பாண்டியன் ராமசாமி சுற்றுப்பிரயாணம் திருநெல்வேலிக் கூட்டம்

 

ஆச்சாரியார் ராமசாமி சம்பாஷணை

தலைவர் அவர்களே! தோழர்களே!!

இயக்கத்தின் அவசியத்தைப்பற்றியும், அது செய்துள்ள வேலையைப் பற்றியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மையைப் பற்றியும் எல்லோரும் பேசிவிட்டார்கள். இனி நான் இக்கூட்டத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றியே சிறிது பேசுகிறேன்.

தலைவர் தோழர் நாயகம் அவர்கள் தெரிவித்ததுபோல் திருச்சி மீட்டிங் தீர்மானப்படி மேல்கொண்டு அதுவிஷயமாய் நடைபெற வேண்டிய காரியங்களுக்கு ஆக இங்கு வந்திருக்கிறோம்.

இயக்கத்தின் பேரால் பதவியும் பட்டமும் பெற்று வாழும் பெரியார்கள் எங்களை லட்சியம் செய்யாவிட்டாலும் இந்நாட்டு பாமர மக்களும் வாலிபர்களும் கிராம ஏழை ஜனங்களும் எங்களை மதிக்கிறார்கள். எங்கள் வேலைக்கு ஆக்கமளிக்கிறார்கள் என்பது இம்மாதிரி கூட்டங்களாலேயே விளங்குகிறது. அந்த தைரியத்தின் மீதே நாங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை சகித்துக்கொண்டு இந்த தொண்டில் ஈடுபட்டு இருக்கிறோம். திருச்சி மத்தியக் கமிட்டி தீர்மானப்படி ஜில்லாவுக்கு சுமார் 1500 ரூ. வசூலானால் போதுமானது. இது கூட செய்ய நம்மால் ஆகவில்லையானால் நம் செல்வவான்களின் யோக்கியதைக்கு வேறு ஒன்றும் உதாரணம் கூற வேண்டியதில்லை.

காந்தியாரோ, ராஜேந்திரபிரசாத்தோ, மற்றும் காங்கிரஸ் விளம்பரத்தில் எந்த ஆளோ வந்துவிட்டால் லட்சம், ஐம்பது ஆயிரம் என்று வசூலாகிவிடுகிறது. நம்மவர்களே அந்தப்பணங்களில் பெரும்பாகம் கொடுத்துவிட்டு அந்தப்பணத்தின் பயனாகவே வசவும், இழிவும், பழிப்பும் பெற்று வாழ்கிறார்கள். எதற்கு ஆக பணம் கொடுக்கின்றோம், அந்தப்பணம் என்ன ஆகின்றது என்கின்ற ஞானமே நம் செல்வவான்களுக்கு இருப்பதில்லை.

நாம் ஏதாவது ஒரு பெரிய அவசியத்துக்கு சிறு தொகை கேட்டாலும் அதற்கு என்னென்னெல்லாமோ வியாக்கியானமும் கேள்விகளும் புறப்படுகின்றன.

மத விஷயத்தில் புரோகிதர்களுக்கும் குருமார்களுக்கும் செலவு செய்வதுபோலவே பார்ப்பனர்களுக்கு காங்கிரஸ் விஷயமாகவும் முட்டாள் தனமாகச் செல்வத்தை அள்ளிக்கொடுத்து மானம் கெடுகிறார்கள்.

இந்த சிறு தொகைக்கு நானும் தோழர் பாண்டியன், நாயகம், ராமசாமி, வாலகுருவா ரெட்டியார் ஆகியவர்கள் இரண்டு தடவை இந்த ஊருக்கு வந்துவிட்டோம். வந்து எவ்வளவு கஷ்டப்பட்டோம். எங்களால் தோழர் ஈஸ்வரம்பிள்ளைவாளுக்கும் எவ்வளவு கஷ்டம்.

முன் தடவை வந்திருந்தபோது நாங்கள் பட்டபாட்டிற்கு அளவில்லை. நாங்கள் வந்த நாள் பகலில் 3 மணிக்கு சாப்பிட்டோம். பஸ்ஸில் பகல் பிரயாணத்தில் 3, 4 மணி நேரம் வெயிலில் அவஸ்தைப் பட்டோம்.

இராத்திரி பட்டினி கிடந்தோம். எங்களால் பிள்ளைவாளும் கஷ்டப் பட்டு பட்டினிகிடந்தார்.

நாங்கள் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டோம். அந்த விருந்துக்காரர் வந்து கூப்பிடுவார் கூப்பிடுவார் என்று இரவு 11 மணி வரை காத்திருந்து பிறகு நாங்களாகவே தூங்கிவிட்டோம். விருந்துக்காரர் நல்ல சமையல் செய்து வைத்துக் கொண்டு அவரும் காத்து இருந்து கோபத்துடன் சாப்பிட்டாராம். விருந்துக்காரரின் காரியக்காரரால் இந்த கதி ஏற்பட்டது.

அதுபோல் மற்றும் பல கஷ்டங்கள் அனுபவிக்கிறோம். உண்மையாகவே இந்த பிரசாரவேலை ஏற்றுக்கொள்ளாதிருந்தால் தோழர் பாண்டியன் அவர்களின் அருமைப்புதல்வன் ஏரியில் தவறி இறந்திருக்க மாட்டான். அவர் அன்று பழனிக்கு பிரசார காரியமாய் போய் விட்டதாலேயே பையனை ஒரு நண்பர் கூட்டிக்கொண்டு போக நேர்ந்ததும், காப்பாற்ற முடியாமல் போனதுமாகும். இந்த மாதிரி காரியங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இனியும் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் இந்த கஷ்டங்கள் பயனுள்ள காரியத்துக்கு பயன்பட வேண்டாமா என்பதே எனது கவலை.

இந்த ஜில்லாவுக்கு இந்த காரியத்துக்கு எத்தனை தடவை வருவது? இந்த ஜில்லாக்காரர் இந்த இயக்கத்தால் பயன் அடையவில்லையா. திருநெல்வேலி ஜில்லாவில் மாத்திரம் 2 மந்திரிகள் அதுவும் ஒரு மந்திரி 3 வருஷம் மற்றொரு மந்திரி 6 வருஷம் பதவி வகித்தாய்விட்டது. இந்த ஜில்லாவிலேயே 2 இந்து மத பரிபாலன போர்டு கமிஷனர் 800 ரூ. வீதம் 5, 5 வருஷம் அனுபவித்து ஆய்விட்டது.

இந்த ஜில்லாவில் இருந்தே ஒரு ஹைகோர்ட்டு ஜட்ஜும் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இந்த இயக்க அபிவிருத்திக்கு என்ன காரியம் செய் கிறார்கள்? ஆட்களை கண்டு பிடிப்பதே கஷ்டமான காரியமாய் இருக்கிறது.

“அவர்களுக்கு உத்தியோகமும் பணமும் வந்தால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்”? என்று ஒருவர் கேட்டார்.

உங்களுக்கு பிரயோஜனமில்லாமல் இல்லை. உதாரணமாக மாஜி மந்திரி சிவஞானம் பிள்ளைவாள் மந்திரி வேலையில் சம்பாதித்த பணம் பூராவும் எலக்ஷனில் உங்களுக்கே கொடுத்துவிட்டார்கள். மற்ற மந்திரி முதலியவர்களும் எலக்ஷன் வந்தால் தெரியும். மற்றும் இந்த ஜில்லாக்காரர்களுக்கு தஞ்சை ஜில்லாப் பார்ப்பனர்களுக்குப்போல் உத்தியோகங்கள் தாராளமாய் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் இந்த இயக்கத்தினால் அல்லாமல் வேறு என்ன? வெறும் தகுதியாலேயே ஏற்பட்டுவிட்டது என்று சொல்லிவிடமுடியுமா?

நான் இவற்றையெல்லாம் அடியோடு தப்பு என்று சொல்ல வரவில்லை. காந்தியாரின் ராமராஜ்யம் வந்தாலும் இப்படித்தான் நடக்கும். ஆனால் அது சமயம் வெறும் பார்ப்பனர்கள் பெயரை மாத்திரம் எழுதிப் போட்டு சீட்டு குலுக்கப்படும். இப்பொழுது கொஞ்சமானாலும் பார்ப்பனரல்லாதார் பெயரும் போட்டு சீட்டு குலுக்கப்படுகிறது. ஏதோ சில பெயர்களுக்கு மாத்திரம் பிரைஸ் விழுந்தாலும் இது திருநெல்வேலி ஜில்லாவுக்கே விழுகிறது என்று சொல்லுகிறேன்.

இன்றைய அரசியல் தத்துவமே பிரச்சினையே இந்தப்பதவிப் போட்டியும் உத்தியோக வேட்டையுமேயாக இருப்பதால் பார்ப்பனர்களாகிய அதாவது நம் சமூக எதிரிகள் நமக்கு பலவித தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்து வருகிறார்கள்.

அதில் இருந்தும் மீள வேண்டாமா? அதற்குப் பதில் பிரசாரம் செய்து நம்மீது சுமத்தப்படும் பழிகளில் இருந்து நாம் மீள வேண்டாமா? போட்டி இருந்துதான் தீரும்; போரும் இருந்துதான் தீரும். தனி உடமை உலகில் இது இயற்கையேயாகும். ஆனால் அதை சமாளிக்க நாம் அவ்வப்போது முயற்சிக்காவிடில் நம் பின் சந்ததிகளின் கதி அதோகதி ஆகிவிடும். ஏன் தீண்டப்படாதவர்களாகவே ஆகிவிடும். பிறகு இப்போது மதத்தில் பார்ப்பனர் கால் கழுவின தண்ணீரை மோட்சத்துக்காக அருந்துவது போலவே அரசியலிலும் உத்தியோகத்திலும் பார்ப்பனன் கால் கழுவின தண்ணீரை சாப்பிடவேண்டியது மாத்திரம் அல்லாமல் இன்னமும் ஈனமான காரியம் கூட செய்து வாழ வேண்டி வந்துவிடும்.

இன்றைய நிலையில் மந்திரிகளை குற்றம் சொல்வதிலேயே நம் காரியம் ஆகிவிடாது. மந்திரிகள் நிலைமையும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குப் போதுமான பலம் இல்லை. பொறாமையாலும் சுயநலத்தாலும் அவர்களை கவிழ்க்கப் பார்க்கிறவர்களுக்கு பலம் அதிகமாய் இருக்கிறது. ஆகவே அவர்கள் அந்த ஸ்தானத்தை பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் காலி செய்து கொடுக்காமல் பார்த்துக்கொள்ளும் வேலையே சரியாய் இருக்கிறது. அவர்கள் ராஜிநாமா கொடுக்காமல் இருப்பதையே நாம் பாராட்ட வேண்டும். துணிந்து ராஜிநாமா கொடுத்து விட்டால் நம் கதி என்ன ஆவது, அந்த ஸ்தானத்துக்கு யார் வருவார்கள் என்பதை யோசித்து பாருங்கள்.

இம் மாத முதலில் திருவாங்கூர் தீயர் மகாநாட்டின் போது ஒரு தீர்மானம் வந்தது. அதாவது ஹைகோர்ட் ஜட்ஜி பதவியும் ஜில்லா ஜட்ஜி பதவியும் ஈழவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் மகாராஜாவை கேட்டுக் கொள்வதாக தீர்மானம் பிரேரேபிக்கப்பட்டது. உடனே ஒரு ஈழவ வாலிபன் அதை எதிர்த்தான். காரணம் கூறும்படி தலைவர் கேட்டார். அதற்கு அந்த வாலிபன்,

“உத்தியோகம் வருவதாய் இருந்தால் நம்மில் முக்கியஸ்தர்களுக்குத்தான் அவ்வுத்தியோகம் வரும், அது கிடைத்தவுடன் அவ்வுத்தியோகஸ்தர் அந்த உத்தியோகத்தை காப்பாற்றிக்கொள்ளவும் நல்ல பிள்ளை என்று எதிரிகளிடம் பேர் எடுக்கவும் நம்மை காட்டிக் கொடுத்து நம் சமூக துரோகியாக கொஞ்சமும் பயப்படமாட்டார். அப்படியே இதுவரை சிலர் ஆகியும் விட்டார்கள்”

என்று சொன்னான். சபையோருக்கும் அது சரி என்றும் தோன்றிவிட்டது. பிறகு மகாநாட்டுத் தலைவர் அய்யப்பன் அவர்கள் அதற்கு மறுமொழியாக நம் பிறவி எதிரிகள் சமூகத்தில் உள்ள நம் சமூக அபி மானியை விட நமது சமூகத்தில் உள்ள சமூக துரோகியே மேலானவர், ஏனென்றால் எப்படியாவது அந்த ஒன்று இரண்டு ஸ்தானங்களிலாவது நம் எதிரிகள் இல்லாமல் செய்யக்கூடுமானால் அதுவே வெற்றியென்று சொன்னார். அதுபோல் நமக்கு நன்மை செய்யாவிட்டாலும் கெடுதி செய்கிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்கவாவது இவர்கள் மந்திரிகளாய் இருப்பது நமக்கு நன்மையாகும்.

தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி ஏதோ ஒரு சுயநலப் பார்ப்பனன் பேச்சைக் கேட்டுக்கொண்டு சட்ட மந்திரி பதவியை ராஜிநாமா செய்தார். பிறகு அவர் கதி என்ன ஆயிற்று? தான் ராஜிநாமா செய்தது தவறு என்று அவரே நினைத்து நினைத்து அழுதார். சங்கராச்சாரிகளும் அவரை ராஜிநாமா கொடுத்ததற்காக வைதார்கள். காங்கிரஸ் தலைவர்களும் “நீர் ராஜிநாமா கொடுத்த காரணமே தென்னாட்டில் காங்கிரஸ் இவ்வளவு ஈன ஸ்திதிக்கு வந்து பார்ப்பனரல்லாதார்களை இத்தனை பேர்களை காங்கிரசில் சேர்க்க வேண்டியதாய் விட்டது” என்று வருத்தம் தெரிவித்துக் கொண்டார்கள். தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு கீழ் நோக்க அது ஒரு டர்னிங் பாயின்ட் ஆகிவிட்டது.

ஆதலால் சத்தியமூர்த்தி போன்றவர்கள் மந்திரியாவதை விட அவர் மந்திரித்துவத்தின் கீழ் நாம் பிரஜைகளாய் இருந்து வாழும்படியான அவமானத்தைவிட இன்று உள்ள மந்திரிகள் எவ்வளவோ மேலானவர்கள் என்பதை நமது வாலிபர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வெறும் வீரம் ஒன்றுக்குமுதவாது. நமக்கு எதிர் பிரசாரத்துக்கு எவ்வித சாதனமும் இல்லை. பத்திரிகை இல்லை. நம் வாலிபர்கள் மனதில் நம் கட்சியைப் பற்றி நம்பிக்கை உண்டாக நாம் எவ்வித வேலையும் செய்யவில்லை. இந்தக் காரணங்களே நம் கட்சியில் கொள்கைப் பற்றுள்ளவர்கள் எல்லாம் எதிர்க் கட்சிக்குப் போகவேண்டி ஏற்பட்டுவிட்டது. இனியும் நாம் அப்படியே இருந்தால் அனேகர் போய்விடுவார்கள். கொள்கை அபிப்பிராயத்தால் நம் கட்சியை விட்டு இதுவரை ஒரு குஞ்சுகூட எதிர்க்கட்சிக்கு போகவில்லை. நம் கட்சியில் இருந்தால் பதவி கிடைக்காது என்கின்ற பயத்தாலேயே அனேகர் கட்சியை விடவும் எதிரிகளாகிய காங்கிரஸ்காரர்களிடம் தஞ்சம் புகவும் செய்கிறார்கள். உதாரணமாக தோழர்கள் தேவர், குமாரசாமி முதலியார் ஆகியவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு கொள்கை வித்தியாசம் என்ன அழுகின்றது, இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தால் இந்தப் பதவி கிடைத்து இருக்குமா? கட்சி மாறிவிட்டாலும் நம் கொள்கைக்கு சிறிதாவது விரோதமாய் இருக்கிறார்களா?

ஆதலால் நம் கட்சிக்கு பலமும் செல்வாக்கும் ஏற்படும்படி செய்தால் ஒருவரும் கட்சியை விட்டு போகமாட்டார்கள். எல்லோரும் திரும்பி ஓடிவந்து விடுவார்கள். பார்ப்பனர்கள் கூட வந்து கெஞ்சுவார்கள். ஆதலால் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு ஆக நாங்கள் ஜில்லா ஒன்று இப்போது 1500 ரூபாய்க்குள்ளாகத்தான் உத்தேச செலவு திட்டம் போட்டிருக்கிறோம். இதில் 1000 ரூபாயை 12 மாத பிரசாரத்துக்கும் 500 ரூபாயை ஆபீசு செலவுக்கும் 12 மாதம் பத்திரிகை நடத்தும் செலவுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இதுகூட செய்ய நாம் தயாராய் இருக்கவில்லையானால் ஒரு தடவை நமது கட்சியை மூழ்கிப்போக விட்டுவிட வேண்டியதுதான். ஆனால் நம் மனம் சம்மதிக்காததினாலேயே இவ்வளவு தூரம் கஷ்டப்படு கிறோம். இதை நீங்கள் உணர வேண்டும்.

நாம் காங்கிரசுக்காரரிடம் வர்மமோ, துவேஷமோ வைத்து அவர்களை எதிர்க்கவில்லை. நாம் காங்கிரசுக்காரரை ஏன் நம் எதிரிகளாய் பாவிக்கின்றோம்? நம்முடைய லட்சியத்தை எதிர்ப்பதே அவர்களுடைய வேலையாய் இருப்பதால்தான். இப்போது நம் லட்சியம் 2. அதாவது ஒன்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். இரண்டு சமூக சமத்துவ சீர்திருத்தம். இந்த இரண்டுக்கும் காங்கிரஸ் அனுகூலமாயிருந்தால் அரசியல் சீர்திருத்தத்தில் அவர்கள் காட்டும் பக்கத்தில் படித்துப் பார்க்காமலே கையெழுத்துப்போடத் தயாராயிருக்கிறோம். வெறும் காகிதத்தில் வேண்டுமானாலும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கத் தயார். அரசாங்கத்தை எதிர்ப்பதில் நாம் கோழைகள் அல்ல. பார்ப்பனர்களைவிட ஒருபடி முன்னுக்கு நிற்போம். ஆனால் எதற்காக எதிர்க்கிறோம் என்பது விளங்க வேண்டும். பார்ப்பான் பிழைப்பதற்கு நாம் அரசாங்கத்தை எதிர்ப்பதா? சதா சர்வகாலம் அதனுடன் (காங்கிரசுடன்) போராடிக்கொண்டிருப்பதிலேயே நம் வாழ்நாள் கழிவது எனக்கு சலிப்பாகத் தான் இருக்கிறது.

ஒரு கேள்வி: அப்படியானால் நீங்கள் ஏன் காங்கிரசில் வந்து சேரக் கூடாது? (என்று தோழர் பழனியாண்டி முதலியார் கேட்டார்)

பதில்: காங்கிரசில் சேரக்கூடாது என்கின்ற விரதம் இல்லை. மகமதியர்களுக்குக் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொடுத்து ராஜி செய்து கொண்டதுபோல் மற்ற சமூகத்துக்கும் அரசியலில் பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் சமூக வேறுபாடுகளை அழித்துச் சமத்துவம் ஏற்படுத்துவ தாகவும் ஒப்புக்கொண்டால் வந்து சேரத் தயாராயிருக்கிறோம். இதை நான் 12 வருஷ காலமாகச் சொல்லிவருகிறேன். இதை ஆக்ஷேபிக்க ஆக்ஷேபிக்க எதிர்ப்பும், துவேஷமும் அதிகமாய்தான் வளரும். அதை அடக்கிவிட இனி யாராலும் முடியாது. இதற்காகப் பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் கடிதம் எழுதினேன்.

கேள்வி: தோழர் ராஜகோபாலாச்சாரியுடன் நீங்கள் குற்றாலத்தில் பேசினீர்களாமே. என்ன பேசினீர்கள்?

பதில்: இங்கு எடுத்துச் சொல்லும்படியாக ஒன்றும் விசேஷப் பேச்சு கிடையாது. குற்றாலத்தில் என்னை ஒரு அவசரத்தில் சந்தித்தார். ஒருநாள் வருவதுதானே என்றார். ஆகட்டும் வருகிறேன் என்றேன். அந்தப்படி ஒருநாள் போனேன். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அநேக விஷயங்களில் எங்களுக்குள் அபிப்பிராய பேதமிருப்பதாகத் தெரிய வில்லை. அவ்வளவுதான்.

கேள்வி: முடிவு என்ன?

பதில்: முடிவு இன்னது என்று விளக்குவதற்கு ஒன்றும் இல்லை.

கேள்வி: காங்கிரசு தான் பிரதிநிதித்துவ சபை. அதனால் தான் நீங்கள் விரும்புவது கைகூடும். என்றைக்கு ஆனாலும் நீங்கள் ஒரு நாளைக்கு காங்கிரசில் வந்து சேரத்தான் போகிறீர்கள்.

பதில்: அந்நிலை ஏற்பட்டால் நான் சந்தோஷப்படுவேன். காங்கிரஸ் அதற்கு தகுதியாகிவிட்டால் நமது இயக்கம் என்று தனியாய் இருக்க வேண்டிய அவசியம் கூட இருக்காது. ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேரலாம் என்கின்ற தீர்மானம் கோயமுத்தூரில் செய்தது இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் அந்த நிலைக்கு வரவேண்டுமே.

கேள்வி: நீங்கள் எல்லோரும் வந்து சேர்ந்து அந்தப்படி செய்யுங்களேன்.

பதில்: நான் முயற்சித்தாய்விட்டது, முயற்சிப்பவர்களை நான் ஆக்ஷேபிக்கவில்லை. இந்த நிபந்தனைகளை காங்கிரஸ் பார்ப்பன தலைவர்கள் ஒப்புக்கொண்டால் ஒழிய முடியாது.

இவ்விஷயமாய் மற்றும் தோழர்கள் பி. வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்திர முதலியார், வி.ஒ. சிதம்பரம் பிள்ளை ஆகியவர்களுக்கு எழுதினேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

சமீபத்தில் பார்ப்பனரல்லாதார் எல்லோரும் கட்சிபேத மன்னியில் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வந்து பிறகு தோழர் ராஜகோபாலாச்சாரியாருடன் கலக்கலாம்.

இந்த கமிட்டி சம்மந்தமான வேலைகள் பூர்த்தியான பிறகு எல்லோரையும் ஒன்று சேர்க்க எங்களாலான முயற்சி செய்ய எண்ணி இருக்கிறோம்.

பதவியே பிரதானம் என்று கருதுகிறவர்கள் நம்முடன் இல்லா விட்டாலும் பொது நன்மையை உத்தேசித்து பொது வாழ்வில் இருக்கிற மற்றவர்கள் ஏன் ஒன்று கூடக்கூடாது?

நிற்க, இப்பொழுது நமக்கு பணம் மாத்திரமே பிரதானமல்ல. ஆங்காங் குள்ள வாலிபர்களுக்குப் புதிய உணர்ச்சி உண்டாக வேண்டும். தைரியமாய் தியாகபுத்தியுள்ள பலர் கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கத் துணிந்து பிரசாரத்தில் இறங்கவேண்டும். இந்த பிரசாரத்தில் சுயமரியாதை இயக்க பிரசார கொள்கைகளையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கட்சிப்பெயர் சிலருக்கு பிடிக்கவில்லை என்றார்கள். அதைப் பற்றிக் கவலையில்லை. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது தப்பல்ல. ஜஸ்டிஸ் என்பது பத்திரிகை பெயரே ஒழிய வேறில்லை.

காங்கிரசுக்காரருக்குள் பார்ப்பனர்களுக்குள் இவ்வித அபிப்பிராய பேதம் கிடையாது. எந்தப் பெயர் இருந்தாலும் “தலைவர் சொன்னால் சரி” என்று ஒப்புக்கொள்ளுவார்கள். அவர்களுக்குள் கட்சி அபிப்பிராய பேதமும் இல்லை. காங்கிரசை பார்ப்பனர் இயக்கம் என்கின்ற ஒரே கருத்து மீது எல்லோரும் ஒன்று சேர்ந்து கொள்ளுகிறார்கள்.

காங்கிரசுக்காரர்கள் சமதர்மம் என்கிறார்கள் சீர்திருத்தத்தை உடைக்க வேண்டும் என்கிறார்கள், பிரிட்டிஷ் சம்மந்தத்தை ஒழித்துவிட வேண்டும் என்கிறார்கள்.

இந்த மூன்றுக்கும் நேர் விரோதி என்று சொல்லி பிரிட்டிஷின் பேரில் கவிபாடி பட்டம், பதவி, பணம் சம்பாதித்த சீனிவாச சாஸ்திரியார் காங்கிரசை ஆதரிக்கிறார், காங்கிரசுக்கு வக்காலத்து பேசுகிறார், பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தைப் பற்றி விஷமப்பிரசாரம் செய்கிறார் என்றால் மற்ற பார்ப்பனர்களைப்பற்றி பேசவேண்டுமா?

ஆதலால் நம்மவர்களுக்கு அந்த புத்தி வேண்டும். பதவி மோக முள்ளவர்களுக்கு நல்ல புத்தி வராதுதான் என்றாலும் பதவியைப்பற்றி லட்சியமில்லாதவர்கள் இதைக் கவனித்துத் தங்கள் பின் சந்ததிகளின் நன்மையை உத்தேசித்து இந்த இயக்கத்துக்கு தங்களாலானதைச் செய்யுங்கள்.

பதவி ஆள்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். இன்று 100, 200 கொடுத்து பிரசாரத்துக்கு உதவி செய்யத் தவறினால் நாளைத் தேர்தல்களில் 1000, 10000 அதிகமாய் செலவு செய்ய வேண்டிவரும் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

குறிப்பு: 31.05.1936 ஆம் நாள் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 07.06.1936

You may also like...