்லை என்று குறிப்பிட்டிருப்பதால் பிற மாநிலத்திலிருந்து மருத்துவர்கள் தேர்வு செய்யப் படக்கூடிய வாய்ப்புகளையும் அரசு உருவாக்கி யிருக்கிறது; இது தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகம்.
‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’க்கான மருத்துவ உயர்கல்வியில் இடஒதுக்கீடே வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 2003 இல் தீர்ப்பு வழங்கியது. இதனால் தகுதி போய்விடும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. மருத்துவர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப் படும்போது, ஏன், படிப்பில் தரக்கூடாது? பிற்படுத்தப் பட்ட முஸ்லீம்கள், அருந்ததியினருக்கு தனி இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டாலும், அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் அளவை எட்ட முடியாத காரணத்தால் இந்த சமூகத்தினருக்கான இடங்கள் பூர்த்தி செய்யப் படுவது இல்லை. அருந்ததியினர், முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணை குறைத்தால் தான், அவர்கள் உள்ளே நுழைய முடியும். வாளியை ஓட்டையாக வைத்துக் கொண்டு, அதில் தண்ணீர் நிரப்புவதுபோல, அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் மத்திய அரசு உருவாக்கியுள்ள டி.என்.பி. என்ற அமைப்பின் வழியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் இல்லாமலே குறுக்கு வழியில் மாணவர்களை சேர்க்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினார். டாக்டர் இரவீந்திரநாத், தனியார் மருத்துவமனையைவிட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மிகச் சிறப்பான மருத்துவ சாதனைகளை செய்து வருவதை குறிப்பிட்ட அவர், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை முதன்முதலில் செய்ததே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்தான் என்றார். அரசு மருத்துவமனையிலிருந்தே மூத்த அனுபவம் நிறைந்த மருத்துவர்களை ஏன், இந்த ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையில் நியமிக்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார்.
தி.மு.க. 2004 தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் நியமனங்களை செய்ய மாட்டோம் என்று கூறியது. பதவிக்கு வந்தவுடன் அதை அமுல்படுத்தவும் செய்தது. அதற்காக நன்றி தெரிவித்தோம். ஆனால், அதற்குப் பிறகு எய்ட்ஸ் நோய் ஒழிப்பு, காசநோய் ஒழிப்புத் திட்டங்களுக்கு மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில்தான் தி.மு.க. ஆட்சியும் தேர்வு செய்தது என்றார், மருத்துவர் ரவீந்தர் நாத்.
தியாகு : தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் சார்பில் பேசிய தியாகு, “சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் பங்கேற்பை உறுதி செய்வதுதான் சமூக நீதி. சோவியத் ஒன்றியத்தில் லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்கள், இதைத்தான் செய்தார்கள். அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், தனது நிறுவனத்தின் வெற்றிக்கு கறுப்பர் களுக்கும் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கியதே காரணம்” என்று கூறினார். இப்போது தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடம், இந்திய இராணுவத்துக்கு சொந்தமானது. இந்திய இராணு வத்தின் அனுமதி பெற்றுத்தான் கோட்டையில் புல்லைக்கூட வெட்ட வேண்டும் என்றும் முதல் வராக இருந்த கலைஞர் கருணாநிதி சொன்னார். தமிழக அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தில் தலைமைச் செயலகத்தை உருவாக்கினார், முதல்வர் ஜெயலலிதா. ஆனால், இராணுவத்துக்குரிய இடத் திலேயே தலைமைச் செயலகத்தைத் தொடர விரும்புகிறார்.
இடஒதுக்கீட்டுக்கான முழு உரிமை மாநில அரசுகளுக்கே இருத்தல் வேண்டும். மத்திய அரசு, மாநில அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆனால், உயர் தனித்திறன் மருத்துவமனைகளில் இடஒதுக்கீடு கொள்கைகளை மத்திய அரசு உருவாக்குவதும் உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டை மறுப்பதும் கண்டிக்கத்தக்கது. இட ஒதுக்கீடே பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜெயலலிதா. பிறகு தமிழ்நாட்டில் இது எடுபடாது என்று தனது கருத்தை மாற்றிக் கொண்டார், என்றார் தியாகு.
அருண பாரதி (தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி), அருண் சோரி (தமிழ்நாடு மக்கள் கட்சி), சைதை சிவா (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), வழக்கறிஞர் அருண், வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கூடங்குளம் போராட்டத்தில் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. மக்கள் நலப் பணி யாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை மதிக்காத ஜெயலலிதா, இந்த மருத்துவமனையில் இடஒதுக்கீடு செய்வதற்கு மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறார் என்ற முரண்பாட்டை சுட்டிக் காட்டினார் வழக்கறிஞர் அருண். பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீட்டு ஆணையை முதன்முதலாக கொண்டுவந்தவர் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், அவர் பெயரால் அமைந் துள்ள வளாகத்தில் உள்ள மருத் துவமனையில் இடஒதுக்கீடு மறுக்கப் படுவதை சுட்டிக்காட்டினார் வழக்கறிஞர் திருமூர்த்தி, இளைய தலைமுறையும் மூத்த தலைமுறையும் இணைந்து, இந்தப் போராட்டத்தை நடத்துகிறது என்றார். தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட தலைவர் ஜான் நன்றி கூறினார்.
பழனியில் : சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரத்தில் நடைபெற்றது. காலை 11 மணிக்குத் துவங்கிய ஆர்ப்பாட்டத்திற்குப் பழனி நகரச் செயலாளர் பெரியார் பத்மநாபன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் செல்லத்துரை, ஒட்டன் சத்திரம் நகரச் செயலாளர் ப.மூர்த்தி, பழனி ஒன்றிய அமைப்பாளர் சி.கருப்புச்சாமி ஆகியோர் வகித்தனர். அரசுக்கு எதிராகவும் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.
பொன். அன்பழகன் (வி.சி.க.), நாகராஜன் (புரட்சி பாரதம்), இடஒதுக்கீட்டிற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும் தி.வி.க. எடுக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் உரையாற்றினர். திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நல்லதம்பி உரையில் இடஒதுக்கீட்டிற்கான முதல் சட்டத் திருத்தம் பெரியாரின் போராட்டத்தால் கொண்டுவரப்பட்ட வரலாற்றைப் பதிவு செய்தார். தமிழக அரசு தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் கழகம் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரித்தார்.
மாவட்டத் தலைவர் பெரியார் நம்பி தனது உரையில், இடஒதுக்கீட்டு வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்தார் ரூ.9000 வருமான உச்சவரம்பு கொண்டு வந்ததால் எம்.ஜி.ஆர்.க்கு தமிழகத்தில் வந்த எதிர்ப்பை நினைவுகூர்ந்து ஜெயலலிதா இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகம் புறக்கணிக்கும்” என எச்சரித்தார்.
மதுரை மண்டல அமைப்புச் செயலாளர் இராவணன் தனது உரையில், “ஜெயலலிதாவின் அறிக்கைக்கு மறுப்பாக நீதிமன்றத் தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்டி எய்ம்ஸ் நிறுவனங்களில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை ஆதாரத் தோடு சுட்டிக்காட்டி உரையாற்றினார். மேலும் ஜெயலலிதாவின் பார்ப்பனச் சார்பு போக்கைக் கண்டித்தும், கழகத் தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் உரையாற்றினார். பழனி ஒன்றிய தலைவர் முருகன் நன்றி கூறினார்.
நிகழ்வில் மதுரை மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் பாண் டியன், தேனி மாவட்ட செயலாளர் குமரேசன், தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப் பாளர் உதயசங்கர், தமிழ்நாடு அறிவியல் மன்ற திண்டுக்கல் மாவட்ட பொறுப் பாளர் முருகானந்தம், இளங்கோ (ஒன்றிய அமைப்பாளர் பழனி), தங்கவேலு (ஒட்டன் சத்திரம் ஒன்றிய தலைவர்), சுரேசு (ஒன்றிய செயலாளர்), வடிவேலு (ஒன்றிய செயலாளர், ரெட்டியார் சத்திரம்), சின்னசாமி (ஒட்டன் சத்திரம் நகரத் தலைவர்), முருகேசன், கடத்தூர் காந்தி (மடத்துக்குளம் நகர அமைப்பாளர்), ஜெயப்பாண்டி (வத்தலக் குண்டு ஒன்றிய அமைப்பாளர்) மற்றும் திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேலத்தில்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 25.1.2014 அன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சமூக அறிவியல் கல்வி இயக்கம் ராஜலிங்கம், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் இரா. நாவரசன், வழக்குரைஞர் மாணவர் கூட்டமைப்பு இரா. பார்த்திபன், அருந்ததியர் மக்கள் இயக்கம் ஜெ. பிரதாபன், மனித உரிமை பாதுகாப்பு மையம் மாயன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் இளமாறன், ஏற்காடு தேவதாஸ், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் பூமொழி, மண்ணின் மைந்தர்கள் சார்பாக முரளி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சேக் முகமது, தமிழ்நாடு மக்கள் கட்சி மாரியப்பன், சி.பி.எம்.எல். மணிமாறன், ம.தி.மு.க. வழக்குரைஞர் அனந்தராஜ், தி.வி.க. மண்டல அமைப்புச் செயலாளர் சக்தி, த.பெ.தி.க. மாவட்ட செயலாளர் கு. தங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர். கழக மாநகர செயலாளர் மூனாங்காடு சரவணன் நன்றி கூறினார்.
ஈரோட்டில் : இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளும் தமிழக அரசைக் கண்டித்து கழகம் சார்பாக ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே 25.1.2014 சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மண்டல செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். ஈரோடு ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, கழகப் பொருளாளர் இரத்தினசாமி, வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக சோதி ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசம் மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் நிலவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாநகர செயலாளர் வினாயகமூர்த்தி, ஆதித் தமிழர் பேரவை தமிழ் இன்பன், வீரமுருகன், தமிழ்த் தேசம் குடியரசு இயக்கத்தைச் சேர்ந்த மார்க்கெட் சண்முகம், தமிழக ஒடுக்கப்பட்ட இயக்க மாவட்ட செயலாளர் கலைவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக வடக்கு மாவட்ட செயலாளர் நிவாசு, தெற்கு மாவட்ட செயலாளர் சண்முக பிரியன், மாவட்ட பொருளாளர் சுகுணா, நாமக்கல் மாவட்ட கழகத் தலைவர் சாமிநாதன், ஈரோடு மண்டல செயலாளர் வெங்கட் உள்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஈரோடு நகர செயலாளர் சிவானந்தன் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 30012014 இதழ்