அம்பேத்கர் முன் வைக்கும் ஆழமான சிந்தனைகள் – இந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை
ஜாதி-மொழி-தேசம் குறித்த அம்பேத்கரின் ஆழமான சிந்தனை களை எடுத்துக்காட்டுகிறது இக் கட்டுரை.
அம்பேத்கர் என்றவுடன் அவரை தீண்டப்படாதவர்களின் தலைவர் என்றே சமூகம் பார்க்கிறது. அவரின் ஆழமான சமுதாய சிந்தனையும், அறிவும் புறந்தள்ளப்படுகிறது. ஜாதி யின் பெயரால் நாம் இழந்தது சுய மரியாதை, கல்வி, வேலை, இருப் பிடம், செல்வம் என்ற சமூக உண்மையை புரிய வைத்தவர் அம்பேத்கர்.
ஒரு பள்ளி சிறுவன், தனக்கு அம்பேத்கரை பிடிக்கும் என்கிறான். மற்றொருவன் தனக்கு அம்பேத்கரைப் பிடிக்காது என்கிறான். இந்த விருப்பு வெறுப்புக்கு காரணம் அவருடைய ஜாதியே. அரசியல்வாதிகள் அம்பேத் கரை ஒரு படமாக்குகிறார்களே தவிர, பாடமாக்கவில்லை. இதைப் பற்றி அம்பேத்கர்,
“இந்தியாவிலோ புனிதர்களையும், மகாத்மாக்களையும் வழிபடுகிறார்கள். வழிபடுவது மட்டுந்தான், அவர்கள் வழியில் நடப்பதில்லை என்ற போக்கு பொது மக்களிடம் இருப்பதால், அவர்களுடைய திட்டத்தால் பெரிய பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை” (அம்பேத்கர் நூல் தொகுப்பு-1, பக்.131) என்கிறார்.
தீண்டப்படாதவர்களின் தலைவர் என அக்காலத்தில் தான் புறக்கணிக்கப் பட்டதை அம்பேத்கர் விளக்குகிறார்:
“இந்துத் தலைவர் ஒருவர் இந்தியத் தலைவர் என்றே வர்ணிக்கப்படுவார். அவர் காஷ்மீர் பார்ப்பனராயிருந் தாலும் அவரை காஷ்மீர் பார்ப்பனர் களின் தலைவர் என்று கூற மாட் டார்கள். ஆனால், தீண்டப்படாத வரான ஒரு தலை வரைக் குறிப்பிடும் போது அவரது பெயரைக் குறிப்பிட்டு, தீண்டப்படாதவர்களின் தலைவன் என்று கூறுவர்.”
இது போன்ற பாகு பாட்டிற்குக் காரணம் இந்துக்களின் மனத் தில் தீண்டப்படாதவர்கள் தங்களைவிடத் தாழ்வானவர்கள் என்று ஊறிப் போயுள்ள எண்ணமாகும். தீண்டப் படாதவர்கள் எவ்வளவு தகுதி பெற்ற வர்களாக இருந்தாலும் அவர்கள் தீண்டப்படாதவர்களிடையே தான் பெரியவர்கள் என்பது இந்துக்களின் எண்ணம். அவர்கள் இந்துக்களில் உள்ளவர்களைவிடப் பெரியவர் களாகவோ அவர்களுக்குச் சமமான வர்களாகவோ ஒரு போதும் இருக்க முடியாது. இது இத்தகைய பாகுபாடு சமூகரீதியான பாகுபாடு என்றாலும் பொருளாதாரப் பாகுபாட்டைவிட எந்த வகையிலும் கொடுமையில் குறைந்த தல்ல.”
இந்திய தேசியமும் அம்பேத்கரும்
பெரியார் தனி நாடு கேட்டதற்கு அடிப்படையான காரணம் ஜாதி ஒழிப்பு; அதை முன்னிறுத்தியேயன்றி இரத்த தூய்மையோ, மொழித் தூய்மையையோ முன்னிறுத்தி அல்ல; “ஜாதியற்ற சமுதாயத்தைப் படைக் கிறேன் எனத் தீர்மானம் போடு, நான் அபராதம் கட்டிவிட்டு காங்கிரசில் சேருகிறேன்” என்றார் பெரியார்.
பெரியர் கூறினார்:
“… இனி காங்கிரஸ் திட்டம் என்ன? போடு திட்டம். பாப்பான், சூத்திரன், பஞ்சமன் என்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று தீர்மானம் போடு. நாங்கள் ஓடி வருகிறோம். இனி உனக்குச் சமுதாயச் சீர்திருத்தம் தானே திட்டமாக இருக்க வேண்டும்? இந்த ஞானபூமியிலே, இந்த புண்ணிய பூமியிலே சூத்திரன் இருக்க மாட்டான்; பஞ்சமன் இருக்க மாட்டான்; பார்ப்பான் இருக்க மாட்டான்; மனிதர்கள்தான் இருப்பார்கள் என்று போடு உத்தரவை. நான் அபராதம் கொடுத்துவிட்டுக் காங்கிரசில் சேர்கிறேன்” (‘விடுதலை’ 20.6.1947) என்றார் பெரியார்.
“இப்போது இந்தியா ஒரு நாடாக இருக்கிறதா? இந்தியா – சாதிகள் காட்சி சாலையாக இருக்கிறதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது? இந்த நிலை யிலுள்ள இந்தியா, விடுதலையோ முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமானதாகுமா? மற்ற நாட் டார்கள், தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி நம் நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கின்றார்கள். யார், எந்த நாட்டோடு சேர்த்துக் கொள்ளுவ தென்று போட்டிப் போட்டுக் கொண் டிருக்கிறார்கள்” (‘குடிஅரசு’ 1.6.1930) என்றார் பெரியார்.
இதே குரலில் அம்பேத்கரும் “ஆயிரக்கணக்கான ஜாதிகளாக பிளவுண்டிருக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்?” என கேள்வி எழுப்புகிறார்.
அம்பேத்கரின் பார்வையிலும் இந்தியா ஒரு ஜாதி காட்சி சாலை யாகவே தெரிகிறது. அம்பேத்கர் சொல்கிறார்:
“சமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட் களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில் தான் அது முடியும். நாம் இந்த முரண் பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்ட மைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஓர் உணர்வு – அனைவரும் ஒரு தாய் மக்கள் வாழ்க்கை முறையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அளிக்கும். இதை அடைவது அவ்வளவு எளிது அல்ல.
… அரசியல் எண்ணமுள்ள இந்தி யர்கள், முன்பு ‘இந்திய மக்கள்’ என்று கூறப்படுவதை எதிர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘இந்திய தேசம்’ என்று சொல்வதையே அவர்கள் விரும்பினர். நாம் ஒரு தேசம் என்று சொல்வதையே அவர்கள் விரும்பினர். நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு மிகப் பெரிய மாயை என்றே நான் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக நாம் இன்னும் ஒரு தேசமாக ஆகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர் கிறோமோ, அந்தளவுக்கு நல்லது. அப்போதுதான், நாம் ஒரு தேசமாக வேண்டிய அவசியத்தை உணர்ந்தும் அதை அடைவதற்கான வழிமுறையைப் பற்றி கவனமாக சிந்திப்போம்…
…. சாதி தேசத்திற்கு எதிரானது மட்டுமல்ல, சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப்பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஒரு தேசம் உருவாகும் போதுதான் – சகோதரத்துவம் உண்மை யாகும். சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப்பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்.” (25.11.1949 அன்று மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி, அம்பேத்கர் தொகுப்பு-2, பக்.188)
சாதிய தமிழ்
ஆனாலும் தமிழ்த் தேசியவாதி களால் அம்பேத்கர் விவாதிக்கப்படு வதில்லை. அம்பேத்கரின் பெயரைச் சொல்லவே பயப்படுகிறார்கள். தீண்டப்படாதவர்களின் தலைவர் என எண்ணுகிறார்கள் என்பதை தவிர வேறு என்ன காரணம்? மொழியில் ஊடுருவியுள்ள ஜாதி வெறி பற்றியும் அம்பேத்கர் கூறுகிறார்:
“மலபாரில் (இது சென்னை மாகாணமாக உள்ள போது) – உள்ள ஒத்தப்பாலம் என்ற இடத்தில் ஈழவ சாதியைச் சேர்ந்த சிவராமன் என்ற 17 வயது இளைஞர், சாதி இந்து ஒருவரின் கடைக்குச் சென்று உப்பு வேண்டும் என்று கேட்டார். அவர் ‘உப்பு’ என்ற மலையாள வார்த்தையைப் பயன்படுத் தினார். மலபாரில் உள்ள வழக்கப்படி ‘உப்பு’ என்ற சொல்லைச் சாதி இந்துக்கள் தான் பயன்படுத்தலாம். அந்த இளைஞர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவர் ‘புளிச்சாட்டன்’ வேண்டும் என்றுதான் கேட்டிருக்க வேண்டும். இதனால் கோபமடைந்த உயர்சாதிக் கடைக்காரர், சிவராமனை பலமாக அடித்ததால் அவர் இறந்து போனார்.” (பம்பாய் சமார்சார், 1936 நவம்பர் 4ஆம் தேதி இதழில் வெளி வந்த செய்தி)
இது சகிப்புத் தன்மையா? நேர்மை இன்மையா?
இந்து மதம் சகிப்புத் தன்மை கொண்டது என்று பார்ப்பனர்கள் அவ்வப்போது பேசி வருகிறார்கள். அந்த சகிப்புத் தன்மையின் சந்தர்ப்ப வாதத்தை அம்பேத்கர் படம்பிடித்துக் காட்டினார்:
“காக்கும் கடவுளான விஷ்ணு வுக்கும், அழிக்கும் கடவுளான சிவனுக் கும், அன்பின் தத்துவத்தை மனித குலத் திற்கு போதித்த மாபெரும் ஆசானாகிய கயையிலுள்ள புத்தருக்கும், தினமும் இரத்த பலி கேட்கும் காளிக்கும் பார்ப்பான் பூசாரியாக இருக்க முடியும்.
அவ்வாறே, சத்திரிய கடவுளான இராமனுக்கும், சத்திரியரை ஒழித்துக் கட்ட அவதாரம் எடுத்த பரசு ராமனுக்கும், பார்ப்பான் பூசாரியாக இருக்க முடியும். நிஜ வாழ்க்கையில் இப்படி இல்லை என்று எவரும் மறுக்க முடியாது; இதுதான் உண்மை. ஒரு நேர்மையான மனிதன் எதிரெதிரான குணங்களைக் கொண்ட எல்லா தேவதேவிகளுக்கும் நேர்மையான பக்தனாக இருக்க முடியாது என்கிற போது, அவ்வாறு இருக்கும் பார்ப்பனர் களின் இந்த திறமையை என்ன வென்று சொல்வது எனத் தெரிய வில்லை. இந்த அசாதரணமான நிகழ்ச்சியையே இந்துக்கள் தம் மதத்தின் மாபெரும் சிறப்பு. அதன் சகிப்புத் தன்மை பரந்த நோக்கு ஆகிய வற்றுக்கு எடுத்துக்காட்டு என் கின்றனர்.
மேலோட்டமாகப் பார்த்தால் இவை இரண்டிற்குமிடையே வேறுபாடு காண்பது கடினம். ஆனால் உள்ளடக் கத்தில் இவை இரண்டும் வெவ் வேறானவை; நெருங்கி ஆராய்ந்து பார்த்தால்தான் இது விளங்கும். வெவ்வேறு வகைப்பட்ட கடவுள்களை வழிபடுவது சமரச நோக்கைக் காட்டு கிறது என்பதில் ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நம் போக்கை மாற்றிக் கொள்ளும் நேர்மை யின்மையை குறிப்பதாக ஆகலாம் அல்லவா? இந்த சகிப்புத் தன்மை என்பது உண்மையில் நேர்மையின்மையே என்பது உறுதி.” (அ.நூ-1, பக்.135)
இப்படி பார்ப்பனர்களின் பச்சோந் தித்தனத்தை எடுத்துக்காட்டுகிறார் அம்பேத்கர்.
“தீண்டாதோரை அடிப்பது, அவர்கள் சொத்துக்களைக் கொள்ளை யிடுவது, தீயிட்டுக் கொளுத்துவது மற்றும் பல்வேறு கொடுமைகளை அவர்களுக்கு இழைப்பது ஆகிய செயல்களை அவர்கள் மனசாட்சியின் உறுத்தல் கொஞ்சமுமின்றிச் செய் வதற்குக் காரணம், இந்து மதம் அவர்களுக்கு இந்த சமூகக் கட்டுக் கோப்பினை கட்டிக் காக்க எவ்விதப் பாவத்தையும் செய்வது தவறல்ல என்று போதிப்பதுதான்” என்கிறார் அம்பேத்கர்.
ஜாதி வெறியர்கள் இப்போது தலித் மக்களுக்கு எதிராக நடத்தும் படு கொலை, வன்முறை வெறியாட் டங்கள் – இந்து சமூக அமைப்பி லிருந்தே வருகிறது. சாதியை ஒழிக்க அம்பேத்கர் கூறும் வழி என்ன?
“ஜாதி கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையுமே வெடி வைத்துத் தகர்க்க வேண்டும். பகுத்தறிவு செயல்பட இடம் கொடுக்காத, ஒழுக்கம் செயல்பட இடம் கொடுக்காத வேதங்களையும் சாஸ்திரங்களையுமே நீங்கள் தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும் ஸ்மிருதி களையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும். வேறு எதுவும் பயன்தராது. இந்த விஷயத்தில் இதுதான் என்னுடைய தீர்க்கமான முடிவு.” (அம்பேத்கர் தொகுப்பு,-1, ப.109)
வேதத்தையும் சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் எப்படி அம்பேத்கரை ஏற்றுக் கொள்ள முடியும் அல்லது அம்பேத் கரை ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி வேதங்களையும் சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்தை ஏற்றுக் கொள்ள முடியும். பிறகு ஏன் இந்து அமைப்புகள் அம்பேத்கரை தூக்கிப் பிடிக்கின்றன? என்ற கேள்வி எழக் கூடும். அம்பேத்கர் பெயரைச் சொல்லி தலித்துகளின் உழைப்பை சுரண்டுவதற்கும் தலித்துகள் இந்து மதச் சிறையிலிருந்து விடுபடாமல் பூட்டி வைப்பதற்குமே, அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.
பெரியார் முழக்கம் 29102015 இதழ்