இழிவொழிப்பு மகளிர் மாநாடு – ஆதித்தமிழர் பேரவை மதுரை 08032016
“தாய் நாடு தாய்த் திருநாடு” எனப் பெண்களை உயர்த்திப்பிடித்து தம்பட்டமடிக்கும் இம்மண்ணில் தான் பெண்கள் தங்களின் தலையில் “மனிதன் கழிக்கும் மலத்தை” சுமந்து “தேசிய அவமானமாகவும்” வலம்வருகிறார்கள்.இந்திய நாட்டின் ஒட்டுமொத்த மலமள்ளும் தொழிலாளர்களில் 80 சதத்திற்கும் அதிகமானோர் பெண்கள்தான். இக்கொடுமையை சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பதுதான் மனித இனத்திற்கு “பேரவமானம்”. சக பெண்கள் இழிவைச் சுமக்க சகித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது பெண்ணியவாதிகளுக்கு பெருமையாக இருக்கின்றதா? ‘பீப்’ பாடலுக்கு எதிராக பீரிட்டுக் கிளம்பிய பெண்ணியவாதிகளின் குரல்கள் “பீயை” சுமக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் மவுனம் காப்பது பேரிழுக்கு இல்லையா? இழிவென்று தெரிந்தும் இதை ஏன் செய்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டு நழுவிக்கொள்வதுதான் முற்போக்காளர்களின் முற்போக்கான சிந்தனையா? இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா? என அலச்சியத்தோடு அணுகும் அதிகாரிகளும், காவல்துறையும் கள்ளச்சாரயம் காய்ச்சுவதையும், கஞ்சா விற்பதையும், குழந்தைத்தொழில் முறையையும் “விரும்பி செய்தால்” விட்டுவைக்குமா? தமிழ் ஈழமும், காவிரி முல்லைப் பெரியாறும், அணுஉலையும், மீத்தேனும் பொதுப் பிரச்சினைகள் என்றால் இதுமட்டும் தனிப்பிரச்சினையா? இவர்கள் செய்யவில்லை என்றால் இதை நாம்தானே செய்யவேண்டும் என்ற சுயநல சாதிய...