திராவிடர் விடுதலைக் கழக செயலவை தீர்மானங்கள் !

thirmanangal
19.07.2015 அன்று தர்மபுரியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
தீர்மானம் எண் 1 :
சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக!
மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு ஜாதிவாரிக்கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 2 :
காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்!
தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, ஜாதிவெறி சங்கங்கள் இதைத் தூண்டிவிட்டு, நியாயப்படுத்தியும் வருகின்றன. நடுவண் ஆட்சி, இந்த ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் ஒன்றை இயற்றிட – மாநில அரசுகளிடம் கருத்துகள் கேட்டுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இது குறித்து ஏதும் கருத்து கூறாது அலட்சியம் காட்டுகிறது. தமிழ்நாடு அரசே, ஒரு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை.
அண்மையில் கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரி, தலை துண்டிக்கப்பட்டு ஜாதி ஆணவக் கொலைக்கு பலியாகியுள்ளார். இந்தக் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான யுவராஜ் என்பவர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அவர் தலைமறைவாக இருந்துகொண்டு, தனது குற்றச் செயலை நியாயப்படுத்தி காவல்துறைக்கு சவால்விட்டு பேசியது, ‘வாட்ஸ் அப்’ வழியாக பரப்பப்பட்டு வருகிறது.
ஜாதி ஆணவக் கொலைகளில் காவல்துறையின் இந்த அலட்சியத்துக்குக் காரணம், அதில் ஊடுருவி நிற்கும் ஜாதிய மனநிலைதான் என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறோம். எனவேதான் ஒரு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக அந்த மாவட்டத்தில் ஆதிக்கஜாதியாக உள்ள பிரிவைச் சார்ந்தவர்களையே நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் சமூக ஒற்றுமைக்கும் – சமத்துவத்துக்கும் பெரும் சவாலாக உருவாகிவரும் – இந்த ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், தமிழகம் ஜாதி வெறிக் களமாக மாறிடும் ஆபத்தை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.
இந்தப் படுகொலைகள் குறித்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் கண்டனங்களைத் தெரிவிக்கா மல் ‘பாராமுகம்’ காட்டுவது கவலை அளிக்கிறது. இந்தக் கட்சிகள் தங்கள் மவுனத்தைக் கலைத்து, ஜாதி வெறிக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 3 :
பெருகி வரும் குடி நோயாளிகளைக் கட்டுப்படுத்த !.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், ‘மதுக்குடி’ தனிப்பட்ட சிலரின் பழக்கமாக இருந்த நிலை மாறி, இன்று சமூகத்தையே சீர்குலைத்து வருகிறது. மாணவர் களையும் இளைஞர்களையும் போதை அடிமைகளாகவும் குடி நோயாளி களாகவும் மாற்றி வருவது ஆபத்தான அறிகுறியாகும். மதுக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், விற்பனைக்கு கூடுதலாக இலக்கை நிர்ணயிப்பதும் ஒரு மக்கள் நலன் பேணும் ஆட்சிக்கான செயல் திட்டமாக இருக்க முடியாது.
அதே நேரத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கின்றன. கள்ளச் சாராயம் வர்த்தமாகி, காவல்துறைகள்ளச் சாராய வியாபாரிகள் இரகசிய கூட்டு உருவாகி, மேலும் பல சமூக-சட்ட ஒழுங்கு நெருக்கடிகளை உருவாக்கிவிடும். போதைக்காக ஆபத்தான ரசாயனங்களைக் குடிப்பது, மனநிலையைப் பாதிப்படையச் செய்யும் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற ஆபத்தான பழக்கங்களுக்கு வழிவகுத்து விடும். எனவே, குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய செயல் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
மது விற்பனைக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரத்தை பாதியளவுக்கு குறைப்பது, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மதுக் கடைகளை திறக்காமல் இருப்பது; சிறுவர்களுக்கு மது விற்காமல், கண்டிப்புடன் கண்காணிப்பது போன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். மதுவின் ஆபத்துகளை விளக்கி, புகை எதிர்ப்புப் பிரச்சாரம்போல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4 :
கையெழுத்து இயக்கம் தீவிரமாகட்டும்!
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் உள்ளிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழர்களால், மனித உரிமை அமைப்புகளால் வலியுறுத் தப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம், அய்.நா. மனித உரிமை அவையில் இது குறித்த விவாதம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அண்மையில் நீண்ட நெடுங்காலமாக போர்க்குற்றத்துக்கு உள்ளாகி வரம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அய்.நா. தீர்மானத்தின்போது இந்தியா வாக் கெடுப்பைப் புறக்கணித்து, பாலஸ்தீனர் களுக்கு துரோகம் செய்துள்ளது. அதே துரோகத்தை ஈழத் தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய அரசை வற்புறுத்துகிறோம்.
அய்.நா. சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தில் நடக்கும் கையெழுத்து இயக்கங்களை கழகத் தோழர்கள் தீவிரப்படுத்திட இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5 :
20 தமிழர் படுகொலை வழக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை!
செம்மரக் கடத்தல் தொடர்பாக – ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுக் கொன்ற வழக்கை, மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் செய்த பரிந்துரைக்கு ஆந்திர காவல்துறை அம்மாநில உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டது. வழக்கு விசாரணை முடங்கிப் போய் நிற்கும் நிலையில், தடையை நீக்குவதற்கும், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2000 அப்பாவித் தமிழர்களுக்கும் நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு, அலட்சியம் ம்காட்டாமல், இந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6 :
எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்!
தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. அவர்களின் வேலை வாய்ப்புகள், அரசுத் துறைகளில் வெகுவாகக் குறைந்து விட்டன. தாராள மயக் கொள்கையால் பெருகிவரும் பெரும் தொழில் நிறுவனங்களில் இவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டங்கள் வர வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த கால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அதன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் ஏற்றுக் கொண்டிருந்தாலும் செயல்படுத் தாமல் புறந்தள்ளிவிட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுதான் நிலம் வழங்குகிறது. தண்ணீர், மின்சாரம் இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ வழங்கப் படுகின்றன.பங்கு மூலதனங்கள் வழியாக மக்கள் பணம் மூலதனத் துக்குப் பயன்படுத்தப் படுகிறது.இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்றுவதற்கு முழுமையான அதிகாரமும் நியாயமும் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அந்நாட்டில் கருப்பர் உள்ளிட்ட மைனாரிட்டி மக்களுக்கு தனியார் நிறு வனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு சட்டம் இயற்றப் பட்டு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட் டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழ்நாட்டில், ஜாதி சங்கங்களை நடத்தும் ஜாதித் தலைவர்கள், ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, கலவரத்தை நடத்தவும், ஜாதி ஆணவக் கொலைகளை நடத்தி, தங்களுக்குக் கீழே ஜாதிக்காரர்களை அணி திரட்டி, தங்களின்அரசியல் சுயநலன்களுக்குப் பயன்படுத்தவும் துடிக்கிறார்களே தவிர,
இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளுக்கோ, எதிர்கால சமுதாய நலனுக்கோ குரல் கொடுப்பது இல்லை. இந்த நிலையில் சமுதாயத்தில் சமத்துவத்தை சீர்குலைத்து, மோதல்களை உருவாக்கிடும் ஜாதியத்துக்கு துணை போகாமல், அதிலிருந்து வெளியேறி, தங்களின் எதிர்கால வாழ்வுரிமைக்கும், ஜாதி எதிர்ப் புக்கும் போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று திராவிடர் விடுதலைக்கழகம் அறைகூவி அழைக்கிறது.
இந்த நோக்கத்தை முன் வைத்து, எங்கள்
”தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்;
எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்!”
முழக்கத்தை முன் வைத்து, ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தமிழகம் முழுதும் பரப்புரை இயக்கங்களை நடத்துவது என்று இந்த செயலவை முடிவு செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டு, இந்தப் பரப்புரை இயக்கத்தை நடத்துவது என்றும் செயலவை தீர்மானிக்கிறது.

தீர்மாணம் எண் 7 :
தலைவர்-பொதுச்செயலாளர் பங்கேற்கும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் !
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும்.
முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும்,
இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும்
கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும்.
ஜூலை 29 – ஈரோடு (தெற்கு ) – ஈரோடு ( வடக்கு );
ஜூலை 30 – திருப்பூர் -கோவை;
ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்;
ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு ) – சேலம் ( கிழக்கு );
ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்;
ஆகஸ்டு 7 – பெரம்பலூர் – திருச்சி;
ஆகஸ்டு 12 – திருவாரூர் – தஞ்சாவூர்;
ஆகஸ்டு 13 – நாகை – கடலூர்;
ஆகஸ்டு 14 – விழுப்புரம்- திருவண்ணாமலை;
ஆகஸ்டு 18 – புதுக்கோட்டை – சிவகங்கை;
ஆகஸ்டு 19 – மதுரை – தேனி;
ஆகஸ்டு 20 – விருதுநகர் – தூத்துக்குடி;
ஆகஸ்டு 21 – திருநெல்வேலி – கன்னியாகுமரி;
ஆகஸ்டு 29 – தருமபுரி – கிருட்டிணகிரி;
ஆகஸ்டு 30 – வேலூர் – காஞ்சிபுரம்;
ஆகஸ்டு 31 – சென்னை.

You may also like...

Leave a Reply