Category: அறிக்கைகள்

கருத்துரிமை – பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்று கழகம் வலியுறுத்தல்!

இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:-

பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை கடந்த 5.2.2024 ஆம் நாளன்று அனைத்து பணியாளர்களுக்கும் விடுத்துள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் நடத்தை விதிகளின் 14 (1) (2) என்ற விதிகளைக் காட்டி, இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் முன்னனுமதி பெற்றோ, பெறாமலோ நூல்கள் வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என்றெல்லாம் பல விவரங்களை அந்த சுற்றறிக்கை கோருகிறது.

ஆனால் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கும் விதிகள் தொலைக்காட்சி வானொலி விவாதங்களில் பங்கேற்பது குறித்தும்,  செய்தி ஏடுகளுக்கு, வார ஏடுகள் போன்ற பருவ வெளியீடுகளுக்கு எழுதுவது குறித்தும் உள்ள விதிகளைத்தான் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த விதிகளின்படி கூட இலக்கியம், கலை, அறிவியல், கல்வியியல் பண்பாட்டியல் போன்ற தலைப்புகளில் அந்த ஒளிபரப்பு அல்லது செய்தி ஏடுகளுக்கு எழுதுகிற கட்டுரைகள் இருக்குமாயின் அதற்கு முன் அனுமதி தேவையில்லை என்றும்  உட்பிரிவு (2) கூறுகிறது.

ஆனால், ஏற்கனவே பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணைப்பேராசிரியரும் பெரியார் அண்ணா கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குனர் பொறுப்பாகவும் விளங்கிக் கொண்டிருக்கிற முனைவர் இரா. சுப்பிரமணி அவர்கள் எழுதியிருந்த பெரியாரின் போர்க்களங்கள்,   மெக்காலே – பழமைவாத கல்வியின் பகைவன் என்ற நூல்கள் குறித்து விளக்கங்கள்  கேட்கப்பட்டு அதற்கான விளக்கங்களும் பெறப்பட்டு நிலுவையில் இருக்கிற இந்த சூழலில் மீண்டும் அவரை குறி வைத்து இதை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக நாம் கருதுகிறோம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிப்புத் துறை என்று ஒன்று கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்திருந்தும் அதன் வழியாக இதுவரை  பெரியார் குறித்த 60 பக்க நூல் ஒன்று வெளியிட்டதைத் தவிர வேறு எதையும் செய்ததில்லை.

ஆனால் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெரியார் ஆய்வு மையத்தின் தலைவர் இதழியல் துறையின் பார்வையிலான பெரியார் குறித்த ஒரு நூலை எழுதுவதும், நவீன கல்விக்கு முன்னோடியாக கருதப்படுகிற மெக்காலே குறித்து அதாவது கல்வியியல் குறித்து எழுதியதும்  தவறானது என்பதைப் போல ஏற்கனவே விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சுட்டிக் காட்டப்படும் பல்கலைக்கழக விதிகள், வானொலி தொலைக்காட்சி விவாதங்கள்,  செய்தி வார ஏடுகளில்  எழுவது குறித்து உள்ள விதிகளைச் சுட்டிக்காட்டி துறை சார்ந்த நூல்கள் கல்வியியல் சார்ந்த, பண்பாட்டு புரட்சி சார்ந்த விதிவிலக்கு அளித்திருக்கும் துறைகளில் எழுதுவதற்கும் விளக்கம் கேட்பதும், அவர் மீதான நடவடிக்கை எடுக்கத் துடிப்பதும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரும் பதிவாளரும் கொண்டிருக்கிற மதவாத சிந்தனை போக்குக்கு எதிரானவை என்ற கருத்தில் இருப்பதால்தான் என்றுதான் யூகிக்க முடிகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பதிவாளரும் கொண்டிருக்கிற இந்துத்துவ மதவாத சிந்தனை போக்குக்கு எதிரான கருத்துகள் கொண்டவற்றை எழுதுவதை குற்றமாக்கத் துடிக்கும் கருத்துரிமைக்கு எதிரான பாசிச போக்குதான் வெளிப்படுகிறது.

மேலும் புத்தூடகங்கள் பல்வேறு பரிமாணங்களை எட்டி செல்லிடப்பேசி வழியாகவும்,செயலிகள் வழியாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் கற்றல்- கற்பித்தல் நிகழ்ந்து வரும் நிலையில் சமூக ஊடகங்களில் பங்கேற்க அனுமதி பெற வேண்டும் என்பது என்ன வகையான சிந்தனை வளர்ச்சி எனத் தெரியவில்லை. பல்கலைக்கழகங்கள் என்பவை சுதந்திரமான சிந்தனைகளையும், பன்முகத் திறன்களை மாணவர்களிடையேயும், பொது தளத்திலும் உருவாக்கும் அறிவின் மையமாகும். அங்கு எழுதுவதற்கும், பேசுவதற்கும் அனுமதி பெற வேண்டும் என விதிகள் இருப்பதாகக் கூறுவது கருத்துரிமை பேச்சுரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கையாகவே கருத வேண்டி உள்ளது.

எழுதுவதும், உரையாடுவதும் தான் ஆசிரியப் பணிக்கான அடிப்படை கடமைகளாகும். அதனைத் தடுக்க முனைவது ஆபத்தான போக்காகும்.

எனவே, பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பு கடந்த 5.2.2024 அன்று வெளியிட்டிருக்கிற அந்த சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

– கொளத்தூர் மணி,

தலைவர்,

திராவிடர் விடுதலைக் கழகம்.

08.02.2024.

பெரியார் முழக்கம் 15.02.2024

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார்.

மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

கழகத் தலைவர் இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சுப்பிரமணி சேலம் பல்கலையில் பெரியார், அண்ணா, கலைஞர் இருக்கையின் தலைவராக உள்ளார். இதழியல் துறை பேராசிரியரும் கூட. தமிழ்நாடு அரசு அண்மையில் அவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெகநாதன் என்ற ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரை துணைவேந்தராக நியமித்துள்ளார். அவர் பல்கலை வளாகத்தையே ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்றிவருகிறார். ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ‘அகில இந்திய வித்தியார்த்தி பரிசத்’ அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரப் பலகை மட்டும் வளாகத்தில் மாட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைவேந்தர் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக பதிப்பு துறை என்ற ஒரு துறையும் இயங்கிவருகிறது.  2008ம் ஆண்டு பெரியார் பெயரில் இயங்கும் இந்த பல்கலையில் பெரியார் இருக்கை உருவாக்கப்பட்டது. இதுவரை 60 பக்க அளவில் பெரியார் குறித்த ஒரு சிறு நூல் மட்டுமே வெளியிடப்பட்டது. வேறு எந்த நூலும் வெளியிடப்படவில்லை. பல்கலைப் பேராசிரியர்கள் பல்கலை சார்பில் பல ஆய்வு நூல்களை  வெளியிடுவது வழக்கமானது தான். திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பெரியார் துறை தலைவராக இருந்த எஸ்.வி.ஆர் பேராசிரியர் சக்குபாய் பெரியார் குறித்த ஆய்வரங்குகளை நடத்தி ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். எம்.அய்.டி பேராசிரியர்களான எம்.எஸ்.எஸ் பாண்டியன், முனைவர் வெங்கடாசலபதி  முறையே பெரியார், பாரதி, வ.உ.சி குறித்து ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கெல்லாம் பல்கலை துணைவேந்தரிடம் முன் அனுமதி பெற தேவையில்லை. துணைவேந்தர் ஜெகநாதன், பேராசிரியர் சுப்பிரமணி உரிய அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறுகிறார். பெரியார், மெக்காலே குறித்த ஆய்வுகள், இதழியல் சார்ந்தவை, இதழியல் சார்ந்த வெளியீடுகளுக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை  என்று பல்கலை விதிகள் தெளிவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ் கொள்கை எதிரிகளாக ஆபத்தான 5 பேரில் மெட்டீரியலிஸ்ட் (பொருள்முதல்வாதம், கடவுளை மறுப்போர்) மெக்காலே ஆகியோரும் அடங்குவர். அந்தக் கண்ணோட்டத்தில் தான் துணைவேந்தர், முறைகேடாக பல்கலை விதிகளுக்கு நேர்முரணாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பெரியார் பெயரில் இயங்கும் பல்கலையில் பெரியார் இருக்கையின் தலைவராக இருக்கும் பேராசிரியர் பெரியார் பற்றிய வரலாற்றை இதழியல் கண்ணோட்டத்தில் எழுதுவதற்கு தடை போடுவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது, தமிழ்நாடு உயர்கல்வித்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத் தலைவர் கூறினார்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளுக்காக துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளார். தனக்கு இதய வலி இருப்பதாகச் சொல்லி (அதன் உண்மைத் தன்மையையும் ஒரு மருத்துவக் குழு உறுதி செய்ய வேண்டும்) மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார்.

2024 ஜனவரி 2ஆம் நாள் பல்கலைக்கழகம் விடுமுறை முடிந்து திறக்கப்பட்டு விட்டது.ஆனால் துணைவேந்தர் பதிவாளர் யாரும் இல்லாமல் எந்த முன்னெடுப்புகளும் தீவிரமாய் எடுக்க முடியாமல் நிலை தடுமாறி நிற்கிறது பல்கலைக்கழகம்.

இன்னொரு பக்கம் பிணையில் இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதாகவே நாம் அறிகிறோம்.வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள் பல்கலைக்கழகத்தில் தான் இருக்கின்றன என்ற நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது என்றோ, வழக்கின் ஆவணங்களை, சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது எனும் இயல்பான நிபந்தனைகளைப் பற்றிய அக்கறையில்லாமல் அங்கு இருக்கிற பல்வேறு பதிவேடுகள் எடுக்கப்படுவதும் வைக்கப்படுவதுமான செயல்பாடுகள் நடக்கின்றன என்றாலே சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கிறார் என்று தான்பொருள். அவ்வாறாயின் புதிய நிபந்தனைகளையாவது அறிவித்தாக வேண்டும் அல்லது உரிய காப்பு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

அதோடு பல்கலைக்கழகத்தில் எதுவும் நடைபெறாமல் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதற்கு ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்து தான் தீர வேண்டும்.

நாம் ஏற்கனவே பலமுறை துணைவேந்தர் மீது விசாரணை நடத்துகிற போது ஒரு பொறுப்புள்ள அய்.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து அவர் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் இயங்குவற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்; அப்போதுதான் அவர்கள் செய்துள்ள முறைகேடுகளை நிரூபிக்க முடியும் என்ற காரணத்தால் இந்த வேண்டுகோளை கைதுக்கு முன்னதாகவே பல வேளைகளில் நாம் வைத்திருக்கிறோம்.

இப்போது உள்ள நிலையில் மீண்டும் அதே கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி வேண்டுகிறோம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பதிவாளரும் இல்லாமல் இருக்கிற நிலையும் அவர்களுடைய முறைகேடுகளை சரியாக விசாரிப்பதற்கு ஏதுவாகவும் பல்கலைக்கழகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பில் இயங்கச் செய்வது தான் பொருத்தமாக இருக்கும் என்ற காரணத்தால் தமிழ்நாடு அரசையும் உயர் கல்வித் துறையையும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக்  கேட்டுக் கொள்கிறோம்.

கொளத்தூர் மணி,

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

02.01.2024

பெரியார் முழக்கம் 04.1.2024 இதழ்

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது : கழகத் தலைவர் அறிக்கை

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பணி நியமனம் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றாமை, விதிகளை மீறி பாரபட்சமாய் நடந்து கொள்ளுதல்,உரிமை கேட்போரை இடைநீக்கம், பணி நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் பல ஆர்ப்பாட்டங்களை பல்கலைக்கழகத்திற்கு முன் கடந்த காலங்களில் நடத்தி இருக்கிறது.

மேலும்  பெரியார் பல்கலைக் கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை விளக்கி அரசுக்கும் உயர்கல்வி துறைக்கும் பல்வேறு முறையீட்டு மனுக்களையும் அனுப்பி இருக்கிறது.

1)           அண்மையில் நடந்த உடற்கல்வி இயக்குனர், நூலகர் போன்ற பணி நியமனங்களில் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் நியமனம் செய்தது.

2)           போலியான கல்விச் சான்றிதழ்கள் என தெரிந்தும் போலி சான்றிதழ் அளித்தவர் களையே பணியில் அமர்த்தியது.

3)           துறைத்தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்காதது.

4)           துணைவேந்தர் முன்னரே முடிவு செய்தவர்களை பணி நியமனம் செய்தது

5)           இந்துத்துவ ஆதரவு பரப்புரைகளில், செயல் பாடுகளில் ஈடுபடுவதை துணைவேந்தரே ஊக்குவிப்பது,தாமே ஈடுபடுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் விவாதத்திற்கு வந்திருக்கின்றன.

இப்போது அவற்றை விசாரித்து நட வடிக்கை எடுப்பதற்காக உயர்கல்வித்துறையின் கூடுதல் செயலாளர்,இணைச் செயலாளர் ஆகியோரை  உள்ளடக்கிய விசாரணைக் குழுவை நியமித்திருக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இந்த விசாரணைக் குழு முன்னர் எழுப்பப் பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும், உரிமைக்கு குரல் கொடுத்த ஆசிரியர் சங்கப் பொறுப் பாளரை – பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ததையும் விசாரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்.

மேலும் விசாரணை முடிந்ததும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.

ஆணையத்தின் இந்த விசாரணையும் அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளும் ஆளுநரின் ஆதரவு இருக்கிறது என்ற ஆணவத்தோடு நடந்து கொள்ளும் துணை வேந்தரின் போக்குக்கும், பெரியார் பல்கலைக் கழக முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நம்புகிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

பெரியார் முழக்கம் 19012023 இதழ்


பெரியார்_சிலை_அவமதிப்பு,
#கந்த_சஷ்டி_கவசம் குறித்த சர்ச்சை குறித்து
கழகத் தலைவர் #தோழர்_கொளத்தூர்_மணி அவர்கள் 18.07.2020 அன்று நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள #பேட்டி :

“தமிழகத்தில் அண்மைக்காலங்களில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி கட்டுவது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பத்திரிக்கையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தி பேசுவது, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று கோர்ட்டை அவமதிப்பது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்வதில்லை; செய்தாலும் கைது செய்வதில்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் கந்தசஷ்டி கவசத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை படித்து வீடியோ பதிவிட்ட வரை ஆறு மாதங்கள் கழித்து தேடிப்பிடித்து கைது செய்கிறார்கள். இதன் நோக்கம்தான் என்ன? நடவடிக்கை எடுத்தால் அனைவர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்த சஷ்டியைப் படித்தவர் ஒன்றும் அதில் இல்லாததை படிக்கவில்லையே? அதிலுள்ள ஆபாச வார்த்தைகளை மதம் என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் படித்துக் காண்பித்துள்ளார்
ஒரு மாணவனிடம் பாடப்புத்தகத்தைக் கொடுத்து அதைப் படித்தால் அதைக் குற்றம் என்று சொல்வது எப்படி தவறானதோ,
அதுபோலத்தான் இதுவும்.

நான் கேட்கிறேன் இவர்கள் தமிழ்க் கடவுள் முருகனை ஸ்கந்தனாக்கி கந்தனிடம் வேண்டுவது போல ஆண்பெண் குறிகளை குறிப்பிட்டு அதனை காக்கவேண்டும்.வட்டக் குதத்தை வடிவேல் காக்க வேண்டும் என்றெல்லாம் மிக இழிவான வார்த்தைகளைச் சொல்லி கடவுளிடம் வேண்டுவதாக பாடல் எழுதி உள்ளார்கள். அதை அவர்கள் மறுக்க முடியுமா? அல்லது அப்போது நாகரிகம் வளராத காலத்தில் இருந்தவர்கள் தவறாக எழுதி விட்டார்கள். நாங்கள் இப்போது இருப்பவர்கள் அந்த ஆபாச வார்த்தையை மறுக்கிறோம் என்றாவது சொல்வார்களா?

பார்ப்பனர்கள் முருகனை கந்தன் ஆக்கினார்கள்.அவர்களில் யாராவது முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார்களா? ஏன் வைப்பதில்லை? முருகன் தமிழர் கடவுள் என்பதால்தானே? ஆனால் கந்தர் பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார்களே! அது அவர்கள் என்பதால்தானே? இப்போதும் புராணங்களில் உள்ள ஆபாசத்தை நீக்காமல் இந்து என்கிற பெயரில் திணித்து வருகிறார்களே ?
பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள் வேசி மக்கள் என்று இழிவுபடுத்தி வருகிறார்களே? அது சரியா?
நான் கேட்கிறேன் வால்மீகி ராமாயணம் தமிழ் மொழிபெயர்ப்பில் ராமன் பிறப்பு பற்றியும் அஸ்வமேத, புத்திரகாமேஷ்டி யாகம் குறித்தும் உள்ளதை பொதுமக்கள் முன்பு இவர்களால் படித்து காட்ட முடியுமா ?
அதேபோல லிங்க புராணத்தையும் இவர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் படித்துக் காட்டி அதை புனிதம் என்று சொல்ல முடியுமா?
இந்து என்று சொல்லி அனைத்து இழிவுகளையும் இந்துக்கள் தலையில் சுமத்துவதால் புரிந்தவர்களுக்குக் கோபம் வருகிறது. இது நியாயமான கோபமே ஆகும்.

தமிழக அரசும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கான அரசாக உள்ளதா அல்லது பார்ப்பன இந்துத்துவ அரசியலுக்கான அரசாக இது செயல்படுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது.”

மாவட்டந்தோறும் கீழ்க்கண்ட திட்டப்படி கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்கும், கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த கழக செயலவை தீர்மானித்தது.
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை மாவட்ட வாரியாக கழகத் தலைவர்,கழகப் பொதுச்செயலாளர், மாவட்டக் கழகக் கூட்டங்கள் வழியாக நேரில் சந்தித்து கழக அமைப்புகளை மேலும் முனைப்பாக நடத்திடவும் அமைப்புகளை மாற்றி அமைக்கவும், கீழ்க்கண்ட சுற்றுப்பயணத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு இரண்டு மாவட்டக் கூட்டங்கள் நடக்கும். முதல் கூட்டம் முற்பகல் 10 மணிக்கும், இரண்டாவது கூட்டம் பிற்பகல் 4 மணிக்கும் கீழ்க்கண்ட வரிசையில் தொடங்கும்.

ஜூலை 29 – ஈரோடு (தெற்கு ) – ஈரோடு ( வடக்கு ); ஜூலை 30 – திருப்பூர் -கோவை; ஜூலை 31 – பொள்ளாச்சி – திண்டுக்கல்;ஆகஸ்டு 5 – சேலம் ( மேற்கு ) – சேலம் ( கிழக்கு ); ஆகஸ்டு 6 – நாமக்கல் – கரூர்;ஆகஸ்டு 7 – பெரம்பலூர் – திருச்சி; ஆகஸ்டு 12 – திருவாரூர் – தஞ்சாவூர்; ஆகஸ்டு 13- நாகை – கடலூர்; ஆகஸ்டு 14 – விழுப்புரம்- திருவண்ணாமலை; ஆகஸ்டு 18 -புதுக்கோட்டை – சிவகங்கை; ஆகஸ்டு 19 – மதுரை – தேனி; ஆகஸ்டு 20 – விருதுநகர்- தூத்துக்குடி; ஆகஸ்டு 21 – திருநெல்வேலி – கன்னியாகுமரி; ஆகஸ்டு 29 – தருமபுரி- கிருட்டிணகிரி; ஆகஸ்டு 30 – வேலூர் – காஞ்சிபுரம்; ஆகஸ்டு 31 – சென்னை.

பெரியார் முழக்கம் 23072015 இதழ்