இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்
பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டவர்கள் என்பதற்கு இராமாயணம், மகாபாரதத்திலேயே ஆதாரங்கள் உண்டு.
மௌரியர் காலத்துக்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமா யணம் ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்துக்குத் தெளிவான ஆதாரங்களைத் தந்துள்ளன. (தொடக்கக்கால °மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைதாம்). பொழுதுபோக்குக்கு என்பதை விட உணவுக்காக சத்திரியர்கள் அடிக்கடி வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் – குறிப்பாக அதிலுள்ள வனபர்வம் – ஆதாரமாக இருக்கிறது. உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் இது ஆதாரத்தைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய தர்மர்கூட தன் தம்பிகளுக்கும், திரௌபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவு தர தினந் தோறும் ரூரூ மான்களையும், கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட் டுள்ளது.
பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. ஜெயத்ரதனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும் அய்ம்பது மான்களைக் கொன்று திரௌபதி விருந்து தந்ததாகவும், கறுப்பு உடும்பு, புள்ளி உடும்பு, மான், இளமான், சராபா, குழி முயல், ரிஷ்யா, ரூரூ, சம்பரா, காயல், பலவகை மான்கள், பன்றி, எருமை இன்னும் ஏனைய விலங்குகளின் இறைச்சியை தர்மர் அவர்களுக்குத் தருவார் என்று உறுதி தந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. பாண்டவர்கள் விஷம் தடவப்படாத அம்பு களால் மான்களை வேட்டையாடியதாகவும், பார்ப்பனர்களுக்குத் தந்த பின்னர் அந்த இறைச்சியை அவர்கள் உண்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. மாட்டிறைச்சியையும், உணவு தானியங்களையும், பார்ப்பனர்களுக்குத் தானம் தந்து அதன்மூலம் ஈடு இணையற்ற புகழைச் சம்பாதித்துக் கொண்ட மன்னன் ரந்தி தேவரின் அரண்மனைச் சமையலில் தினந் தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப் பட்டதாக வனபர்வம் குறிப்பிடுகிறது. கொல்லப்பட்ட பசுக்களில் இரத்தத்திலிருந்து தான் கர்மாவதி ஆறு (புதிய பெயர் சம்பல்) உருவானது. பாணினி இதை கர்மனன்வதி என்று இதற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார். பார்ப்பனர் களுக்கு இறைச்சி, அரிசி, நெய், பால் ஆகிய வற்றை வழங்க வேண்டும் என அனுஷாசன பர்வத்தில் நாரதர் அறிவித்துள்ளார். பிதுர்களுக்குப் படையல் செய்ய வேண்டிய பொருட்களை ஏறு வரிசைப்படி பீஷ்மர் பின்வருமாறு விவரித்துள்ளார். எள், அரிசி, பார்லி, அவரை, நீர், கிழங்குகள், பழவகைகள், மீன், ஆட்டிறைச்சி, முயல், வெள்ளாடு, பன்றி, கோழி, மான் இறைச்சி, காயல், எருமை, மாட்டிறைச்சி, பாயசம், வார்திரினஷம், காண்டாமிருகம், (கட்கம்) ஆட்டுத்தோல், சிவப்பு ஆடு. மறுபுறம், வேதச் சடங்குகளின் ஒரு பகுதியாக பலி தரப்படும். விலங்கின் இறைச்சியை உண்ணலாம் என்று மகாபாரதத்தில் இதே பர்வத்தில் குறிப்பிட்டிருக்கும் பீஷ்மர் இதற்கு முன்பே அகிம்சையை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார். மகாபாரதத்தில் விவரிக்கப்பட் டுள்ள பொதுவான அசைவ உணவுச் சூழலை வைத்துப் பார்க்கும்போது அகிம்சையை மேன்மைப்படுத்திப் பேசியிருப்பது முரண் பாடாக இருந்தபோதிலும், பசு, கால்நடைகள் உள்ளிட்டு விலங்குகளின் இறைச்சி உணவாக உண்ணப்பட்டு வந்த நடைமுறை பண்டைக் காலத்தில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள் மத்தியில் பொதுவான நடைமுறையாக இருந்திருப்பது தெரிய வருகிறது. சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவினர் மட்டுமே இறைச்சி உண்டு வந்ததாக மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம் சொல்லியுள்ள போதிலும், காளைகள் உள்ளிட்டு விலங்குகள் ஏராளமான எண்ணிக்கை யில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் யுதிஷ்டரின் அ°வமேத வேள்வியின்போது நடைபெற்ற விருந்தில் பல்வேறு வகைப்பட்ட இறைச்சிகள் பரிமாறப்பட்டிருந்தன. உணவு விஷயத்தில் பார்ப்பனர்கள் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்கள் என்று பெருமையடித்துக் கொண்டபோதிலும், இம்மாதிரியான விருந்து களில் இறைச்சி உணவு வகைகளை இவர்கள் உண்பதற்கு இந்தப் பெருமை குறுக்கே நிற்கவில்லை.
மகாபாரதத்தைப் போலவே, வால்மீகி இராமாயணத்திலும், வேள்விகளுக்காகவும், உணவுக்காகவும் கால்நடைகள் உள்பட விலங்குகளைக் கொன்று வந்த நடைமுறைக்கு ஏராளமான ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது. தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக தசரதன் ஒரு வேள்வி நடத்தியதாகவும், அதில் பலியிட சா°திரங்களால் அனுமதிக்கப்பட்ட விலங்குகள் ஏராளமானவற்றை (எ.கா. குதிரைகள், பாம்புகள், நீர்வாழ் உயிரினங்கள்) முனிவர்கள் கொண்டு வந்ததாகவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடங்கில் பலி தருவதற்காக பூமியைச் சுற்றி வந்த குதிரையுடன், முன்னூறு விலங்குகளையும் சேர்த்து வேள்விக் கம்பங்களில் (யுபாஷ்) கட்டி வைத்ததாக அது மேலும் குறிப்பிட்டுள்ளது. தான் நாடு கடத்தப்பட்ட செய்தியை கௌசல்யாவிடம் சொன்ன இராமன், இறைச்சியை விலக்கி வைத்துவிட்டு, தேன், கிழங்கு, பழ வகைகளை மட்டுமே சாப்பிட்டு பதினான்கு ஆண்டுகள் தான் காட்டில் வாழப் போவதாக சத்தியம் செய்து தருகிறான். உண்மையில் தொடக்கத்தில் அப்படியே நடந்தும் காட்டினான். இதனால்தான், நிஷாதர்களின் தலைவன் குகன், இறைச்சி தந்தபோது அவன் அதை மறுத்து விட்டான். உணவுக்காகவும், வேள்விகளுக்காகவும் இராமனும், இலட்சுமணனும் காட்டு விலங்குகளை வேட்டையாடியதாக இதே புராணத்தில் அடிக்கடி பல குறிப்புகளைப் பார்க்க முடிகிறது. இராமன் வேட்டையாடுவதையே பொழுது போக்காகக் கொண்டவன் என்ற படிமத்துக்கு ஆதாரமாக ஏராளமான இராமாயணக் கதைகளைக் காட்ட முடியும்.
இறைச்சி உணவு மீது சீதை பெரும் ஆர்வம் காட்டி வந்தாள் என்ற விஷயத்தை யும் இந்த நூலிலுள்ள பல பாடல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. கங்கையைத் தாண்டியபோது அரிசிச் சோறும், இறைச்சியும் கங்கையாற்றுக்கு சமைத்துத் தருவதாக சீதை உறுதி தந்தாள். தன் கணவனுடன் பத்திரமாகத் திரும்பி வந்தால், ஏராளமான மதுவைத் தருவதாக வாக்குறுதி தந்தாள். தன் கணவன் அவன் சபதத்தை நிறைவேற்றி முடித்தால் ஆயிரம் பசுக்களையும், நூறு ஜாடி மதுவையும் யமுனை ஆற்றுக்குப் படையல் தருவதாக அந்த ஆற்றைக் கடக்கும்போது சீதை வேண்டிக் கொள்கிறாள். மான் இறைச்சி மீது சீதை வைத்திருந்த விருப்பத்தின் காரணமாகவே அவள் கணவன், பொன்மான் வேடம் போட்ட மாரீசனை துரத்திச் சென்று கொல் கிறான்; அதனால் வரும் கேடுகளை உணர்ந்திருந்த போதிலும், அந்தப் புள்ளி மானைக் கொன்று அதன் இறைச்சியை எடுத்து வர அவன் தயக்கம் காட்டவில்லை.
சீதை கர்ப்பமாக இருந்தபோது அவளுக்குப் பல வகைப்பட்ட மதுவையும் இராமன் தந்ததாகவும், வேலைக்காரர்கள் அவளுக்கு இறைச்சியும், பழங்களும் தந்ததாகவும் இராமாயணத்தின் (வால்மீகி இராமாயணம்) இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீதையைப் பிரிந்திருந்த இராமன் அந்த நாட்களில் இறைச்சியையோ, தேனையோ, மதுவையோ தொடவில்லை என்று சீதையிடம் அனுமன் விவரிக்கின்ற போதிலும், சுக்ரீவனைச் சந்திக்கச் சென்ற வழியில் அந்த நாயகன் போகிற போக்கில் பறவைகளையும், மீன்களையும் கொன்றதாக கவந்தர் சொல்கிறார். பரதனுக்கு மீன், இறைச்சி, தேன் ஆகியவற்றையும், அவன் படைகளுக்கு கருவாடு, மீன் ஆகியவற்றை யும் குகன் விருந்தாகத் தருகிறான். பரதனின் படைகளை பரத்வாஜரும் நன்கு உபசரிக்கிறார்.இறைச்சியும் மதுவும் தந்து அவர்களைக் கௌரவப்படுத்துகிறார். “கொழுத்த கன்றை வெட்டிச் சமைத்து உணவு படைத்து இராமனை வரவேற்கிறார்.” இராவணனின் அரசவை விருந்தில் மான், எருமை, பன்றி, மயில், காட்டுக் கோழி, வெள்ளாடு ஆகிய விலங்குகளின் இறைச்சியும், கும்பகர்ணனின் பிரம்மாண்டமான அசைவ உணவு வகைகளும் முக்கிய அம்சங்களாக இருந்தன.
அய்ந்து விரல்கள் கொண்ட அய்ந்து வகை விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்பது தர்மசா°திரங்களின் கட்டளை என்பதை வாலி தெரிந்திருந்த போதிலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது விலங்குகளைக் கொல்ல அவன் ஒப்புக் கொள்கிறான். உண்ணத்தக்கவை என்று தர்ம சா°திரங்களால் குறிப்பிடப்பட்ட விலங்கு இறைச்சிகள் உண்ணப்பட்டு வந்ததற்கு ஏராளமான குறிப்புகளை வால்மீகியின் நூலில் பார்க்கலாம். ஆனால், இதில் நாய் இறைச்சி வெறுப்புக்குரியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறாக, இறைச்சி உண்பதை இராமாயணம் கண்டித்திருந்த போதிலும், அசைவ உணவு மரபை அது உயர்த்திப் பிடித்திருந்தது. யமுனை ஆற்றுக்கு ஆயிரம் கால்நடைகளை வெட்டிப் பலி தருவதாகக்கூட சீதை வாக்குறுதி தந்ததை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். வைணவ பக்தி இயக்கத்தின் உறுதியான ஆதரவாளரான இராமானந்தரால் (பதினான்காம் நூற்றாண்டு) எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அத்யாத்ம இராமாயணத்திலும்கூட, இறைச்சி உணவின் மீது சீதை கொண்டிருந்த விருப்பம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமான தாகவே இருக்கும்.
‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்’ – டி.என்.ஜா. எழுதிய நூலிலிருந்து
பெரியார் முழக்கம் 04112015 இதழ்