வக்கீலும் வட்டிக்கடைக்காரனும் பொதுநல சேவைக்கு லாயக்கானவர்களா?

 

இந்திய நாட்டில் பொதுநல சேவை, ஜனப் பிரதிநிதித்துவம் என்பவை எல்லாம் 100க்கு 99 பாகம் வக்கீல் தொழில் செய்கின்றவர்களிடமும் பண லேவாதேவிக்காரர்களிடமும் தான் இருந்து வருகின்றன.

வக்கீல்கள் என்பவர்கள் தம் தொழிலை நாணையம் ஒழுக்கம் என்பவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு எப்படி நடந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்கின்ற முறையையே முதலாக வைத்து வாழ்க்கை நடத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தொழிலில் வெற்றி பெறுவதற்கும், விர்த்தி அடைவதற்கும் ஆகவே இவர்கள் பொதுநல சேவை என்கின்ற வேஷத்தை கையாள வேண்டியவர்களாகிறார்கள். இவர்களில் யாருக்காவது தற்செயலாக வக்கீல் தொழிலில் கிடைக்கும் ஊதியத்தைவிட இந்தப் பொதுநல சேவை வேஷத்திலேயே முழு நேரத்தையும் செலவழிப்பதின் மூலம் அதிக ஆதாயம் கிடைப்பதாய் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் வக்கீல் தொழிலை விட்டு விட்டு “”பொதுநல சேவைக்காரர்களாகவே” ஆகி விடுகிறார்கள்.

ஆன போதிலும் இவர்களது வக்கீல் தொழிலுக்காக தங்களை தகுதியாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்ட யோக்கியதைகள் இவர்கள் பொதுநல சேவை வேஷம் போட்டுக் கொண்ட போதும் இவர்கள் கூடவே இருந்து வருகின்றனவே ஒழிய இவர்களை விட்டு விலகுவதற்கு அவசியம் ஏற்படுவதே இல்லை. ஏனெனில் நம் நாட்டுப் பொதுநல சேவைகள் என்பவை பெரிதும் அம்மாதிரி குணங்களையே அஸ்திவாரமாகக் கொண்டதும், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைக்காகவே ஏற்படுத்திக் கொண்டதுமாகும்.

ஒரு கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படி ஜீவகாருண்யம் என்பது அதனுடைய உண்மையான அர்த்தத்தில் இருக்க முடியாமல் ஜீவ வதை செய்து வாழவேண்டியவனாகிறானோ, அப்படிப் போலத்தான் ஒரு வக்கீல் வேலையில் இருப்பவனுக்கு பொது நன்மை என்கின்ற குணம் உண்மையான அருத்தத்தில் இருக்க முடியாமல் பொது ஜனங்களை இம்சித்து துன்புறுத்துவதின் மூலமே அவன் வாழ வேண்டியவனாகின்றான்.

அதே மாதிரியாகவே வட்டிக் கடைக்காரன், அல்லது லேவாதேவிக்காரன் என்பவனும் அன்னியர்களுடைய சௌகரியத்தை அறிவது, அல்லது அத் தொழிலில் ஈவு இரக்கத்தை உபயோகிப்பது என்பதில்லாமல் எதிரியின் அவசரத்தையும், நிலைமையும் அறிந்து அவனிடமிருந்து எவ்வளவு தூரம் சுரண்டலாமோ அவ்வளவையும் வன் நெஞ்சுடன் கவருவதே தொழில் முறையாகவும் அந்த குணத்தையே கை முதலாகவும் வைத்து தொழில் நடத்த வேண்டியவனாகின்றான். தனியாக வட்டித் தொழிலே செய்கின்றவர்கள் மாத்திரமல்லாமல் லேவாதேவியின் மூலம் செல்வத்தைப் பெருக்கும் குணம் கொண்டவர்களிலும் பெரிதும் இக் கூட்டத்தில் சேர்ந்தவர்களேயாவார்கள்.

இந்த இரு கூட்டத்தாராலேயேதான் எல்லாச் செல்வமும் ஜன சமூகத்தினிடத்தில் சமமாகப் பிரிந்திருக்க வேண்டிய தன்மை மாறி சிலரிடமே பெருகும்படியாகவும் அதிலும் வக்கீல் தொழில்காரனுக்கும் வட்டி தொழில்காரனுக்குமே போய்ச் சேரும்படியாகவும் ஆகி விடுகின்றது.

இவர்களாலேயே தான் ஜன சமூகத்தில் அனேகம் பேர் பாப்பர்களாகவும், ஓட்டாண்டிகளாகவும் ஆகி பாடுபட்டுச் சம்பாதிக்கவும் யோக்கியதை இல்லாமல் அகத்திலேயே மடிந்து போகிறார்கள்.

ஆகவே இவ்விரு தொழில்காரர்கள் பொதுநல சேவையில் அமரும் படியான தன்மை கொண்ட அரசியலும் பிரதிநிதித்துவ ஸ்தாபனங்களும் ஒருநாளும் யோக்கியமானதாகவோ, உண்மையானதாகவோ இருக்க முடியவே முடியாது. ஏனெனில் ஈவு இரக்கம் நீதி நாணையம் ஒழுக்கம் ஆகிய நாணையங்கள் என்பவைகள் கண்டிப்பாய் ஒத்துக் கொள்ள முடியாததான மனப்பான்மையைக் கொண்டவர்களால் செய்யப்படும் சேவை எப்படி மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க முடியும்?

உண்மையிலேயே மக்களை ஒரு யோக்கியமான அதாவது பிரஜைகளின் நன்மையையும் பத்திரத்தையும் கோரின ஒரு ஆட்சி ஒன்று உலகில் இருக்கின்றது என்று சொல்லப்படுமானால் அவ்வாட்சியானது மனித சமூகத்தை வக்கீல் கூட்டத்தாரிடமிருந்தும் வட்டி சம்பாதிக்கும் கூட்டத்தாரிடமிருந்து விலகிக் காப்பாற்றும் ஆட்சியாய் இருக்க வேண்டும். அந்த ஆட்சிதான் சரியான ஆட்சியாகும். அப்படிப்பட்ட அரசனைத்தான் காவலன் என்று சொல்லத் தகும்.

அப்படிக்கு இல்லாமல் நம் நாட்டு ஆட்சி மாத்திரமல்லாமல் மற்றும் சில ஆட்சிகளும் மக்கள் வக்கீல்களாலும் வட்டிக்காரர்களாலும் தொல்லை அடைய தாராளமாய் வழிவிடப்பட்டிருக்கின்றன.

ஆட்சி நிர்வாகங்களை கையாளும் யோக்கியதையும் அப்படிப் பட்டவர்கள் கைக்கே போகும்படியாய் இருந்தால் அதை எப்படி ராஜரீகம் என்று சொல்ல முடியும்.

மற்றொரு தொல்லை

மனித சமூகத்துக்கு இந்த இரண்டு தொல்லைகள் மாத்திரம் அல்லாமல் மற்றொரு மூன்றாவது தொல்லை என்னவென்றால் ஏர் உழுதல் பாவம் என்ற அதாவது சரீரத்தினால் பாடுபடுவது பாவம் என்ற கொள்கை உடைய ஒரு சமூகத்தார் பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றெல்லோரையும்விட மேலான பிறவிக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு உயர்நிலையிலேயே இருந்து வாழ வேண்டும் என்கின்ற கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் பொதுநல சேவைக்காரர்களாகவும், ஜனப் பிரதிநிதிகளாகவும் ஆட்சி நிர்வாகத்தை கையாளுகிறவர்களாகவும் இருக்கக்கூடிய ஆட்சியில் இருக்கும் பிரஜைகளை எப்படி நல்லாட்சியில் இருப்பதாக சொல்ல முடியும்? அவர்கள் எப்படி முன்னுக்கு வர முடியும் அல்லது சுகமாக இருக்க முடியும்?

ஒரு அரசன் எவ்வளவு வரி வாங்கின போதிலும் சரி, வரியினால் எந்தக் குடியும் கெட்டுப் போகாது.

ஆனால் அந்த வரியையும், மக்கள் உழைப்பின் பயனையும் வக்கீல், வட்டிக் கடைக்காரன், பார்ப்பான் ஆகிய இந்த மூன்று கூட்டத்தாரே அனுபவிக்கும்படியான ஆட்சி முறைதான் மக்களுக்கு க்ஷயரோகம் போன்றது என்று சொல்ல வேண்டியிருக்கின்றது.

நீதி இலாக்கா யந்திரத்தை நல்லபடியாகத் திருத்தி அமைக்கும் பட்சத்தில் நல்ல நீதி பெறுவதற்கு இந்த மாதிரியான வக்கீல்கள் இருக்க வேண்டி ஏற்படுமா என்று கேட்கின்றோம். பேதி, அம்மை, விஷக் காய்ச்சல், பிளேக்கு முதலிய விஷ நோய்கள் ஒரு காலத்தில் வந்து ஏதோ சில ஜீவன்களை கொள்ளை கொண்டுவிட்டு அடியோடு மறைந்து போகின்றன. ஆனால் இன்றைய வக்கீல் கூட்டமும், வட்டிக் கடைக் கூட்டமும், பார்ப்பனீயக் கூட்டமும் மனித சமூகத்துக்கு நிலையான விஷ நோய்களாய் இருந்து கொண்டு மக்களை உயிருடன் வதைத்து துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

இக் கூட்டங்கள் இல்லாமல் இருக்குமானால் அரசனுக்கும் எவ்வித கவலையும், தொல்லையும் இருக்க முடியாது என்பதோடு ஜனசமூகத்துக்கு இதைவிட சுகமும், கவலையற்றதுமான நிலை வேறொன்றும் இருக்க முடியாது.

மக்களுக்கு சுயராஜ்யம் அதாவது சுதந்திரமும், சுயமரியாதையும் கொண்ட வாழ்க்கை நிலை வேண்டுமானால், இக் கூட்டத்தாருக்கும், மனித சமூகத்துக்கும் சம்பந்தமில்லாமலும் இக் கூட்டத்தார் அரசியல் நிர்வாகஸ்தர் களாகவோ ஜனப் பிரதிநிதிகளாகவோ இல்லாமலும் இருக்கும்படியான ஆட்சி முறை இருத்தலேயாகும்.

ஒரு நாட்டின் நாணய நிலையும், ஒழுக்க நிலையும், ரட்சிப்பு நிலையும் அடியோடு பாழடைந்து போய்விட்டது என்பதற்கு அறிகுறி என்னவென்றால் அந்நாட்டில் வக்கீல்களும் வட்டிப் பிழைப்புக்காரர்களும் பார்ப்பனர்களும் மதிக்கப்படுகின்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதேயாகும்.

இந்த உண்மையை ஜனசமூகம் அறியுமானால் அந்த நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்பது சிறந்து விளங்கவே விளங்காது. ஆனால் தங்களுக்குள்ளாகவே ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் கொள்ளை கொள்ளும்  கொடுமைப்படுத்தும்  முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கிளர்ச்சி தான் நடைபெறும்.

பாமர ஜனங்கள் பெரிதும்  மதத்தின் பேரால் பகுத்தறிவு அற்றவர் களாகவும், சமூகத்தின் பேரால் சுயமரியாதை அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுவிட்டதால் வாழ்க்கை நிலையில் கஷ்டமும் இழிவும் உணரப்படாமலும் ஒருவாறு உணரப்பட்டாலும் அதை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்கு மார்க்கமும், முயற்சிகளும் அற்றவர்களாயுமிருக்கிறார்கள்.

எந்த அரசாங்கமானது தனது பொருப்புகளை மக்கள் மீதோ, மக்கள் பிரதிநிதிகள் மீதோ போட முனைந்து நிற்கின்றதோ அந்த அரசாங்க மெல்லாம் தனது பொருப்பிலிருந்து தப்பித்துக் கொண்டதோடு தனது கடமையிலிருந்தும் நழுவிக் கொண்ட குற்றத்துக்கு பாத்தியப் படத்தக்க அரசாங்கமேயாகும்.

ஏனெனில் ஒரு அரசாங்கம் உண்மையாகவே ஆட்சி முறையோ ஆட்சி நிர்வாகத்தையோ  உண்மையில் ஜனங்கள் பொருப்புக்கு விட்டு விட்டதாய் இருந்தால் அது வக்கீல் கைக்கும், வட்டிக்காரன் கைக்கும், பார்ப்பான் கைக்கும் வந்து சேரும்படியானதாக இருக்க முடியுமா? என்று யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்காமல் போகாது?

இந்த மூன்று கூட்டத்தினரும் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு விரோதிகள் என்பதும் பாடுபடும் மக்களே ஜன சமூகத்தில் 100க்கு 90 பேர்களாய் இருக்கும் பிரஜைகள் என்பதும் எந்த அரசாங்கமாவது உணர்ந்திருக்காது என்று நாம் நம்ப முடியுமா? ஆதலால் அரசாங்கமானது, ஜனங்களின் ரட்சிப்புக்கு தானே நேரிட்ட ஜவாப்தாரியாய் இருப்பதாய் இருந்தால் இருக்கட்டும்; அல்லாமல் அதிலிருந்து நழுவிக் கொள்ள ஆசைப்படுவதாயிருந்தால் மேற்கண்ட மூன்று கூட்டத்தார் ஜனப்பிரதிநிதி களாகவோ, நிர்வாகஸ்தர்களாகவோ வர முடியாத நிலையில் தாங்கள் பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்ளட்டும் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  21.04.1935

You may also like...