கழகப் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் ஊர்தி வாங்கியது
கழகத்தின் பரப்புரைக்கு ஈரோடு மாவட்டக் கழகம் மற்றொரு ஊர்தியை வழங்கியுள்ளது. இது கழகத்துக்கான இரண்டாவது ஊர்தி, புதிய ஊர்தியாகும். இது குறித்து ஈரோடு மண்டல செயலாளர் இரா. இளங்கோவன் தந்துள்ள செய்தி:
“நமது பிரச்சார உத்திகளை இன்றைய காலத்திற்குகேற்ப மாற்றி அமைத்திட வேண்டிய அவசியமான சூழலில் உள்ளோம். ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்திட வேண்டுமானால் குறைந்தது ரூ..20,000/- வரை தற்போது செலவா கின்றது. நமது தோழர்கள் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினால் மீண்டும் அடுத்தக் கூட்டம் நடத்துவதற்கு 6 மாதம் அல்லது ஒரு வருடம் ஆகின்றது. தோழர்களும் பொருளாதாரப் பற்றாக்குறையால் சோர்ந்து போகின்றனர். வெறுமனே பொதுக் கூட்டம் போட்டு ஒலி பெருக்கி மூலம் மணிக்கணக்கில் பேசினாலும் பொது மக்கள் விரும்பி அக் கூட்டத்தை முழுமையாகக் கேட்பதில்லை.
ஆகவே, நமது பிரச்சாரங்களை வீடியோவாக, படங்கள் மூலமாக, சாதி ஒழிப்பு, உலகம் தோன்றிய வரலாறு, உயிர்கள் உருவான வரலாறு, மூடநம்பிக்கை ஒழிப்புப் போன்ற வற்றின் செய்திகளை படக் காட்சி களாக குறும்படங்கள் மூலமாக புரொஜெக்டர் வைத்து திரைப் படங்களாக ஒளிபரப்பும்போது பொது மக்களை வெகுவாகத் திரட்டவும், செய்திகளை அனைவரும் வெகுவாக உள்வாங்கும் நிலையினை உருவாக்கவும் முடியும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், பிரச்சார வாகனம் மூலமாக இந்த ஏற்பாடுகள் அனைத்தும் உள்ள வகையில் தினம் ஒரு ஊரில் பிரச்சாரம் செய்வது வாய்ப்பாக இருக்கும்.
அந்த நோக்கத்தோடு, ஈரோடு மாவட்டக் கழகத்தின் சார்பாக தோழர்கள் அனைவரும் சேர்ந்து கலந்து பேசி அனைவரின் ஒருமித்த கருத்தாக தற்போது நன்கொடை மூலம் ரூ.5,00,000/- (ஐந்து இலட்சம்)க்கு டெம்போ டிராவலர் வாகனம் வாங்கி அதில் ஒலி பெருக்கி, புரொஜெக்டர், திரை, புத்தகங்கள், ஜெனரேட்டர் அனைத்தும் உள்ள வகையில் பிரச்சார வாகனம் தயாராகிக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து மொத்தம் ரூ.7,00,000/- (சுமார் ஏழு இலட்சம்) செலவில் இந்த பரப்புரை வாகனம் தயார் படுத்தப்பட்டுள்ளது)
இதன் கணக்கு வழக்குகள் அனைத்தும் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலும், காலம் முழுவதும் இந்தப் பணி எந்த தடையுமின்றி தொடர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும், “கோபிசெட்டிபாளையம் பகுத்தறி வாளர் சங்கம்” என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கி அதன் மூலம் நமது கழகத்தின் கொள்கைகளை, கோட்பாடுகளை விளக்கவும், பரப்பவும் இந்தப் பணிகளை துவக்கியுள்ளோம்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் முதற் கட்டமாக இந்த பிரச்சார யுக்தியின் மூலம் பல புதிய கிளைகளை உருவாக்கிட ஏராளமான புதிய தோழர்களை உருவாக்கிட உறுதி எடுத்து களத்தில் இறங்கி உள்ளோம். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இதன் அடிப்படையில் தோழர்களை உருவாக்கி, ‘திராவிடர் விடுதலைக் கழகத்தை’ பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிட, பெரியார் காண விரும்பிய சாதியற்ற, சமத்துவ, சமதர்ம உலகு படைத்திட எங்கள் அனைவரின் முயற்சியின் முதல் படிக்கட்டு இது.”
பெரியார் முழக்கம் 10072014 இதழ்